Wednesday, September 6, 2023

ஆன்லைனில் செய்திகள்....!

ஆன்லைனில் செய்திகளைப் படிக்காமல்  பார்க்க மட்டுமே விரும்பும் இந்தியர்கள்....!

வேகமான நவீன விஞ்ஞான உலகில் இப்போது எல்லாமே கைவிரல் நுனிகளில் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் செய்தித்தாள்களை நாள்தோறும் விரும்பி படித்து அதன்மூலம், நாட்டு நடப்பு, உலக நடப்பு உள்ளிட்ட செய்திகளை அறிந்துகொண்டு மக்கள் தங்களது அறிவை வளர்த்துக் கொண்டனர். செய்தித்தாள்கள், நூல்கள் வசிப்பது ஓர் அலாதியான அனுபவமாக இருந்து வந்தது. நூல்களை வசிப்பதன் மூலம் மனதில் ஒருவித அமைதி ஏற்பட்டதுடன், அறிவு ஞானமும் வளர்ச்சி அடைந்தது. 

கணினி காலத்தின் மாற்றம்:

விஞ்ஞானம், வளர வளர நவீன கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, மனித சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு கணினி என கூறலாம். கணினியுடன் தற்போது, செல்போன்களும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. உலகில் உள்ள ஏழை, பணக்காரன் என பாகுப்பாடு இல்லாமல் அனைவரின் கைகளிலும் செல்போன் இருந்து வருகிறது. கணினி மற்றும் செல்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால்,  அதன் விற்பனை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

கணினி மற்றும் செல்பேசிகளில், நாட்டு நடப்புகள், உலக நடப்புகள் என அனைத்து தகவல்களும் ஆன்லைன்மூலம் கிடைத்து விடுகின்றன. இதனால், செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் நூல்கள் தொடர்பான எல்லா தகவல்களும் கணினி மற்றும் செல்பேசிகளில் மக்கள் அறிந்துகொள்ளும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக, செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களின் விற்பனை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் நூல்களை வாசிப்பத்தில் ஆர்வம், மகிழ்ச்சியும் கொண்டவர்கள் மட்டுமே, அதனை காசு கொடுத்து வாங்கி படிக்கின்றனர். இவர்களில் கூட சிலர், இணையதளம் மற்றும் செல்பேசிகள் மூலமாக செய்திகளை உடனனுக்கு உடன் அறிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.  இதனால், செய்தி நிறுவனங்களும் கூட, இணையதளங்களில் தங்களது கடைகளை திறந்து விற்பனையை தொடங்கியுள்ளன. வாசகர்களிடம் இருந்து சந்தா வசூலித்து செய்தித்தாள்களை விற்பனை செய்து வருகின்றன. 

இணையதள செய்தி குறித்த ஆய்வு:


இத்தகையை சூழ்நிலையில், இணையதள செய்திகள் குறித்தும் அதை பயன்படுத்துவர்கள் குறித்தும் அண்மையில் உலகம் முழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக ராய்டர்ஸ் நிறுவனம், டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட்-2023 என்ற பெயரில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இணையதளம் மூலம் செய்திகளை எப்படி அறிந்துகொள்கிறார்கள். அதை எப்படி கையாள்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்  என பல சுவையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 80 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் செய்திகளை படிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். செய்தி நிறுவனங்களின் இணையதள முகவரிகளில் கிடைக்கும் தகவல்கள், விளம்பரங்களை இந்த நாட்டு மக்கள் விரும்பி அறிந்துகொள்கின்றனர். இதேபோன்று வளர்ச்சி அடைந்த சில நாடுகளில், ஆன்லைன் மூலம் செய்திகளை வாசிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் வளர்ச்சி அடையும் வகையில் இருந்து வருகிறது. 

இந்தியர்களின் நிலை:

நவீன கால விஞ்ஞான மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவிலும், செய்தி நிறுவனங்கள் தங்களுடைய செய்தித்தாள்களை ஆன்லைன் மூலம் வெளியிட்டு வருகின்றன. இப்படி ஆன்லைன் மூலம் வெளியிடப்படும் செய்திகளை இந்தியர்களில் எவ்வளவு பேர் ஆர்வமாக படிக்கின்றனர் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தான் வெளியாகியுள்ளன. 

கணினி மற்றும் செல்பேசி மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும், இந்தியர்கள், செய்தி நிறுவனங்கள் வெளியிடும் நாளிதழ்களின் செய்திகளை படிக்காமல், பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களின் 40 சதவீதம் பேர், ஆன்லைன் மூலம் செய்திகளை பார்க்க விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம், செய்திகளை வாசிக்காமல், பார்த்துவிட்டு செல்லும் பழக்கம் இந்தியர்களின் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைன் செய்திகளின் பரிதாபம்:

இணையதளம் மற்றும் செல்பேசிகளில் ஆன்லைன் மூலம், செய்திகளை வாசிக்காமல், பார்த்துவிட்டு செல்லும் போக்கு இந்தியர்களிடம் அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் விற்பனை சுமார் 12 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், செய்தி நிறுவனங்களின் வருவாயும் குறைந்து விட்டது. 

இதேபோன்று, பெரும்பாலான இளைஞர்கள், ஆன்லைனில் தேடுதல் வேட்டையில் இருந்தாலும், அவர்களிடையே வாசிப்பு பழக்கம் இல்லை என்றும், இதன்மூலம் ஆன்லைன் செய்திகளின் நிலை பரிதாபமாக மாறிவிட்டதாகவும் ஆய்வு மூலம் தெரியவருகிறது. 

ஆன்லைன் மூலம் வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாக பெரும்பாலான மக்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. எனவே, ஆன்லைனில் ஒரு செய்தியை பார்த்தாலும், அதன் மீது வாசகர்களுக்கு உடனடியாக நம்பிக்கை ஏற்படுவதில்லை. இதனால், செய்தியின் முழு விவரங்களையும் அறிந்துகொள்ள ஆர்வம் செலுத்தாமல், பார்த்துவிட்டு, நகர்ந்து விடுகின்றனர். 

வாசிப்பே பலன் தரும்:

ஆன்லைன் மூலம் நாம் செய்திகளையும், நூல்களையும் தேடி தேடி படித்தாலும், அதன்மூலம் மிகப்பெரிய அளவுக்கு பலன் கிடைக்காது. செய்தித்தாள்களையும், நூல்களையும் நேரடியாக வாசிப்பதில் கிடைக்கும் சுகமே தனியாகும். ஒரு நூலை வாசிக்கும்போது, சந்தேகம் ஏற்பட்டால், அதுகுறித்து குறிப்பு எடுத்துக்கொண்டு, தேடுதலை நாம் தொடங்கி சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியும். இந்த வசதி ஆன்லைன் மூலம் வாசகர்களுக்கு கிடைக்க வாய்ப்பு மிகக்குறைவு என்றே கூறலாம். எனவே ஆன்லைன் மூலம் நாளிதழ்கள், நூல்கள் படிப்பதை குறைத்துக் கொண்டு, நேரடியாக வாசிக்கும் பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் இருந்தால், அதை முழுமையாக படித்து அறிந்துகொள்ளவதை வழக்கமாகி கொள்ள வேண்டும். மாறாக செய்திகளை பார்த்துவிட்டு மட்டுமே நகர்ந்துவிடுவது அறிவுப்பசியை தீர்க்காது என்பதை மறந்துவிடக் கூடாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: