Wednesday, September 13, 2023

ஆரோக்கிய வாழ்க்கைக்கு....!

ஆரோக்கிய வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்....?


உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என ஆசை கொள்கிறார்கள். ஆனால், ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான அம்சங்களை தங்களது வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்களா என்றால், இந்த கேள்விக்கு பெரும்பாலான மக்கள் இல்லை என்றே பதில் சொல்வார்கள். 

கடந்த 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது இருக்கும் மக்களை விட,  அப்போது மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தங்களது வாழ்க்கையை நடத்திச் சென்று இருக்கிறார்கள். தற்போது,  80 வயதை தாண்டி, மிகவும் ஆரோக்கியத்துடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால், சரியான வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்தல் என்று உறுதியாக கூறலாம். 

முறையான பழக்கவழக்கங்கள்:

சரியான, முறையான பழக்க வழக்கங்கள், ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சரியான நேரத்தில் தூங்குவது., அதிகாலையில் எழுந்து, கடமைகளை செய்வது, சரியான நேரத்தில், ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது, நல்ல எண்ணங்களை மனதில் எப்போதும் அசை போடுவது, பிறருக்கு உதவும் போக்கை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது ஆகியவை, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மூலதனம் என்று உறுதியாக கூறலாம். 

ஆனால், தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் இத்தகையை நிலை இல்லை என்றே கூறலாம். இதனால், இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பல இளைஞர்கள் உயிரிழக்கும் செய்திகளை நாம் நாள்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். சரியான தூக்கமின்மை, சரியான உணவுப் பழக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு  அடிப்படையாக இருந்து வருகின்றன. 

ஆரோக்கிய தொழில் வளர்ச்சி:

உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக ஆரோக்கிய தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். இதனால், ஆரோக்கியம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் மருத்துவ மையங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆலோசனை மையங்களுக்கு செல்லும் மக்கள், அங்கு கிடைக்கும் ஆலோசனைகளை ஓரளவுக்குதான் கடைப்பிடிக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. இதனால், ஆரோக்கிய மையங்களால் மட்டுமே, மக்களுக்கு ஆரோக்கியம் கிடைத்துவிடும் என சொல்ல முடியாது. சரியான வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும். 

மக்கள் தங்களின் உடல்நலம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் பணியில் ஈடுபட்டாலும், அதற்கான முறைகளை சரியாக கடைப்பிடிக்காமல், அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கிறார்கள்.

உடல் நச்சு நீக்கம்:

மனித உடலில் சேரும் நச்சுகளை அடிக்கடி நீக்குவது மிகவும் அவசியம். இதற்காக அதிக உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  உண்மையில், அதிக உடற்பயிற்சி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். உடலில் சேரும் நச்சுகளை நீக்க சரியான வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். சில நேரங்களில் உடல் நச்சு நீக்கம், உடலுக்கு நல்லதை விட தீங்கு விளைவிக்கும். நச்சு நீக்கம் உடலின் பல உறுப்புகளை செயலிழக்கச் செய்துவிடும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடலின் நச்சுத்தன்மை கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், உணவு மற்றும் செரிமான அமைப்பு ஆகும். அவர்களின் உதவியுடன், உடல் தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. நமது குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன, அவை நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. அத்துடன்  உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகின்றன. உடல் நச்சுத்தன்மை உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து, நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உடல் நச்சு நீக்கம் என்று எதுவும் இல்லை என்று கூறும் இங்கிலாந்து ஊட்டச்சத்து நிபுணர் கேலிஸ்,  வெறும் வயிற்றில் உடலை நச்சு நீக்குவது என்பது ஆரோக்கியத் தொழிலின் பரவலான அனுமானமாகும் என தெரிவித்துள்ளார்.  உடலை சுத்தப்படுத்த கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போதுமானது. இருப்பினும், நல்ல ஆரோக்கியத்திற்காக சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும். இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

சரியான உணவு, முறையான தூக்கம்:

நாள்தோறும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதும், சரிவிகித உணவு உண்பதும் உடலின் நச்சுத்தன்மையை வலுப்படுத்துகிறது. எனவே சரியான உறக்கத்துடன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதிக உடற்பயிற்சியும் உடல் நலத்திற்கு கேடுதான். உண்மையில், அதிக உடற்பயிற்சி சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

எனவே, நல்ல எண்ணங்களுடன் நல்ல உணவுகளுடன், சரியான தூக்கத்துடன், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதை நாம் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். பிறரை மகிழ்ச்சிப்படுத்த நாள்தோறும் முயற்சி செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். எப்போது, பணி, பணி என்று இருக்காமல், குடும்பத்தின் மகிழ்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். இப்படி, முறையான அம்சங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தால், நிச்சயம் ஆரோக்கியமாக வாழலாம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: