கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாடு.....!
பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலகமே இன்று கவலை அடைந்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால், உலகின் பல்வேறு நாடுகளில் மாசு அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க சர்வதேச அளவில் பிரச்சாரங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மக்களிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதன் காரணமாக பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்:
உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 46 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், சுமார் 53 புள்ளி 3 மில்லியன் டன் பிளாஸ்டிக் ஒரு சில நாட்களில் வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் குப்பைக் கிடங்குகளில் அடைகின்றன. இப்படி குப்பைக் கிடங்குகளில் மலைப் போல குவியும் பிளாட்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்பு அடைந்து, காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு மாசுகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் அதிகரித்து வரும் மாசுகளால், மனித சமுதாயம் உடல் ரீதியாக மிகவும் பாதிப்பு அடைகிறது. உடல் ரீதியாக ஏற்படும் இத்தகைய பாதிப்புகள், பின்னர் மன ரீதியான பாதிப்புகளாக மாறி விடுகின்றன. பிளாஸ்டிக்கால் மனித சமுதாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்பபடியாக நிறுத்துவதுதான்.
பிளாஸ்டிக்கை நிராகரிக்கவும்:
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஒரு துணி பையை பயன்படுத்த மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் மஞ்சப் பை என்ற பிரச்சாரம் அரசால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மஞ்சப் பை மிகப் பெரிய கவுரவம் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் பதிய வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்துவிட்டு, மக்கள் இனி துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். வீட்டில் பெண்கள் பழைய சட்டையின் உதவியுடன் ஒரு பையை உருவாக்கி அதை பயன்படுத்தலாம்.
அத்துடன், பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக கண்ணாடி மற்றும் ஸ்டீல் கொள்கலன்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகி கொள்ள வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பேக்கேஜிங் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவும்:
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல்களில் கொட்டப்படுகிறது. கடலில் சேரும் கழிவுகளில் 90 சதவீத பிளாஸ்டிக் ஆகும். இதனால் ஏரிகள், ஆறுகள் மாசு அடைந்து அதில் உள்ள தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது. அப்படியே பயன்படுத்தினாலும், அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய கட்டாய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வீடு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை, மக்கள் உடனே நிறுத்த வேண்டும்.
வீட்டில் இருந்து மாற்றம்:
பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துகொண்டு, வீட்டைச் சுற்றியுள்ள சிறிய விஷயங்களை நாம் மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் கொள்கலனில் உணவுகளை அடைப்பதற்கு பதிலாக, இரும்பு பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும்.. தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் கிளாசுக்கு பதிலாக, ஒரு கண்ணாடி அல்லது ஸ்டீல் கிளாஸ் பயன்படுத்த வேண்டும்..
இதேபோன்று, பிளாஸ்டிக் பாட்டில்களைத் தவிர்க்க வேண்டும். உலகில் தினமும் 10 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியப்படுகின்றன. இதனால் மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படுவதை மனித சமுதாயம் ஏனோ உணர்ந்துகொள்வதில்லை. எனவே, மூங்கில், கண்ணாடி மற்றும் உலோகங்களால் செய்யப்பட்ட பாட்டில்களைப் பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
மேலும், தேநீர் பைகளுக்கு பதிலாக எஃகு சல்லடையை பயன்படுத்த வேண்டும். ஒரு தேநீர் பையில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உங்கள் கோப்பை தேநீரில் சேர்க்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது.
மாற்றமே பலனை தரும்:
பிளாஸ்டிக் பொருட்களால் மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சுற்றுச்சூழல் பாதிப்புடன், மாசு பாதிப்பையும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் ஏற்படும், விபரீத விளைவுகளை ஏனோ மனித சமுதாயம் இன்னும் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறது. தன்னார்வ நிறுவனங்கள், அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், அதை மக்கள் புறக்கணித்து விட்டு, மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களையே அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் தடுத்த நிறுத்த ஒரே வழி, மக்களிடம் இருந்து மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம், பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக தடுத்து நிறுத்த முடியும் என உறுதியாக கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment