இரவு உணவு - சில பயனுள்ள தகவல்கள்....!
மனிதனின் நல்ல ஆரோக்கியத்திற்கு இரவு உணவு மிகவும் முக்கியமானது. மக்கள் பெரும்பாலும் இரவு உணவில் எண்ணெய் பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரவு உணவு இலகுவாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை அனைவரும் பெறலாம்.
லேசான உணவின் நன்மைகள்:
இரவில் லேசான இரவு உணவை உட்கொள்வதால், உடல் ஊட்டச்சத்துக்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. இதன் காரணமாக, செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆரோக்கியமான வயிறு, நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
இரவில் லேசான உணவை உண்பவர்கள் தங்கள் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். எனவே, இரவு உணவிற்கு குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வயிறு நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். நம்மில் பலர் இரவு நேரத்தில் வயிறு முட்ட உண்பதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இது சரியான முறையல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்க செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை கூறுகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல், உணவை உண்பது சரியான அணுகுமுறை இல்லை என்றும், அதனால் உடல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இரவு தூக்கம்:
மனிதனின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகமிக அவசியம். நீங்கள் இரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை என்றால், இன்றிலிருந்து லேசான இரவு உணவைத் தொடங்குங்கள். உண்மையில் முடிவு ஆச்சரியமாக இருக்கும். வயிறு நிறைந்த உணவு மற்றும் எண்ணெய் உணவுகள் தூக்கத்தை கெடுக்கும். அதை உங்களில் பலர் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கலாம்.
அத்துடன், இரவு உணவின் போது லேசான உணவை உண்பவர்கள், உடலின் ஆற்றல் அமைப்பான மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும். இது தவிர, அவர்களின் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.
கொழுப்பு குறைந்த உணவு:
இரவு உணவிற்கு கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர லேசான உணவும் உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
இரவில் இலகுவான உணவுகளை உண்பதால், உடலை நீண்ட நேரம் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பதால் உடல் வேகம் குறைந்து பாரமாக இருக்கும் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை இரவில் சாப்பிடுவதன் மூலம், நீங்கள் அமிலத்தன்மையிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். சாப்பிட்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், இனி லேசான உணவுகளை விரும்புங்கள். லேசான உணவுகளை உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இரவு உணவு மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் என்பதால், அதை தவிர்க்க வேண்டாம். அதேநேரத்தில், சரியான நேரத்தில் இரவு உணவை உட்கொள்ளும் பழக்கதை கடைபிடித்து வாழுங்கள். சரியான அளவு உணவு, சத்தான உணவு ஆகியவற்றை இரவு உணவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டு, இரவு 8 மணிக்குள் உணவை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இதன்மூலம், உடலும், மனமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான மற்றும் லேசான உணவு, பல்வேறு உடல் பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment