வெறுப்பு பிரச்சாரத்தை கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியா பெரும் திறனை இழக்கும்...!
நாட்டில் அண்மைக் காலமாக இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து அதன்மூலம் அரசியல் இலாபம் பெற பாசிச அமைப்புகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக அதிகளவு வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு நாட்டில் அண்மையில் நடந்த பல சம்பவங்களை உதாரணங்களாக கூறலாம்.
உ.பி. மற்றும் டெல்லி சம்பவம்:
உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் பள்ளியில், முஸ்லிம் மாணவன் ஒருவனை அப்பள்ளி ஆசிரியை சக மாணவர்களை வைத்து அறைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் வடு ஆறுவதற்குள், டெல்லியில் உள்ள மற்றொரு பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை அப்பள்ளி ஆசிரியை தரக்குறைவாக பேசியதும், நாட்டில் விடுதலைக்காக முஸ்லிம்கள் எதுவும் செய்யவில்லை என்றும், நாடு விடுதலை அடைந்தபிறகும் கூட முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை என்றும் அந்த ஆசிரியையை சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று, தமிழகத்தின் திருவண்ணாமலையில், ஹிந்தி தேர்வு எழுத சென்ற முஸ்லிம் மாணவி ஒருவரை, ஹிஜாப் அணிந்து இருந்ததால், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பின்னர், அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால் தமக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சல் காரணமாக, தாம் தேர்வு எழுத விரும்பவில்லை என கூறி, அந்த முஸ்லிம் மாணவி தேர்வு எழுதாமல், வீட்டிற்கு சென்று விட்டார். இப்படி முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு:
அண்மையில் சந்திரயான்-3 வெற்றியை நாம் கொண்டாடினோம். இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. இந்த கொண்டாட்டத்தின் போது, இந்தியாவின் ஏவுகணை மனிதர் ஏபிஜே அப்துல் கலாமை இந்தியாவிற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காகவும் நாம் நினைவு கூர்ந்தோம். அவர் முஸ்லீம் சமூகத்திலிருந்து வந்தவர், வளர்ந்த நாடுகளின் அனைத்து அழகான சலுகைகளையும் அவர் மறுத்து, இந்தியாவுக்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பால், இந்தியாவின் வருங்கால அப்துல் கலாம் யாராக இருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது.
முஸ்லிம் விஞ்ஞானிகள்:
சந்திரயான் - 3 திட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த குஷ்பூ மீர்ஷா, அரீப் அகமது, ஷேக் முஸம்மில் அலி, அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது திறமையை வெளிப்படுத்தி சிறந்த பங்களிப்பை அளித்தனர். முஸ்லிம் விஞ்ஞானிகளின் குறிப்பாக பெண் விஞ்ஞானிகளின் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதேபோன்று, முதல்முறையாக சூரியனை ஆய்வு இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்வதற்கு அதன் திட்ட இயக்குநராக தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி, பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு நெருக்கடிகள் மற்றும் வெறுப்புகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமுதாயம் கல்வி, உள்ளிட்ட துறைகளில் முன்னேறி நாட்டிற்கு தனது கடமையையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு பெருமை கிடைத்து வருகிறது.
கேள்விக்குறியாகும் கல்வி:
ஆனால், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் அதிகமாகிய வருவதால் முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது குறையும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு விஷத்தை ஊட்டிக்கொண்டிருப்பதால், அப்துல் கலாம் போன்ற திறமையான இளம் விஞ்ஞானிகள் உருவாகுவதை பாசிச அமைப்புகள் தடுத்துவிடும். இதனால், நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பது உறுதி.
நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியர் என்ற உணர்வுடனும், சகோதரத்துவம் என்ற மனப்பான்மையுடனும், அனைவரும் இணைந்து செயல்பட்டனர். இந்திய அரசியலமைப்பிலும் இது பிரதிபலித்தது. ஆனால் இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் பல்வேறு துறைகளில் நிறைய வளர்ச்சியடைந்த போதிலும், ஆனால் பலவற்றையும் இழந்துள்ளோம். சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் வெளிப்படையாக மத நல்லிணக்கத்தை இழந்து நிற்கிறோம். மதத்தின் வெறுப்பு அரசியல் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி, சமூகத்தின் அமைதியைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.
குழந்தைகளை ஒரு நல்ல மனிதனாக பள்ளிக்கூடம் வடிவமைக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர் சந்தேகத்திற்கு இடமின்றி மிக முக்கியமான பங்கை வகிக்கிறார். ஆனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பாடம் கற்பித்து, முஸ்லிம் மாணவனை சக மாணவரை வைத்து கடுமையாக அறைந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? இதனால் முஸ்லிம் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். பெற்றோருக்கு எப்படித் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தைரியம் வரும்?.
வெறுப்பை எதிர்க்க வேண்டும்:
எனவே, முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ந்து பரப்பப்படும் வெறுப்பை எதிர்த்து நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பேச வேண்டும். இதுபோன்ற முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறக்கூடாது. இதை தவறு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ கூடாது. அனைத்து குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெறுவதற்கும் அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கும் வெறுப்புக்கு எதிராக பேசுவதற்கு அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வெறுப்பை தீவிரமாகக் கையாளாவிட்டால் இந்தியா பெரும் திறனை இழக்கும் என்பதை புரிந்துக் கொண்டு, இனி வரும் காலங்களில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத கொள்கையுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதன்முலம் மட்டுமே, இந்தியாவில் திறமையான இளம் விஞ்ஞானிகள், தொழில் வல்லுநர்கள், பொறியாளர்கள் ஆகியோர்களை உருவாக்க முடியும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment