துரித மனிதநேய
சேவையால் 800 பயணிகளின் உயிர்களை
காப்பாற்றிய ரயில் நிலைய முஸ்லிம் கண்காணிப்பாளர்
ஜவ்பர் அலி….!
தனது கடமையையே
செய்ததாக
மணிச்சுடர் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் நெகிழ்ச்சி…!!
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மனிதநேய சேவைகளை செய்யும் வாய்ப்புகள் மிக எளிதாக கிட்டி விடுவதில்லை. அப்படியே சேவை செய்யும் வாய்ப்புகள் கிடைத்தாலும் சிலர் அதனை கண்டுக் கொள்ளாமல் புறக்கணித்து சென்று விடுகின்றனர். அதன்மூலம் தங்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் அவர்கள் ஒரு விதத்தில் தீங்கு செய்கிறார்கள் என்றே கூறலாம். தாங்கள் செய்யும் பணிகளில் கூட சில அலட்சியமாக இருந்துவிட்டு, பலருக்கு துன்பங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
ஆனால், தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி கிராமத்தை பூர்விகமாக கொண்டு, தற்போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் எஸ்.எம்.ஜவ்பர் அலி, இயற்கையிலேயே சமூக சேவையில் அக்கறை கொண்டவர். மற்றவர்களுடன் மனிதநேயத்துடன் பழகும் குணம் கொண்டவர். அத்துடன், தனது பணியில் நேர்மையான முறையில் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவை ஆற்றி வருபவர். இதன் காரணமாக தான், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி கொட்டிய கனமழையின்போது, செந்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்களை தனது துரித சேவை மூலம் அவர் காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பாக மணிச்சுடர் நாளிதழுக்கு ஜவ்பர் அலி அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
துரித சேவை:
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால், அங்குள்ள ரயில் வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 17ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் திருச்செந்தூர்-நெல்லை வழித்தடத்தில் செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், திருச்செந்தூரில் இருந்து செந்தூர் விரைவு ரயில், இரவு 8.25 மணிக்கு புறப்பட்டது. நாசரேத் ரயில் நிலையத்தை ரயில் கடந்தவுடன், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு செக்சன் என்ஜினியர் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் மூலமாக ரயில் தண்டவாளங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் கிடைத்தது.. இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 நிமிடங்களே மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி, ரயிலை மேற்கொண்டு செல்ல அனுமதி அளிக்காமல், நிறுத்தி வைத்தார். அத்துடன், செக்சன் கண்ட்ரோலுக்கு தகவல் தெரிவித்து, தொடர்ந்து கனமழை பெய்துக் கொண்டிருந்ததால், மேற்கொண்டு ரயிலை இயக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
மனிதநேய சேவை:
செந்தூர் விரைவு ரயில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ள இருப்பதை தனது துரித சேவை மூலம் தடுத்த நிறுத்திய ஜவ்பர் அலி, அத்துடன் தனது பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த விரைவு ரயிலில் சிக்கிக் கொண்ட 800க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக தங்க வைக்க ரயில்வே நிர்வாகம் மூலம் ஏற்பாடுகளை செய்தார். இந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ரயில் நிலையம் முழுவதும் இருட்டாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்துக் கொண்டும் இருந்தது. இதனால் மீட்புப் பணிகளில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதலில் இரண்டு பேருந்துகள் மூலம் பயணிகள் அனுப்பப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், தாமிரபரணி பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டதால், அந்த பேருந்துகள் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. இதனால் பீதி அடைந்த 600க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே இரவு கழித்தனர்.
இந்த விவரங்கள் குறித்த தகவல்களை மதுரை கண்ட்ரோலுக்கு ஜவ்பர் அலி தொடர்ந்து அளித்துக் கொண்டே இருந்தார். ரயில் நிலையத்தில் தங்கி இருந்த 600 பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டதால், வாகனங்கள் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு வர முடியவில்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம், உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் கோபம் அடைந்த நிலையில், புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை கொண்டு வந்த பயணிகள் அனைவரும் சாப்பிட வழங்கினார்கள்.
இப்படி இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, 3 ஹெலிகாப்டர் மூலம் பயணிகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. எனினும் பயணிகள் மத்தியில் பீதியும் பதற்றமும் நிலவியதைக் கண்ட ஜவ்பர் அலி மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள், அவர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறி, எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொண்டனர்.
மூன்று நாட்களும் கனமழை, மின்சாரம் துண்டிப்பு, உணவுப் பிரச்சினை என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பாண்ட்ஸ்மேன்கள், ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவுக்கு சேவை ஆற்றி ரயில்வே துறைக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டு பெருமையை சேர்த்தனர்.
குவியும் பாராட்டுகள்:
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராத்தில் பலசரக்கு கடை நடத்திய கே.எஸ்.அசன் மொய்தீனின் 7 பிள்ளைகளில் ஒருவரான ஜவ்பர் அலி, மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தன்னுடைய கல்வியை தொடர்ந்து, எம்.எஸ்.சி,, பி.எட். முடித்து பின்னர், ரயில்வே துறையில் சேர்ந்தார். மிகவும் நேர்மையான அசன் மொய்தீனின் மகனான ஜவ்பர் அலியிடமும் எப்போதும் மனிதநேயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதற்கு செந்தூர் விரைவு ரயில் பயணிகளை காப்பாற்றிய சம்பவமே எடுத்துக்காட்டாக உள்ளது. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 800 பயணிகளின் உயிர்களை தனது துரித சேவையால் காப்பாற்றிய ஜவ்பர் அலிக்கு, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத்துடன், அவருடன் இணைந்து பணிபுரிந்து மற்ற ரயில் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
வாழ்க்கையில் வாய்ப்புகள்
கிடைக்கும்போது, மனிதர்களுக்கு சேவையை செய்ய கொஞ்சமும் தயங்கக் கூடாது. மேலும் தங்களுடைய
கடமைகளில் ஒருபோதும் அலட்சியமாக இருக்காமல் எப்போதும் துரிதமாக செயல்பட வேண்டும் என்பதற்கு
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் ஜவ்பர் அலி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே
கூறலாம். நாமும் மணிச்சுடர் நாளிதழ் தரப்பில் அவருக்கு வாழ்த்து கூறி மகிழ்கிறோம்.
-
சந்திப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment