Thursday, December 21, 2023

மதிப்புரை....!

நூல் மதிப்புரை 

நூல்           : அறிஞரின் பொன்மொழிகள் சையீத் மொஹம்மத் அலி ஷிஹாப் 

ஆசிரியர்    : முஜீப் ஜெய்ஹுன்

வெளியீடு  : சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017. செல்பேசி: 72000 50073

விலை        : ரூ.555/-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக மிகச் சிறப்பாக சேவை ஆற்றி, இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்திற்காக தயக்கமேயின்றி தம்மை அர்ப்பணித்த கேரள மன்னின் மைந்தன் சையீத் மொஹம்மத் அலி ஷிஹாப் அவர்களின் நேர்காணல், அரிய பிரசங்கங்கள், மற்றும் கட்டுரைகளில் இருந்து பொன்மொழிகள் தொகுக்கப்பட்டு, அது நூல் வடிவில் நம் கைக்கு கிடைத்துள்ளது. 'ஸ்லோகன்ஸ் ஆஃப் த ஸேஜ்' என முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல், பின்னர், இத்தாலி மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தற்போது, முஜீப் ஜெய்ஹுன் அழகிய தமிழ் மொழியில் இந்த நூலை கொண்டு வந்துள்ளார். 

இந்த நூலில் சையீத் முஹம்மத் அலி ஷிஹாப் அவர்களின் வாழ்க்கை வரலாறு, மிக ரத்தின சுருக்கமாக இடம்பெற்றுள்ளதை படிக்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும், ‘மனிதனுக்கு எல்லாமே தேவை. ஆனால், அளவுக்குட்பட்டுதான்’ என தொடங்கி, ‘எத்தனையோ மனிதர்களைப் போல வாழ்ந்த மற்றும் ஒரு மனிதனாகவே, எதிர்காலத்தில் நான் அறியப்பட விரும்புகிறேன்’ என சையீத் முஹம்மத் அலி ஷிஹாப் அவர்களின் 100 பொன்மொழிகளை படிக்கும்போது, புதிய புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. 

அத்துடன், சையீத் ஷிஹாப் அவர்களுக்கு முஜீப் ஜெய்ஹுனின் அஞ்சலி என்ற தலைப்பில், சையீத் ஷிஹாபின் பண்புகள், 99 சிறிய தலைப்புகளில் எழுதி தொகுப்பட்டுள்ளது. நல்ல சிந்தனைக்கு விருந்து அளிக்கும் இந்த நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் மட்டுமல்லாமல், முஸ்லிம் சமுதாயம் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அவசியம் படித்து பயன்பெற வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இந்த நூல் கட்டாயம் இடம் பெற செய்தால், மானுடத்தை நேசித்த சையீத் மொஹம்மத் அலி ஷிஹாப் குறித்து, தமிழக மக்களும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிட்டும் என உறுதியாக கூறலாம். 

- ஜாவீத்

No comments: