பாலஸ்தீன மக்களின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 30 ஆஸ்திரேலிய பெண்கள்...!
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன முஸ்லிம்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய படைகளை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போரில், இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீன மக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய ராணுவம் காசாவில் உள்ள மருத்துவமனைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தார்கள். எனினும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் மன உறுதியுடன் தைரியமாக போராடி வருகிறார்கள். ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த போரில் பாலஸ்தீன மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் பாலஸ்தீன மக்களின் உறுதியும், தைரியமும், நம்பிக்கையும், உலகில் உள்ள பல்வேறு நாட்டு மக்களை ஆச்சரியம் அளித்து வருகிறது. அத்துடன் அவர்களை சிந்திக்கவும் வைத்துள்ளது.
உலகம் முழுவதும் போராட்டங்கள்:
பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் இந்த கண்டன போராட்டங்களில் ஏராளான மக்கள் கலந்துகொண்டு, இஸ்ரேலிய ராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற குரல் தற்போது உலகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டங்களில் மனிதநேயம் உள்ள சில யூதர்களும் கலந்துகொண்டு, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கி, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களை கண்டித்து வருகிறார்கள்.
பாலஸ்தீன மக்களின் மன உறுதி:
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தாலும், பாலஸ்தீன மக்கள் மிகவும் மன உறுதியுடன் அதனை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சுமார் மூன்று மாதங்களாக காஸாவில் இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிரமிப்புக்கும் தாக்குதலுக்கும் எதிராக பாலஸ்தீன முஸ்லிம்களின் மன உறுதி, உலகில் அமைதியின் மதமான இஸ்லாத்தை பரப்ப உதவி செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்லாமிய போதனைகளால் மக்கள் வேகமாக கவரப்பட்டு, இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாத்தில் ஆஸ்திரேலிய பெண்கள்:
இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களின் மன உறுதியும் ஒற்றுமையும் கண்டு வியப்பு அடைந்த ஆஸ்திரேலிய பெண்கள் 30 பேர், இஸ்லாம் என்ற மிக உன்னதமான வட்டத்திற்குள் நுழைந்து தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Meadow Heights மசூதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கான இந்த ஆன்மீக விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது, 30 பெண்கள், கலிமாவை சொல்லி தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்.
துருக்கிய ஊடகம் ஒன்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் பெண்கள் கண்ணியமான இஸ்லாமிய உடையணிந்து கல்மா-இ-ஷஹாதத்தை ஒரு ஆலிமின் உதவியுடன் ஓதுவதைக் காணலாம். இஸ்லாத்தை ஏற்றுகொண்ட புதிய முஸ்லீம் பெண்ணான கிறிஸ்டின் கெர்னோகோனாக், இஸ்லாத்தில் ஓர் இறைக்கொள்கை என்ற கருத்துடன் தனது ஆழமான தொடர்பை வெளிப்படுத்தினார். பாலஸ்தீனியர்களின் போராட்டம் தனது இதயத்தைத் தொட்டதாக ஒப்புக்கொண்ட அவர், பாலஸ்தீன மக்களின் உறுதியான போராட்டமே தன்னை இஸ்லாத்திற்கு மாறுவதற்கு வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு புதிய முஸ்லீம் பெண்ணான ஜாக்குலின் ரெட்சாக், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, தான் மிகவும் நிம்மதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், காஸாவின் நிலவரத்தை பார்த்து தான் இதுபோன்ற முடிவை எடுத்ததாகவும், இப்போது இஸ்லாம் மற்றும் அல்லாஹ்வுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேகமாக பரவும் இஸ்லாம்:
பாலஸ்தீன மக்கள் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டு வருவதன் மூலம், இஸ்லாம் குறித்து பிற மத மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம், ஓர் இறைக்கொள்கை உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்றே கூறலாம். உலகில் தற்போது மக்களிடையே அதிகம் கவரப்பட்டு வரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்து வருவதை அண்மை கால பல புள்ளிவிவரங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில், இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் வேகமாக வருவதை உண்மையான செய்தி ஊடகங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் இஸ்லாமிய நெறி உலக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதை கண்டு பாசிச அமைப்புகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனினும், இஸ்லாமிய நெறி அனைத்து தரப்பு மக்களிடையே பரவுவதை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த வகையில், பாலஸ்தீன் மக்களின் தியாகங்கள், ஏக இறைவனால் நிச்சயம் ஏற்றுகொள்ளப்படும் என உறுதியுடன் கூறலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment