என்ன செய்யப் போகிறது இந்தியா கூட்டணி.....?
இந்திய ஜனநாயக தேர்தலில் அரையுறுதிப் போட்டியாக கருதப்பட்ட மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக, விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று விடுவோம் என்ற மிக அதீத நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் செயல்பாடுகள், பேச்சுக்களில் சர்வாதிகாரத்துடன் கூடிய ஒரு திமிர்தனம் இருந்து வருவதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் காணலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் பாஜக தனது பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவு அடைந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, தேர்தல் ஆணையர்களை பிரதமரே நியமிக்க முடிவு செய்யலாம் என்ற வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது. இப்படி, ஜனநாயக நெறிமுறைகள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் பாஜக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மத்தியில் இன்னும் ஒரு சரியான புரிதல் இல்லை என்றே பல்வேறு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் நிலை:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை, தலைகீழாக மாறியதால், அக்கட்சிக்கு தற்போதைய நிலையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். எனினும், தெலங்கானாவில் வெற்றி, மிசோரமில் குறிப்பிடத்தக்க அளவு பெற்ற வாக்குகள், மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி, ஆகியவை காங்கிரசுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது என்றே கூறலாம். நாட்டில் பாஜகவை எதிர்க்க மக்களின் நல்ல ஆதரவு பெற்ற மிகப்பெரிய கட்சியாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியே இருந்து வருகிறது என்பது அண்மையில் முடிந்த தேர்தல்கள் மூலம் நன்கு தெரிய வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அக்கட்சி தொடங்கி, பல்வேறு மாற்றங்களை கட்சியில் செய்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என பல்வேறு சிறப்பு குழுக்களை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்து, மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறும் வகையில், கட்சி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நம்பிக்கையை பெறும் வகையில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளதாக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கடந்த மாதம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அதனை பிரதிபலிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்தியா கூட்டணி ஆலோசனை:
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்களின் 4வது ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட 28 எதிக்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, தங்களது கருத்துகளை முன்வைத்தனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் பதவிக்கு தாம் முன்மொழிவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், தேர்தல் வெற்றிக்குப் பிறகே, பிரதமர் யார் என்பது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள், எம்.பி.க்கள் முடிவு செய்வார்கள் என மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனால், பிரதமர் பதவி குறித்த சர்ச்சைக்கு இந்தியா கூட்டணியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி பங்கீடு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியா கூட்டணி தலைவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருவது உறுதியாக தெரியவந்துள்ளது.
என்ன செய்யப் போகிறது இந்தியா:
தற்போதைய சூழ்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு மிகப்பெரிய கேடாக அமையும் என நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், எந்தவிதத்திலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கோடு, பாஜக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவை, தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 'மோடி கி கியாரண்டி' அதாவது மோடியின் உத்தரவாதம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவிற்கு தென்மாநிலங்களில் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாததால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை மட்டுமே குறிவைத்து, பாஜக தனது தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வட மாநில மக்களை கவரும் வகையில், 'மோடி கி கியாரண்டி' என்ற முழக்கத்தை பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
இப்படி, தேசிய அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா கூட்டணி என்ன செய்யப் போகிறது? என்ற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தன்னை மிகப்பெரிய சக்தியாகவும், வலுவான கட்சியாகவும் காட்டிக் கொள்ளும் பாஜகவை வீழ்த்த, இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் நல்ல புரிதலுடன் கூடிய விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நாட்டின் எதிர்காலம், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்பட்டால் மட்டுமே, பாஜகவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த முடியும் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளை சிதைத்த திட்டம்:
நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என முடிவு செய்துள்ள பாஜக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைக்க, கூட்டணியை உடைக்க பல்வேறு காரியங்களை அரங்கேற்றி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு உள்ள மாநில கட்சிகளை தங்கள் பக்கம் இணைத்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க காரியங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கொள்ளவும் அல்லது தேர்தலில் மறைமுகமாக ஆதரவு அளிக்கும் வகையிலும் பாஜக திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.
எனவே, இந்தியா கூட்டணி தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாஜகவின் அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாமல், மிகவும் உறுதியாக நாடாளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்விகள் குறித்தும், பாஜக ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்கள், துயரங்கள் குறித்தும், நாட்டு மக்களில் அனைவரும் நன்கு அறிந்து தெளிவு பெறும் வகையில் இந்தியா கூட்டணி பிரச்சாரம் செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, எந்தவித தாமதமும் இல்லாமல் இந்தியா கூட்டணி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு எப்படிப்பட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைத்துவிதமான சமூக ஊடகங்கள் மூலம் இந்தியா கூட்டணி பிரச்சாரங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல், அரவணைத்து செல்ல வேண்டும்.
மக்களுக்கும் பொறுப்பு:
நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், நிம்மதியான, அமைதியான, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி மிகவும் அவசியம் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்காக நாடு மற்றும் சமூக நலனின் அக்கறை கொண்டு ஒவ்வொரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திர போர் என நினைவில் வைத்துக் கொண்டு, நாட்டில் உள்ள அனைவரும் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தங்களது வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்க, இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து தங்களது ஜனநாயக கடமையை நல்லவிதமாக நிறைவேற்ற வேண்டும். இப்படி நாட்டு மக்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை நன்கு உணர்ந்து செயல்பட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவே எதிர்பார்க்காத, மிகப்பெரிய வெற்றி இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment