சென்னையில் முதல் முறையாக நடமாடும் உர்தூ நூலகம் அறிமுகம்....!
உர்தூ மொழிகளில் ஏராளமான நூல்களை கண்டுவியப்புடன் வாசித்த வாசகர்கள்....!
சென்னை, டிச26- தமிழகத்தில் உர்தூ மொழியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மியாசி உர்தூ அகாடமியின் தலைவர் ஏ.முஹம்மது அஷ்ரப் மற்றும் உர்தூ அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ருஹுல்லா ஆகியோரின் முயற்சியால், சென்னையில் முதல்முறையாக நடமாடும் வாகன உர்தூ நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நடமாடும் நூலகம்:
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் உர்தூ நடமாடும் நூலக வேன்கள் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உர்தூ மொழியின் மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு முஸ்லிம்களிடம் இருந்து மட்டுமல்லாமல், உர்தூ மொழி மீது ஆர்வம் கொண்ட அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
திரண்ட உர்தூ ஆர்வலர்கள்:
குறிப்பாக, உர்தூ ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடமாடும் உர்தூ நூலகத்திற்கு சென்று அந்த வாகன நூலகத்தில் உள்ள ஏராளமான உர்தூ நூல்கள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டதுடன், அவற்றை வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றனர்.
கோரிக்கை:
அத்துடன், நடமாடும் உர்தூ நூலகம் குறித்த தகவல்களை மற்றவர்களுக்கும் அவர்கள் எடுத்துக் கூறியதால், ஏராளமான மக்கள் அதனை காண திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்திற்கு திரண்டனர். உர்தூ அகாடமியின் இந்த புதிய முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற, நிகழ்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் நடமாடும் உர்தூ நூலகங்கள் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment