மதவெறியர்களின் பார்வையில் வரலாற்று சிறப்புமிக்க டெல்லி சுன்ஹாரி பாக் பள்ளிவசால்...!
உத்தரப் பிரரேதச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபரி மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழாவை தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துகொண்டு, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக ஏற்பாடுகள் மிகவும் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், சத்தமில்லாமல் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி மீது தற்போது பாசிச மதவெறியர்களின் பார்வை விழுந்துள்ளது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி, இந்த பள்ளிவாசலை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுன்ஹாரி பாக் பள்ளிவாசல்:
டெல்லி மக்களால், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் என அழைக்கப்படும் கோல்டன் பாக் பள்ளிவாசல், 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. அத்துடன் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் பாரம்பரிய கட்டிடமாகும். சுனேஹ்ரி மஸ்ஜித் பழைய டெல்லியில் உள்ள 18ஆம் நூற்றாண்டு மசூதியாகும். இது முகலாய பேரரசர் முகமது ஷாவின் ஆட்சியின் போது, மொகலாய பிரபு ரோஷன்-உத்-தௌலாவால் கட்டப்பட்டது. சுனேஹ்ரி மஸ்ஜித் 1721-1722 காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த மசூதி ரோஷன்-உத்-தௌலாவின் ஆன்மீக வழிகாட்டியான ஷாபிக்க்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஒரு பீடத்தின் மீது தெரு மட்டத்திற்கு மேலே உயர்த்தப்பட்ட சுனேஹ்ரி மஸ்ஜித் ஒரு படிக்கட்டு மூலம் அடையப்படுகிறது. மசூதியில் மூன்று பல்புகள், கில்டட் குவிமாடங்கள் மற்றும் மெல்லிய மினாரட்டுகள் உள்ளன. மசூதியின் முகப்பில் மூன்று வளைவு நுழைவாயில்கள் உள்ளன. மசூதியின் உட்புறம் மூன்று விரிகுடாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மசூதியின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இரண்டிலும் ஸ்டக்கோ அலங்கார வேலைப்பாடுகள், அரேபிஸ்குகள் மற்றும் மலர் வடிவங்களில் தோன்றும் வகையில் உள்ளன. இது சாந்தினி சௌக்கில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் அருகே அமைந்துள்ளது. சுனேஹரி பாக் மஸ்ஜித், கோல்சக்கர் மௌலானா ஆசாத் சாலை, மோதிலால் நேரு மார்க் மற்றும் காமராஜ் மார்க் ஆகியவற்றை இணைக்கிறது. அத்துடன், சுன்ஹாரி பாக் மஸ்ஜித் மூன்றாவது வகை பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய பிரச்சினை:
இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த சுன்ஹாரி பாக் மஸ்ஜித், கடந்த காலங்களில் எந்தவித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. தற்போது திடீரென புதிய பிரச்சினையை கிளப்பி, மஸ்ஜித்தை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது. டெல்லியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இந்த மசூதி இருப்பதாக ஒரு பிரச்சினையை கிளப்பியுள்ள சிலர், மசூதியை இடிக்கும் காரியங்களையும் செய்து வருகிறார்கள். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுன்ஹாரி பாக் மசூதி இடிப்புக்கு எதிராக மசூதியின் இமாம் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி நிலைக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மசூதி இடிப்பு குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளை தாங்கள் கேட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். பொதுமக்கள் அளிக்கும் இந்த பரிந்துரைகள் பாரம்பரிய பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், எனவே பள்ளிவாசலை இடிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அவர் கூறினார்.
மசூதி நிர்வாகம் வாதம்:
வழக்கில் மசூதியின் சார்பில் ஆஜரான இமாமின் வழக்கறிஞர், மசூதி இடிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸ் சட்டவிரோதமானது மட்டுமல்ல, நோட்டீஸுக்குப் பிறகு எடுக்கப்பட்ட சாத்தியமான நடவடிக்கைகளும் சட்டவிரோதமானது என வாதிட்டார். இந்த வழக்கில் டெல்லி வக்பு வாரியம் சார்பில் வழக்கறிஞர் ஃபெரோஸ் இக்பால் கான், வழக்கறிஞர் ஃபர்ஹத் ஜஹான் ரஹ்மானி மற்றும் வழக்கறிஞர் இம்ரான் ஹுசைன் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மசூதியை அகற்றுவதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதில் நாட்டின் பெரிய அமைப்புகள் தவிர, முக்கிய பிரமுகர்களும் மசூதியின் பாதுகாப்பிற்காக குரல் எழுப்பி வருகின்றனர்.
சுன்ஹாரி பாக் மசூதி வழக்கில் மசூதியின் இமாம் மௌலானா அப்துல் அஜீஸ் தாக்கல் செய்த மனுவில், மசூதியின் முழு வரலாறு மற்றும் ஆவணங்களை முன்வைத்து, விதிமுறைகளின்படி, மசூதியை தியாகம் செய்ய முடியாது என்று உறுதிப்பட குறிப்பிட்டுள்ளார். .
போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை:
போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இரண்டு முறை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது, இந்த பள்ளிவாசலை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், சுன்ஹாரி பாக் மசூதி, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இல்லை என்றும், அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள்தான் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குப் பங்களித்ததாகவும் மசூதி நிர்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலைமை கொஞ்சம் அடங்கியுள்ளது. எனினும், பாசிச அமைப்புகளின் திட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்:
சுன்ஹாரி பாக் மஸ்ஜித் போன்ற பாரம்பரிய கட்டமைப்பை அகற்ற புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலுக்கு சட்டம், அதிகாரம் அளிக்கவில்லை. இந்த மசூதி தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலமாக இருப்பதால், அதனை ஒருபோதும் அகற்ற முடியாது. கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிப்பாட்டுத்தலங்களின் நிலை குறித்த சட்டத்தின்படி, சுன்ஹரி பாக் மசூதியை இடிக்க முடியாது.
மசூதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் பள்ளிவாசலில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொழுகை நடைபெற்று வருகிறது. ஈத் பெருநாள் தொழுகைகள், ஜும்மா தொழுகை என அனைத்துவிதமான தொழுகைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, சட்டப்படி பள்ளிவாசலை யாராலும் இடிக்க முடியாது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த மசூதி தொடர்பாக எந்தவித பிரச்சினையும் எழவில்லை. இத்தகைய சூழ்நிலையில், புதிதாக ஒரு பிரச்சினையை எழுப்பி, சுன்ஹாரி பாக் மசூதியை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாட்டில், கோவில்-பள்ளிவசால் விளையாட்டு தொடருவதை உடனே நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால், அது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக அமையும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment