Saturday, December 23, 2023

அடைக்கலம் கொடுத்த பள்ளிவாசல்கள்...!

 

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

அடைக்கலம் கொடுத்த பள்ளிவாசல்கள்...!

 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,  மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொட்டிய வரலாறு காணாத கனமழையால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து கொட்டிய கனமழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டது. தற்போது கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. எனினும் மக்களின் துயரங்கள் இன்னும் தீரவில்லை. பெரும் பாதிப்பு என்பதால், மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அடைக்கலம் கொடுத்த பள்ளிவாசல்கள்:

கனமழை, வெள்ளக் காலங்களில் முஸ்லிம்கள் செய்வது வரும் மீட்புப் பணிகள், நிவாரண உதவிகள் ஆகியவற்றை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். சென்னையில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி கொட்டிய கனமழையின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார்கள். சென்னை பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசலின் கதவுகள் திறக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும், வந்து தங்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், பள்ளிவாசலில் தங்கிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக உணவு, மருந்து, மின்சார வசதி ஆகியவற்றை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்தனர். பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளின் இந்த செயலை கண்டு, மாற்று மத தோழர்கள் ஆச்சரியம் அடைந்ததுடன், முஸ்லிம்களின் மனிதநேயத்தை போற்றி வாழ்த்தினர்.

அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொட்டிய கனமழையின்போதும், முஸ்லிம் சமுதாயம் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கி, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதுடன், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள்.

நிவாரண மையங்களாக மாறிய பள்ளிவாசல்கள்:

 


தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தின்போது, அங்குள்ள 45 பள்ளிவாசல்கள், மக்களுக்கு உதவும் நிவாரண மையங்களாக மாறின. இந்த பள்ளிவாசல் நிவாரண மையங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும், சாதி, மதம், இனம், மொழி, என பார்க்காமல் தங்க நல்ல வசதி செய்து தரப்பட்டது. அத்துடன் மூன்று வேளை உணவும் அங்கு தங்கிய மக்களுக்கு முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகள் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள செய்துங்கநல்லூர் பைத்துல்மால் ஜமாத் பள்ளிவாசலில் வெள்ளத்தில் வீடுகளை இழந்த சுமார் 30 இந்து குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டன. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று, நீங்கள் விரும்பும் வரை தங்கலாம் என கூறியது இந்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.  மேலும், பள்ளிவாசலில் தங்கிய குடும்பங்களுக்கு உணவு, உடைகள், மருந்துகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் தேவைகளை பள்ளிவாசல் குழு பூர்த்தி செய்தது.

இந்து சகோதரர்கள் நெகிழ்ச்சி:

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழிரசி என்ற பெண், “உணவு முதல் மருந்துகள் வரை அனைத்தையும் அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள்என்று பள்ளிவாசல் நிர்வாகிகளின் சேவையை பாராட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபரான தெய்வகனி, “நாங்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அணிந்திருந்த ஆடைகளுடன் இங்கு வந்தோம். இந்த மசூதியில் அனைத்தையும் எங்களுக்கு அவர்கள் வழங்கினர். இங்கு தஞ்சம் அடைபவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தொழுகை உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் வீடு திரும்பும் வரை  மசூதியை நிவாரண முகாமாக திறக்க முடிவு செய்ததாக  ஜமாத் கமிட்டி உறுப்பினர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பள்ளிவாசல்களின் சேவை:


இதேபோன்று திருநெல்வேலி அருகேயுள்ள பாட்டபத்து பள்ளிவாசலில் சுமார் ஆயிரம் பேர் தங்க வசதிகள் செய்து தரப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பாட்டபத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், தங்களது மனிதநேய உதவிகளை செய்ய கொஞ்சம் கூட தயங்கவில்லை. இங்கு தங்கிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தொடர்ந்து நான்கு நாட்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்தனர்.

பள்ளிவாசல் நிர்வாகிகளின் இந்த சேவையை கண்டு வியப்பு அடைந்த செல்வலட்சுமி என்ற பெண்மணி, பள்ளிவாசலில் நாங்கள் தங்கிய நான்கு நாட்களிலும் தொழுகையை முஸ்லிம்கள் நடத்தவில்லை என்றும், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முஸ்லிம்கள் செய்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி டவுனில் உள்ள மியான் பள்ளிவாசலும் நிவாரண முகாமாக மாறி, நான்கு நாட்களுக்கு மேல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகோதர நேயத்துடன் மனித சேவையை ஆற்றியது. மேலப்பாளையத்தில் உள்ள மற்றொரு பள்ளிவாசல், கைலாசப்புரம் பள்ளிவாசல் என பல பள்ளிவாசல், நிவாரண முகாம்களாக மாறி, தாமரபரணி ஆற்றை ஒட்டியுள்ள கிராமப்புற மக்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவு, மருந்து ஆகியவற்றையும் வழங்கி ஆதரவு வழங்கின.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 150 பள்ளிவாசல்களில் 30 பள்ளிவாசல்கள், நிவாரண முகாம்களாக மாறி, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு, நல்ல சேவையை ஆற்றியதைக் கண்ட அப்பகுதி மக்கள், மதத்தையும் தாண்டி, முஸ்லிம்கள் ஆற்றிய அற்புதமான சேவைகளை பாராட்டி வருகின்றனர்.

ஒரே மனித சமுதாயம்:

 

பேரிடர் காலங்களில் முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையிலும், தங்களது தொண்டு நிறுவனங்கள் மூலமும், இஸ்லாமிய அமைப்புகள் மூலமும் செய்யும் மனிதநேய உதவிகள், சேவைகள் ஏக இறைவனால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது உறுதி. மதங்கள், கொள்கைகள், சிந்தனைகள், வழிப்பாடுகள் வேறுபாட்டாலும், நாம் அனைவரும் ஒரே மனித சமுதாயம் என்ற உயர்ந்த கொள்கையுடன், இலட்சியத்துடன் எப்போதும் இதுபோன்ற சேவைகள் தொடர வேண்டும். இதன்மூலம், மத ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சியாளர்களின் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என உறுதியாக கூறலாம்.


-     எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: