"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"
நாள் - 40
தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளை அதிக அளவில், அரசு திறப்பதற்கு எதிராக, தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்....!
தமிழகத்தில் 'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உட்பட, சில அமைப்புகள், வலியுறுத்தி வருகின்றன.
ஆனாலும், முன்னர் ஆட்சியில் இருந்த, கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., அரசும், தற்போதைய, அ.தி.மு.க., அரசும் அதை கண்டு கொள்ளவில்லை.
அண்மையில், விஜயகாந்தின் இளைய மகன், சண்முகபாண்டியன், கதாநாயகனாக நடிக்கும், 'சகாப்தம்' படத்தின் துவக்க விழா, சமீபத்தில் நடந்த போது, 'மதுபானக் கடைகளை திறந்து வைத்திருந்தாலே, இளைஞர்கள் குடிக்கத்தானே செய்வர்' என, 'குடி'மகன்களுக்கு ஆதரவாகவே விஜயகாந்த் பேசினார்.
இதற்கு பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.இந்தச் சூழலில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உட்பட, பல விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே 5.1.2014 அன்று தே.மு.தி.க., கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கிராமம்தோறும், தெருக்கள் தோறும் மதுக் கடைகள் திறந்தது போதாது என்று, வணிக வளாகங்களில் குளிர்சாதன வசதியுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
வேலைஇல்லாமல் திண்டாடும் இளைஞர் களுக்கு உரிய வழி வகை செய்யாமல், மதுக்கடைகளை திறந்து, அவர்களின் வாழ்க்கையை அரசு சீரழிப்பது, பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும்.
இதுபோன்று மதுக்கடைகள் திறப்பது கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் குறித்து, அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:'டாஸ்மாக்' கடைகளை நடத்துவதற்கு எதிராக, தே.மு.தி.க., பொதுக்குழுவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அந்தக் கட்சியினரை மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்து உள்ளது.
அத்துடன், இதுவரை, மதுபான விற்பனைக்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசி வந்த விஜயகாந்த், இப்போது, இளைஞர்களின் நலனில், அதிக அக்கறை காட்டுவது போலவும், அவர்களைப் பற்றி அதிக கவலை கொள்வது போலவும் பேசியிருப்பது, புதுமையாகவும் உள்ளது.
விரைவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பெண்கள் ஓட்டுகளை தங்கள் கட்சி பக்கம் கவர்ந்திழுக்கும் வகையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். இது, ஒரு அரசியல் தந்திரமே.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
அரசியல் நோக்கர்கள் எப்படி வேண்டுமானாலும் கூறிக் கொண்டாலும், மதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய தேமுதிகவிற்கு எங்களது பாராட்டு.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment