மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும்......!
‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என். ராம் கருத்து.....!!
இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்திரிகையாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராம்.
அவரது பேட்டி புத்தாண்டு தினமான 01.01.2014 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்தது. பல சுவையான தகவல்கள் அதில் இருந்தன.
பேட்டியில் இருந்து சில பகுதிகள் இதோ உங்கள் பார்வைக்கு......
கேள்வி - மோடி X ராகுல்: உங்கள் கருத்து என்ன? மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுமா?
மோசமான சூழல். தேர்தலில் என்னவாகும் என்று கேட்டால், காங்கிரஸின் ஊழல்கள், மோசமான கொள்கைகளின் விளைவாக, பந்தயத்தில் மோடி முந்தலாம்; ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா என்று கேட்டால், எனக்கு ஆழமான சந்தேகம்தான்.
கேள்வி - மோடியின் பேரலை ஒட்டுமொத்த இந்தியாவையும் சூழும் என்று பலரும் ஆரூடம் கூறும் நிலையில், நீங்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறீர்கள். மோடி ஏன் கூடாது என்று நினைக்கிறீர்கள்?
சுருக்கமாகச் சொன்னால், மோடி ஒரு மாபெரும் பிளவு சக்தி. எல்லோராலும் பழிக்கப்படும் அவரது பெருமை 2002 கலவரங்களில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டது. அந்தப் பெயரை நீக்குவதற்கான தந்திரம்தான் ‘விகாஸ் புருஷ்’ அல்லது ‘வளர்ச்சியின் நாயகன்’ படிமம். சட்டம், அரசியல், தார்மீகம் ஆகிய எந்த அடிப்படையில் பார்த்தாலும் 2002-ல் நடந்தவை இப்போதைக்கு மறக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
2002-ல் நடந்ததற்கும் இந்துத்துவச் சக்திகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் இடையே அறுக்க முடியாத தொடர்பு இருக்கிறது. மோடி பிரதமராகும்பட்சத்தில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகவே ஆகும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி பிரதமராவது இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் பேரபாயமாக அமையும் என்பது தெளிவாகத் தெரியும்.
நரேந்திர மோடி ஏன் நாட்டின் பிரதமராக வரக்கூடாது என்பதை மிக மிகத் தெளிவாக, ஆழமாக சொல்லிவிட்டார் என் சக பத்திரிகையாளர் என்.ராம்...
அவருடைய கருத்தை நானும் வரவேற்கிறேன்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment