"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"
நாள் - 54
இரவில் வீட்டுக்குள் புகும் குடிமகன்கள்: அச்சத்தில் மக்கள்......!குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் பலர் போதையில் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவதாகவும், இதனால் அச்சத்துடனே வசிப்பதாகவும் சென்னை புஷ்பா நகர் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் சுமார் 4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குடியிருப்பு, கோயில், பள்ளிகள் உள்ள இடத்தில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அரசு விதிமுறை உள்ளது.
ஆனால், புஷ்பா நகரின் எதிரில் குளக்கரை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.
அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் கருமாரியம்மன் கோயில் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளன.
இந்த டாஸ்மாக் கடை குறித்து புஷ்பா நகரைச் சேர்ந்த சூர்யா கூறுகையில், ‘‘சாலையிலேயே குடித்துவிட்டு சண்டை போடுகின்றனர். இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அருகில் இருக்கும் கடைகளுக்குக் கூட போக முடிவதில்லை. பெண்கள் மீது வேண்டுமென்றே விழுகிறார்கள்’’ என்று வேதனை தெரிவித்தார்.
இதேபோன்று, ‘‘தினமும் எங்கள் வீட்டு அருகில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பலமுறை அவர்களுடன் சண்டை போட்டும் எந்தப் பயனும் இல்லை. இரவு நேரத்தில் சிலர் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றனர். வீட்டு வாசலில் வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்’’ என்று கோடீஸ்வரி என்பவர் தனது குமறலை வெளிப்படுத்தியுள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு மது வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்தக் கடையில் வயது வித்தியாசம் இல்லாமல் மாணவர்களுக்கும் மது விற்கப்படுகிறது. சில மாணவர்கள், சீருடையிலேயே வந்து மது வாங்கிச் செல்வதாக அருண்குமார் என்பவர் தெரிவித்தார்.
‘‘மக்களுக்கு இடையூறாக இருக்கும் குளக்கரை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் எனு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் கடையை லீஸ் முடிந்தவுடன் அகற்றுவதாகத் தெரிவித்தனர். ஆனால், தற்போது லீஸை நீட்டித்து கடையை தொடர்ந்து நடத்துகின்றனர்’’ என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி மணி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பெண்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என சென்னை புஷ்பா நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புஷ்பா நகரில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள், சரியான விதிகளின்படி அமைக்கப்படவில்லை.
இதனால், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நாள்தோறும் இன்னல்களை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================
No comments:
Post a Comment