Saturday, January 11, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (48)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 48

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதிலளித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் அளித்துள்ள இந்த பதில் குறித்து மது விற்பனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் காந்தியவாதி சசிபெருமாள் கூறும் கருத்து என்ன தெரியுமா....


மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டுத்தான் தமிழகத்தில் மது விற்பனை செய்கிறார்கள்.

இவர்களுக்கு (அரசுக்கு) வருவாய்தான் முக்கியமே தவிர, மக்களின் உடல் நலன் பற்றி எவ்வித அக்கறையும் இல்லை.

இப்போது நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது என்பதற்காக 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை இல்லை என்று எழுதி வைக்கிறார்களே தவிர, உண்மையிலேயே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.


மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மது விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றார் சசிபெருமாள்.

இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் கே.பாலு,  21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று டாஸ்மாக் நிறுவனம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்றும், ஆனால் இப்போதும் கூட பள்ளிச் சீருடையுடன் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது என்றும் வேதனை தெரிவிக்கிறார்.


இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்றும் வழக்கிறஞர் பாலு கூறியுள்ளார்.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசு கூறினாலும், அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

வழக்கறிஞர் பாலு கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

மதுவுக்கு எதிராக வழக்கறிஞர் பாலுவின் போராட்டம் வெல்ல எங்கள் ஆதரவு உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: