Thursday, January 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (45)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 45


21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் கிடையாது.....!

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை......!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்......!!!


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,  டாஸ்மாக் மது விற்பனை மூலம் தமிழக அரசு, பெருமளவு வருவாய் ஈட்டுகிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனையின் மூலம் ரூ.22 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த மது விற்பனையின் காரணமாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கிறது. மதுகுடிப்பவர்களின் கல்லீரல் உள்ளிட்ட உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப வன்முறை போன்ற பல சம்பவங்களும் நடக்கிறது.

அதேநேரம், தமிழ்நாடு மது சில்லரை விற்பனை விதி 11 ஏ-வின்படி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.



ஆனால், இந்த உத்தரவை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தவில்லை. எனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

என வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாராபுரம் சவுண்டையா பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில்,  21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் அரசின் உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சவுண்டையா கூறியுள்ளார்.


அதேபோல் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற அறிவிப்பு பலகை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வைக்கவேண்டும் என்று அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும்  பொதுமக்களுக்கு தெரியும் விதமாக, இந்த பலகையை கடைக்கு முன்பு வைக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்பனை இல்லை என்ற பலகை வைப்பதைவிட,
தமிழகத்தில் மது விற்பனையே இல்லை என்ற பலகை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...

சமூக சிந்தனையாளர்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: