Friday, July 7, 2023

பொது சிவில் சட்டம் - அமர்த்தியா சென் கருத்து....!

                     பொது சிவில் சட்டம் ஒரு முட்டாள்தனமான முடிவு.....!

                      பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்  கருத்து....!!




ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். 

அமர்த்தியா சென் கருத்து:

இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கூறியுள்ள நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், பொது சிவில் சட்டம் ஒரு கடினமான  பிரச்சினை என கூறியுள்ளார். பொது சிவில் சட்டம் இந்து ராஷ்டிரா என்ற கருத்துடன் நிச்சயமாக தொடர்பு இருப்பதாகவும் 90 வயதான சென் தெரிவித்துள்ளார். 

நாட்டில் மக்களிடையே வேறுபாடுகள் உள்ளன. மதங்களில் வேறுபாடுகள் உள்ளன. விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை நீக்கி அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறுவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். 

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் இனியும் தாமதிக்கக் கூடாது என்று செய்தித்தாளில் தாம் படித்ததாகவும்,  இதுபோன்ற முட்டாள்தனமான கருத்து எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். 

இந்து ராஷ்டிரா யோசனையுடன் பொது சிவில் சட்டத்திற்கு நிச்சயமாக தொடர்பு உள்ளது என்றும், ஆனால் இந்து ராஷ்டிரா முன்னேற்றத்திற்கான ஒரே வழி இந்து மதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் என்று பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். 

பொது சிவில் சட்டத்திற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் உள்ளிட்ட அறிவுஜீவிகளும் ஒன்றிய அரசு அமல்படுத்த துடிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பும், கண்டனமும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: