Monday, July 3, 2023

அறிவுப் பசி - முஸ்லிம் சமுதாயம்...!


அறிவுப் பசியை மறந்த முஸ்லிம் சமுதாயம்.....!

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் முஸ்லிம் சமுதாய மக்களிடையே மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அல்லது ஏற்பட்டு வருகின்றன.  ஒரு காலத்தில் அறிவுப் பசிக்கு முக்கியத்துவம் கொடுத்த முஸ்லிம்கள், இன்று வயிற்றுப் பசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். விதவிதமான உணவுகளை உண்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். அதற்காக நாள்தோறும் உணவுச் சந்தைகளுக்கு செல்கிறார்கள். தங்களது பகுதிகளிலும் நடக்கும் உணவுத் திருவிழாக்களில் கலந்துகொண்டு, சுவையான உணவுகளை ரசித்து சாப்பிடுகிறார்கள். 

அறிவுப் பசி - நூலகங்கள்:

தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும்  பகுதிகளில் ஏராளமான நூலகங்கள், புத்தக விற்பனை கடைகள் இருந்தன. இந்த நூலகங்களுக்கு நாள்தோறும்  நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்று படித்து வந்தார்கள். பழைய டெல்லியில் இப்படி பல நூலகங்கள் இயங்கி வந்தன. இந்த நூலகங்களுக்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்துச் சமுதாய மக்களும் விரும்பி சென்று பயன் அடைந்தனர். 

இதனால், மக்களிடையே அறிவு வளர்ந்து, நல்ல சமுதாயம் உருவானது. மதசார்பற்ற தன்மை தழைத்தது. நாள்தோறும் நூலகங்களுக்கு வரும் நண்பர்கள், பிற மத சகோதரர்களை சந்தித்து பேசி மகிழ ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியது. இதன்மூலம் மக்களிடையே அன்பு வளர்ந்தது. 

இதேபோன்று, பழைய டெல்லி பகுதியில் இயங்கி வந்த புத்தக விற்பனைக் கடைகளில் ஏராளமான இதழ்கள் கிடைத்தன. கவிதை, தத்துவம், அறிவியல், என அனைத்துத் துறையைச் சேர்ந்த புத்தகங்களும் கண்ணில் பட்டன. அதை வாங்க மக்கள் ஆர்வம் கொண்டார்கள். பணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நல்ல நல்ல புத்தகங்களை தேடி தேடி வாங்கி படித்தார்கள். பிறருக்கும் அதைப் பற்றிய தகவல்களை கொடுத்து, அவர்களின் அறிவுப் பசிக்கு தீனி போட்டார்கள். 

உணவுப் பசியால் ஏற்பட்ட மாற்றம்:

ஆனால், தற்போது மாறிவரும் நவீன காலத்தில் முஸ்லிம் சமுதாய மக்களியே, அறிவுப் பசி குறைந்து, உணவுப் பசி அதிகரித்த்துள்ளது. இதன் காரணமாக பழைய டெல்லியில் தற்போது மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிகிறது. பல பழையான நூலகங்களை அங்கு இப்போது காண முடியவில்லை. மேலும் பழைய டெல்லி வீதிகளில் குவிந்து கிடந்த புத்தக விற்பனை கடைகளும் குறைந்துவிட்டன. 

ஏராளமான நூலகங்கள், உணவு விடுதிகளாக மாறி விட்டன. அங்கு விதவிதமான உணவு வகைகள் வினியோகம் செய்யப்படுவதால், அதை ஒரு கைப்பிடிப்பதில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் நூலகங்களை தேடி பழைய டெல்லிக்கு வந்த மக்கள், தற்போது, உணவுகளைத் தேடி பழைய டெல்லிக்கு வந்துக் கொண்டிருக்கிறார்கள். 

இத்தகைய போக்கு முஸ்லிம் சமுதாய மக்களிடையே மட்டுமல்ல, பிற சமுதாய மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால், பழைய டெல்லி பகுதியில் இயங்கிவரும் உணவு விடுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.  அங்கு செயல்பட்டு வரும் ஒருசில நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. சில நூலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. புத்தக விற்பனை நிலையங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு விற்பனை இல்லை. இதனால், அதன் உரிமையாளர்களுக்கு வருமானம் குறைந்துவிட்டது. 

சென்னை, லக்னோவின் நிலை:

பழைய டெல்லியில் மட்டும் இந்த நிலைமை இல்லை. சென்னை, லக்னோ, பாட்னா, போபால், இந்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் தற்போது இதே  நிலை இருந்து வருகிறது. சென்னை மண்ணடி பகுதியில் இயங்கி வரும் நவீன உணவு விடுதிகளுக்கு, வெளிப்பகுதிகளில் இருந்து நாள்தோறும், ஏராளமான இளைஞர்கள் வந்து செல்கிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இளைஞர்களின் கூட்டம் காரணமாக, மண்ணடி உணவு விடுதிகளில், விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த பகுதிகளில் இயங்கிய புத்தக விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்டத்தக்க அளவுக்கு மட்டுமே ஒருசில புத்தக விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கும் மிகப்பெரிய அளவுக்கு விற்பனை இல்லை. 

இதேபோன்று, மண்ணடி உட்பட சென்னையின் பல பகுதிகளில் இயங்கி வந்த தனியார் நூலகங்களை தற்போது காண முடியவில்லை. அரசு நூலகங்களிலும் மக்கள் கூட்டம் இல்லை. நூலகங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லை. குறிப்பாக இளைஞர் சமுதாயம் நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து இன்னும் அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். 

முஸ்லிம் சமுதாயம் உணர வேண்டும்:

இஸ்லாத்தில் கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. "இறைவா என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக" என பிரார்த்தனை செய்யும்படி ஏக இறைவனின் திருவாக்கான திருக்குர்ஆனில் இறைவன் மக்களுக்கு அறிவுத்துகிறான். 

இதேபோன்று, "சீன தேசம் சென்றாவது சீர் கல்வியை பெறுங்கள்"  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்ல போதனையை செய்துள்ளார். 

இதன்மூலம் மக்களுக்கு அறிவு எவ்வளவு முக்கியம என்பது தெரிய வருகிறது. பள்ளி, கல்லூரி படிப்பு முடித்துவுடன், கல்வி முடிந்து விடுவதில்லை. அதற்குப் பிறகுதான் உண்மையான அறிவுத்தேடல் தொடங்குகிறது. 

உலகம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான நடக்கும் சதிகளை மக்கள் இன்னும் அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனால் கவலைப்படாமல் இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் மிகப்பெரிய பின்விளைவுகள் குறித்து உணர்ந்துக் கொள்ளாமல், உணவுப் பசிக்கு முஸ்லிம்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். 

நல்ல நல்ல உணவுகளை சாப்பிடுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், நல்ல நல்ல நூல்களை தேடி தேடி கண்டுபிடித்து வாசிக்க வேண்டும் அல்லவா. நாள்தோறும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லவா. 

நாள்தோறும் நல்ல நூல்களை வாசித்து, தங்கள் பகுதிகளில் நூலகங்களை வளர்த்து அதன்மூலம், நல்ல பண்புள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாற வேண்டும். இதன்மூலம் மட்டுமே முஸ்லிம்களுக்கு நல்ல உயர்வான கண்ணியம் கிடைக்கும்.  நவீன தொழிற்நுட்பங்களுடன், சமூக வலைத்தளங்களையும் நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய சமநிலையை சமுதாயம் ஏற்படுத்திக் கொண்டால், நல்ல மாற்றம் ஏற்படும் என்பது உறுதி.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: