Tuesday, July 11, 2023

சனாதன அதிகாரம் தவிடு பொடியாவது நிச்சயம்.....!

 

னாதன அதிகாரம் தவிடு பொடியாவது நிச்சயம்.....!

டாக்டர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.. கருத்து….!!




கடந்த 1951-ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 10 சதவீதமாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 60 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 2011-ஆம் ஆண்டு 14 சதவீதமாக உயர்ந்திருந்தது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக உயர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மக்கள் தொகையில் 20 கோடிக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்.

 

இந்த எண்ணிக்கையின் வாயிலாக, இந்தோனேசியா, மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக உலகத்தின் மூன்றாவது அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா அறியப்படுகிறது.

அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய இந்தியாவில் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இந்திய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.

 

கடந்த 1952-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 4 சதவீதமாக இருந்தது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சதவீதம், அதாவது 2019ஆம் ஆண்டு 4 புள்ளி 9 சதவீதமாக உயர்ந்தது.

 

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர் இல்லாத நிலையில், அந்த மக்களுக்காக யார் குரல் கொடுப்பார்கள்? அந்த மக்களின் உரிமைகளுக்காக யார் பேசுவார்கள்? அந்த மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி போன்றவை எங்கனம் அதைப் போன்றதொரு அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும்?

 

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில், உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில், முஸ்லிம்களின் நிலை கேட்பாராற்று கிடக்கிறது.

 

ஆம், இன்றைய ஆட்சியாளர்களால், இஸ்லாமிய மக்கள் இந்திய தேசத்தில் அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட உரிமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

 

545 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள இந்தியாவில், பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 8. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் அதுவே 6-ஆக குறைந்துவிட்டது.

 

பாஜக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்ட அத்தனை முஸ்லிம்களும் மேற்படியிலான இரண்டு தேர்தலிலும் சொந்த கட்சியினராலேயே தோற்கடிக்கப்பட்டனர்.

 

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தில் சுமார் 400 பேர் உறுப்பினர்களாக உள்ளன.

 

ஆனால், அமெரிக்கா சென்று, இந்தியாவில் மதமாச்சரியங்கள் எதுவுமே இல்லை என்று பச்சைப்பந்தலில் தாலியறுப்புக்கு நிகரான பொய்யான தகவலை கூறியுள்ள பித்தலாட்ட, பிதற்றல்  நாயகனின் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகம் சார்பில் ஒருவர் கூட அமைச்சராக இல்லை.

 

இன்னுமொரு பேரதிர்ச்சி என்னவென்றால், பாஜகவைச் சார்ந்த 303 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது.

 

சுமார் 40 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த ஒரு முஸ்லிம் எம்.எம்..வோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை.

 

மக்கள் தொகையில் இஸ்லாமியர்களை 14 சதவீதமாக கொண்டுள்ள உத்தரகாண்ட் மாநிலம், 8 சதவீதம் இஸ்லாமிய மக்களை கொண்டுள்ள கோவா, மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இருந்து ஒருமுறை கூட ஒரு இஸ்லாமியானும் சுதந்திர இந்தியாவில் இதுவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்படப்படவில்லை என்பது ஜனநாயக நாட்டிற்கான அவலம்.

 

ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படும் சமூகம் முடிந்தவரை பொறுத்து பொறுத்து பார்க்கும்.

 

அரசு தடைகளால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகும் சமூகம், ஒரு காலத்தில் அந்த தடைகளை தகர்த்தெறிவதற்கான சக்தியை தானே சுயமாக பெறக்கூடும்.

 

ஆட்சி அதிகாரம் செய்பவர்களின் வெறுப்பு பேச்சும், அத்துமீறல்களும் அந்த மக்களை ஒன்றிணைய வைக்கும். அது மாபெரும் சக்தியாக ஒரு காலத்தில் உருபெரும்.

 

அப்போது இந்த சனாதன சாக்கடை அதிகாரம் தவிடு பொடியாவது நிச்சயம்.

 

(திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.. டாக்டர் இனிகோ இருதயராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகள் இவை)

No comments: