முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரம்..!
நாட்டில் வாழும் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள், அமைதியாக, மகிழ்ச்சியாக வாழவே கூடாது என்ற ஒரே கொள்கையுடன் இந்துத்துவ அமைப்புகள் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகின்றன. அதற்காக அனைத்து சக்திகளையும் அவை பயன்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, ஊடகத் துறை, சமூக வலைத்தளம் ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பி, முஸ்லிம்கள் குறித்து பிற சமுதாய மக்கள் மத்தியில் தப்பான எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம், நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்கி முஸ்லிம்களின் அமைதியை சீர்குலைக்கின்றன. முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன.
மணிப்பூர் விவகாரம்:
முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்கள், போலி செய்திகள் ஆகியற்றை செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள் பரப்பி வருவதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அண்மையில், நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த மணிப்பூர் பாலியல் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து தகவல்களை வெளியிட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனம், அதில் அப்துல் ஹிலிம் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என செய்தியை பரப்பியது.
இந்த செய்தியின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியும் முஸ்லிம் இளைஞர் கைது என பரபரப்பான செய்தியை ஒளிபரப்பியது.
இதேபோன்று, பாசிச அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில், மணிப்பூர் பாலியல் வன்முறையில் முஸ்லிம் இளைஞர் கைது என போலி தகவல்களை பரப்பின.
இப்படி போலியாக பரப்பும் தகவல் மற்றும் செய்திகளால் எத்தகைய விபரீத பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. முஸ்லிம்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் பதற்றதை உருவாக்க வேண்டும். இதுதான் பாசிச அமைப்புகளின் ஓரே திட்டம். மணிப்பூர் விவகாரத்தில் அந்த திட்டத்தை சரியாக பாசிச அமைப்புகள் நிறைவேற்றின.
மன்னிப்பு கேட்ட ஏஎன்ஐ:
மணிப்பூர் பாலியல் வன்முறை விவகாரத்தில் முஸ்லிம் இளைஞர் கைது என போலி செய்தி வெளியிட்டு நாடு முழுவதும் பரப்பிய ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, அது வெளியிட்ட தகவல் பொய் மற்றும் போலியானது என சமூக நலனில் அக்கறை கொண்ட சிலர், ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஎன்ஐ நிறுவனம், தான் வெளியிட்ட செய்தியை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்துக் கொண்டு செய்தி வெளியிட்டது.
இதேபோன்று, புதிய தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசிய திருச்சியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், மணிப்பூர் பாலியல் வன்முறையில் முஸ்லிம் இளைஞர் கைது என்ற செய்தியை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிட்டடீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த போலி செய்தி குறித்து வருத்தம் தெரிவித்து, செய்தி வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, புதிய தொலைக்காட்சி நிறுவனம், தான் வெளியிட்ட செய்தியை நீக்கியதுடன், வருத்தமும் தெரிவித்துக் கொண்டது.
மணிப்பூரில் முஸ்லிம் இளைஞரின் மனிதநேயம்:
மணிப்பூரில் கலவரம், வன்முறை வெடித்தபோது, முஸ்லிம் இளைஞர்கள் சிலர், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பல பெண்களை காப்பற்றியுள்ளனர்.
இப்படி காப்பாற்றப்பட்ட பெண் ஒருவர் குறித்த செய்தி Quint என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பாலியல் வன்கொடுமைக்கு இலக்கான குக்கி இன பெண், தன்னை ஒரு முஸ்லிம் எப்படி காப்பாற்றினார் என்பதை விவரிக்கிறார். முஸ்லிம் இளைஞர் மூலம் மட்டுமே தான் பாதுகாப்புடன் வீடு சென்று சேர முடிந்தது என அந்த பெண்மணி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இதன்மூலம், ஒரு முஸ்லிமிடம் எதிர்பார்க்கப்படும் பொறுப்புணர்வை அந்த முஸ்லிம் நிறைவேற்றியுள்ளார்.
ஆனால், இது குறித்த தகவல்களை மீடியாக்கள் வெளியிடுவதில்லை. மறைத்து விடுகின்றன. அதற்கு ஒரே காரணம், முஸ்லிம் என்ற பெயர்தான். முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதில் பாசிச மீடியாக்கள் உறுதியாக உள்ளன. முஸ்லிம்கள் குறித்து தவறான தகவல்கள், போலி செய்திகள் ஆகிவற்றை பரப்புவதில் நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் உறுதியாக உள்ளன. ஊடக அறம் நாட்டில் தற்போது கொஞ்சம் கூட இல்லை என்றே கூறலாம்.
முஸ்லிம்கள் விழித்துக் கொள்ள வேண்டும்:
முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான இதுபோன்ற பொய்யான செய்திகள், தகவல்களை பார்க்கும், படிக்கும் முஸ்லிம்கள், அதன் உண்மை தன்மை அறிந்து கொண்டு, உடனடியாக, செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு தவற்றை சுட்டிக் காட்ட வேண்டும்.
மேலும், சமூக வலைத்தளத்தில் அதுகுறித்த உண்மை தகவல்களை ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
மணிப்பூர் வன்முறை, கலவரங்களில் முஸ்லிம்கள் செய்த மனிதநேயம், தியாகம் ஆகிவற்றை மற்றவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். அதற்காக சமூக வலைத்தளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
போலி செய்திகளை கண்டு ஆத்திரம் அடைந்து, பாசிச சக்திகளை போன்று முஸ்லிம் சமுதாயமும் தவறான பாதையில் செல்லக் கூடாது. பொறுமை மற்றும் சரியான அணுகுமுறையில் பிரச்சினையை கையாள வேண்டும்.இதன்மூலம் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்திற்கு நற்பெயர் கிடைக்கும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment