Tuesday, July 4, 2023

தனிநபர் களின் சமூக சேவைகள்.....!

 


தனிநபர் களின் சமூக சேவைகள் - நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்....!


இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளைத் தவிர சமூகத்திற்கும், மனித இனத்திற்கும் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக உள்ளன.  ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகிய கடமைகளை ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என மார்க்கம் நமக்கு சொல்லித் தருகிறது. இதில், வசதியானவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வசதி இல்லாத முஸ்லிம்கள், தங்களுக்கு வசதி, வாய்ப்புகள் கிட்டும்போது, அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லும் நெறிமுறைகள் ஆகும். 

இந்த முக்கிய 5 கடமைகளுடன் மட்டுமே முஸ்லிம்களின் பொறுப்புகள், கடமைகள் முடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும், தனது குடும்பத்திற்கும், வீட்டிற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து மனித இனத்திற்கும் ஆற்றிய வேண்டிய சேவைகள் ஏராளமாக உள்ளன. அத்தகையை சேவைகளை செய்வதன் மூலம் மட்டுமே, ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி பிறக்கும். 

இஸ்லாத்தில் தனிநபர் உரிமைகள்: 

இஸ்லாத்தில்  தனி நபர்களின் உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மறுமை நாளில், நியாயத் தீர்ப்பின்போது, உலகில் ஒருவரின் உரிமையை நாம் பறித்து மீறி இருக்கும் நிலையில், அந்த மனிதர் மன்னிக்கும் வரை ஏக இறைவனும் நம்மை மன்னிக்க மாட்டான் என உலமா பெருமக்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆக, தனி நபர்களின் உரிமைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரிய வருகிறது. 

அண்டை வீட்டாரின் உரிமைகள், அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களின் உரிமைகள், நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உரிமைகள் என அனைத்து உரிமைகளையும் நாம் கவனத்துடன் கையாள வேண்டும். கடைப்பிடித்து நிறைவேற்ற வேண்டும். 

"ஒருவரை பார்த்து புன்சிரிப்பு சிரிப்பதுக் கூட ஒரு தர்மமே" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அழகாக சொல்லியுள்ளார்கள். 

"உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இதேபோன்று "உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஏக இறைவன் தனது திருமறையில், "நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்" (அல்குர்ஆன் 3:92) என மிக அழகாக உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து சொல்லியுள்ளான். 

தனிநபர் சமூக சேவைகள்:

மாறிவரும் நவீன சூழ்நிலைகளுக்கு ஏற்ப இஸ்லாமிய குடும்பங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களுடைய மஹல்லாவில் இருக்கும் சகோதரர்கள் குறித்து கூட முஸ்லிம்கள் சரியாக இருந்துக் கொள்ளாமல் இருக்கும் நிலை தற்போது உள்ளது. ஏன், அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன, அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது போன்ற தகவல்களையும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்வதில்லை. அதில் ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகைய போக்கை இஸ்லாம் விரும்புவதில்லை. 

நம்முடைய குடும்பத்தாருக்கு செய்யும் கடமைகள், உரிமைகளைப் போன்றே, மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உறவினர்களை அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, சந்திக்க முடியவில்லை எனில், செல்போனில் தொடர்புக் கொண்டு பேசுவது, நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ச்சி அடைவது என பல்வேறு நிலைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

அத்துடன், அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளில், யாருக்காவது உதவி செய்ய முடிந்தால், கவுரவம் பார்க்காமல் கட்டாயம் உதவி செய்ய வேண்டும். அது பண உதவியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக, முதியவர் ஒருவரை பேருந்தில் ஏற்ற உதவி செய்வது, ஒருவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, மருத்துவமனைகளில் இருக்கும்போது, நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என பல்வேறு நிலைகளிலும் நாம் நல்ல சமூக சேவைகளை செய்ய முடியும். 

கல்வியில் ஆர்வம் உள்ள ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை சொல்லித் தரலாம், அவர்களுக்கு தேவையான கல்வி ஆலோசனைகளை கூறலாம். வேலைவாய்ப்புகள் குறித்து நல்ல தகவல்களை எடுத்துக் கூறலாம். மேற்படிப்பு உள்ளிட்ட தகவல்களை திரட்டி, தங்கள் பகுதியில் உள்ள ஏழை, நடுத்தர மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். 

இத்தகைய தனிநபர் சமூக சேவைகள் மூலம், நமக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும்.  இத்தகைய சேவைகள் மூலம் மனிதர்கள் மத்தியில் அன்பு பாலம் உருவாகும். 

கவனம் செலுத்த வேண்டும்:

ஒருவர் மனித இனத்திற்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும் என மிக அழகாக நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த பொன்மொழியை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். இருந்தும், பிற மனிதர்களின் உரிமைகளை காக்க முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதற்கு முக்கிய காரணம், வேகமான, நவீன உலகில், முஸ்லிம்களும் தங்களை மறந்து வேகவேகமாக பயணித்துக் கொண்டு இருப்பதுதான். இதன் காரணமாக தங்களது கடமைகளை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். 

ஐந்து முக்கிய கடமைகளை நிறைவேற்றினால் போதும் என்ற மனப்பான்மை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. இது தவறான நிலையாகும். தனிநபர் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அந்த உரிமைகளை காக்க முஸ்லிம்கள் தங்களது கடமைகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பணம் செலவு செய்யாமலேயே நாம் மற்றவர்களின்  உரிமைகளை, கடமைகளை நிறைவேற்ற முடியும். 

உதாரணமாக, வயதான முதியோர்களுக்கு உதவி செய்தால், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிக்கரம் நீட்டுவது, பணிபுரியும் இடத்தில் அனைவரிடமும் அன்புடன் பழகுவது, அவர்களின் இன்பம், துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வது, முக்கிய நாட்களில் வாழ்த்துக்களை பரிமாற்றிக் கொள்வது என பல்வேறு நிலைகளில் நாம் மற்றவர்களின் உரிமைகளை நிறைவேற்ற முடியும். 

ஒரு மனிதன் தன்னிடம் என்ன சொத்து வைத்துக் கொண்டிருக்கிறான் என்பது முக்கியம் அல்ல. ஆனால், அவன் மற்றவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறான். அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுகிறானா, அவர்களுக்கு நல்லது செய்கிறானா என்பதுதான் கேள்வி. 

சமூக சேவை செய்வது ஒரு குழுவாக அமைத்து செய்வது மட்டுமல்ல, தனியாகவும் செய்ய முடியும். பல சூழ்நிலைகளில் பலர் செய்யும் சேவைகள் மூலம்  நாம் இதனை அறிந்துக் கொள்ள முடிகிறது. சமூக சேவை செய்வது கவுரவக் குறைவு கிடையாது. அது ஒரு பெருமை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

எனவே, இனி வரும் நாட்களில், சமூக சேவைகளில் முஸ்லிம் சமுதாயம் கொஞ்சம் ஆர்வம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, நாட்டில், அமைதி, மகிழ்ச்சி சகோதரத்துவம் உருவாகும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: