Saturday, July 15, 2023

மகாராஷ்டிராவில் வரலாற்று சிறப்புமிக்க மசூதிக்கு சீல்....!

              


                மகாராஷ்டிராவில் வரலாற்று சிறப்புமிக்க மசூதிக்கு சீல்....!

இந்துத்துவ அமைப்பு நிலம் உரிமை கொண்டாடியதையடுத்து நடவடிக்கை...!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் மீது இந்துத்துவ அமைப்புகளின் பார்வை தற்போது திரும்பி இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி பள்ளிவாசல் தேசியளவில் பேசும் பொருளாகியுள்ளது.

பழைய காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில், கிபி 1699-இல் ஞான வாபி பள்ளிவாசல் நிறுவப்பட்டதாகவும், இங்கு வழிபாடு நடத்திட தங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 

இதேபோன்று,  மதுராவில் உள்ள ஈத்கா பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. கிருஷ்ண ஜென்மபூமி என்று கருதப்படும் இடத்தில், மதுரா கிருஷ்ணர் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 17ஆம் நூற்றாண்டில் ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்றும் அதனை மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு மீட்டுத் தரவேன்டும் என்றும் வழக்கு போடப்பட்டுள்ளது. 

வழிபாட்டு இடங்கள் சிறப்பு  சட்டம்: 

இராம-ஜென்ம பூமி -பாபர் மசூதி தொடர்பாக ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து, மத வன்முறை மற்றும் சமூகவிரோத சிந்தனைகளை களைய, கடந்த 1991ம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் இயற்றப்பட்டது. 

பிரிவு 4ன் கீழ், 1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தண்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாரு அதேபோன்று தொடர்ந்து இருக்கும். 1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று இருந்தவாறான வழிபாட்டு இடம் எதனையும் உருமாற்றம் செய்ய தடை செய்வதற்கும், வழிபாட்டு இடம் அதனின் சமயத் தன்மை பேணுவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இருப்பினும், தொல்பொருள் ஆய்வுமனைகள் மற்றும் எஞ்சி நிற்பவைகள் (The Ancient Monuments and Archaeological. Sites and Remains Act -1958) சட்டம் வாயிலாக பாதுகாக்கப்பட்டுள்ள தொன்மையான மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

அயோத்தி விவகார வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த அளித்த தீர்ப்பில், "1991 வருட வழிபாட்டு இடங்கள் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு அடிநாதமாக உள்ளது. கடந்தகால தவறுகள், நமது எதிர்கால சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான முகலாயர்கள் நடவடிக்கைகள் தொடர்பான எந்த வழக்கையும் நீதிமன்றம் ஏற்காது"என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிவாசல்கள் குறிவைப்பு:

கடந்த 1991ம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் இயற்றப்பட்ட போதும், அதைப் பற்றி கவலைப்படாமல், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் மீது இந்துத்துவ அமைப்புகளின் பார்வை தற்போது திரும்பியுள்ளது.  இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான முகலாயர்கள் நடவடிக்கைகள் தொடர்பான எந்த வழக்கையும் நீதிமன்றம் ஏற்காது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டபோதும்,  அதை கொஞ்சமும் இந்துத்துவ அமைப்புகள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து பிரச்சினையை உருவாக்கிக் கொண்டே வருகின்றன. 

நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களின் இடங்கள் தங்களுக்கு சொந்தமானது என்றும், எனவே பள்ளிவாசல்கள் மூடப்பட்டு அந்த இடங்கள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த வகையில், வாரணாசி  ஞான வாபி பள்ளிவாசல் தற்போது பிரச்சினையில் இருந்து வருகிறது. 

மகாராஷ்டிரா மசூதிக்கு சீல்:

இந்நிலையில், மகாராஷ்டிராவின் எராண்டோல் நகரில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான மசூதிக்கு இந்துத்துவா அமைப்பின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக சீல் வைத்துள்ளது. 

 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மசூதி, இந்து மதக் கட்டமைப்பை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவ அமைப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம், மசூதியின் அறக்கட்டளை சட்டவிரோதமாக தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக இந்துத்துவ அமைப்பின் தலைவர் பிரமோதுசதன் தண்ட்வாட் என்பவர் ஜல்கான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அமன் மிட்டல், மனுதாரர், மசூதி அறங்காவலர், வருவாய் அலுவலர், இந்திய தொல்லியல் துறையின் பிரதிநிதி உட்பட அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் வரவழைத்து அவர்களின் வாதங்களைக் கேட்றிந்தார். 

முழுமையான விவாதங்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியர் மிட்டல், மசூதியில் தொழுகையைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் பிரச்சினையைச் சுற்றியுள்ள உணர்திறன் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 ஐ அமல்படுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க வக்ஃப் அதிகாரிகளிடம் நிர்வாகம் உரிய ஆவணங்களைக் கோரியுள்ளது.

அவுரங்காபாத் உயர்நீதிமன்றத்தில் வாதம்:

வரலாற்று சிறப்பு மிக்க மசூதிக்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து மசூதியை பராமரிக்கும் பொறுப்பான மசூதி கமிட்டி அறக்கட்டளை, உடனடியாக அவுரங்காபாத் உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்த விஷயத்தின் அவசரத்தை வலியுறுத்தி, மசூதியில் தொடர்ந்து தொழுகை நடத்த அறக்கட்டளை அனுமதி கோரியது. இருப்பினும், இந்த வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் இன்னும் பட்டியலிடவில்லை.

அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஹித் நதீம், மசூதி பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்தில் இருப்பதால், அதற்கு சீல் வைக்கும் மாவட்ட ஆட்சியரின் முடிவு சட்டவிரோதமானது என்று வாதிட்டார். மேலும் வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களை வக்ஃப் தீர்ப்பாயம்தான் தீர்க்க வேண்டும் என்று வாதிட்ட அவர், மாவட்ட ஆட்சியர்  தனது உரிய அதிகாரத்தை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும்  மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டுள்ள நபர்களை வீடியோ வடிவில் வழக்கறிஞர் நதீம் முன்வைத்தார். அத்துடன் அதன் வக்ஃப் நிலையை சரிபார்க்கும் ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதேநேரத்தில், பாண்டவர் வர சங்கர்ஷ் சமிதி எனப்படும் இந்துத்துவா குழு, முன்பு அதே இடத்தை ஆக்கிரமித்திருந்த பாண்டவர் வரா அமைப்பை இடித்து மசூதி எழுப்பப்பட்டதாகக் கூறியுள்ளது. 

அமைதியை சீர்குலைக்கும் அமைப்புகள்:

நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என பெரும்பாலான இந்துமத சகோதர்ரகள் விரும்புகிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பணியாற்ற வேண்டும் என நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்ட மக்கள் விரும்புகிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயக நெறிமுறைகள் காக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பு மக்களும் ஆசைப்படுகிறார்கள். 

ஆனால், ஒருசில இந்துத்துவ அமைப்புகள், நாட்டில் தொடர்ந்து பிரச்சினையை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம்கள் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, நாட்டில் அமைதியை சீர்குலைத்து வருகிறார்கள். அந்த வகையில் நூற்றுக்கணக்கான மசூதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற தேர்தல் நேரம் நெருங்க நெருங்க இத்தகைய பிரச்சினைகள் மேலும் தொடர்ந்து தலை தூக்கிக் கொண்டே இருக்கும். இந்துத்துவ அமைப்புகளின் பாசிச சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூக நல்லிணக்கத்தில் உறுதிக்கொண்ட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான, பதற்றமான சூழ்நிலையை தணிக்க உதவும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: