ஒற்றுமையாக இருப்பதே முஸ்லிம்களுக்கு பெருமை.....!
இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியை நெருங்கி வரும் நிலையில், உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ப முஸ்லிம்களின் வாழ்க்கை முறையும் மாறுப்பட்டே உள்ளது. ஓர் இறைக் கொள்கையில் அனைத்து முஸ்லிம்களும் உறுதியாக இருக்கும்போதும், மாநிலத்திற்கு மாநிலம் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
பலவீனமான ஒற்றுமை:
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் மொழி, பேச்சு, உடை என பல்வேறு நிலைகளிலும் மாறுப்பட்ட நிலை இருந்து வருகிறது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள், வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதேபோன்று, உணவு, உடை உள்ளிட்ட விவகாரங்களிலும் மாறுப்பட்ட தன்மை இருந்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பலவீனமாக ஒற்றுமை நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இறைக் கொள்கையில் உறுதியாக இருந்தபோதும், தங்களுடைய பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், மாறுப்பட்டு இருப்பதால், பல்வேறு பிரச்சினைகளில் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இருப்பது இல்லை. இத்தகைய ஒற்றுமை இல்லாத காரணத்தில், நாட்டில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் மேலும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.
ஒற்றுமையே வலிமை:
ஒரு முஸ்லிம் விசுவாசியாக கலிமாவின் அடித்தளமாக இருப்பது அவசியம். இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூல் அல்லாஹ் என்ற கலிமாவை நாம் சொல்லும்போது, நம்மிடையே ஒற்றுமையின் வலிமை அவசியம் இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கருத்தொற்றுமையுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.
ஒருமித்த ஒற்றுமையின் அடிப்படையில், சமூகம் வலுவாக இருக்க வேண்டும். குழப்பத்தில் இருக்கும் சமூகமும் தேசமும், அந்த சமூகம் பலவீனமடைகிறது. அதன் வார்த்தைகளின் கனம் மற்றும் அதன் நிலையை நாம் இப்போது சந்திக்க முடிகிறது. நாட்டில் இன்று முஸ்லிம் சமூகத்தின் நிலைமை மிகவும் பரிதாபம் அடையும் வகையில் உள்ளது. முஸ்லிம்கள் மத்தியில் கருத்துவேறுபாடும் முரண்பாடும் நிலவுவது வேதனைக்குரியது.
நாட்டில் நூற்றுக்கணக்கான கடவுள்களை வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு எதிராக ஒரே மேடையில் தங்களுக்குள் ஒன்றுபட்டுள்ளனர், ஆனால் ஒரே அல்லாஹ்வை வணங்குபவர்கள் நூற்றுக்கணக்கான பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இன்றைய பெரும்பாலான சமூகச் சச்சரவுகளுக்கும் பரஸ்பர குழப்பங்களுக்கும் காரணம் தன்முனைப்பும், மேன்மைக்கான ஆசையும் மட்டுமே காரணமாக உள்ளது.
ஒற்றுமையே முஸ்லிம்களின் பெருமை:
முஸ்லீம்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருப்பது மகிமையல்ல. ஈயச் சுவர் போல் அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீதும் ஷரீஅத்தின் மீதும் ஒற்றுமையாக இருப்பதே முஸ்லிம்களின் பெருமையாக இருக்க வேண்டும். ஒரு இமாமின் வழிகாட்டுதலின் கீழ் மசூதிக்குள் உங்கள் வாழ்க்கையை எப்படிக் கழிக்கிறீர்களோ, அதுபோல் மசூதிக்கு வெளியே ஒரு அமீரின் அதிகாரத்தின் கீழ் உங்கள் வாழ்க்கையை ஒரு உம்மாவாகவும், ஒரு சமூகத்தை கட்சி அமைப்பாகவும் வாழ வேண்டும்.
சமூகத்தில் முரண்பாடுகள் மற்றும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், ஒருவருக்கொருவர் உரிமைகளை நிறைவேற்றுவதற்கும், ஏதேனும் சர்ச்சைகள் ஏற்பட்டால், அதை வருடங்கள் மற்றும் தலைமுறைகளாக மாற்றாக் கூடாது.
அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைப்படி முஸ்லிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் மக்களுக்கு முன்மாதிரியாக மாறினால், அவர்களின் நிலைகளும் மாறும். நம் வாழ்வுக்கும் மற்றவர்களின் வாழ்வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, அதனால் நம் நிலை மோசமடைந்து மேலும் மோசம் அடைகிறது.
நல்ல செயல்களால் அழைப்பு:
நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வார்த்தைகளாலும், செயலாலும், முன்மாதிரியாக திகழ்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஒரு முஸ்லிமின் வாழ்க்கை அவருடைய ஒவ்வொரு செயலும் இஸ்லாத்தையும் ஷரியாவையும் காட்டுவதாக இருக்க வேண்டும். .
இஸ்லாம் நீதி, நியாயம், கருணை, சகிப்புத்தன்மை மற்றும் உறவினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆபாசம், மனிதாபிமானமற்ற செயல்களில் இருந்து, குழந்தைகளுக்கு மதக் கல்வி மற்றும் அவர்களின் தார்மீகப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும். அத்துடன், தங்களது அமீருக்குக் கீழ்ப்படிந்து கூட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிதல் என்பது நமது மார்க்கம் மற்றும் நம்பிக்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். அது இஸ்லாமிய அமைப்பின் நடைமுறை வடிவம் ஆகும். ஒற்றுமை மற்றும் கருத்தொற்றுமையின் முக்கியத்துவம், கல்வியின் அவசியம் மற்றும் ஷரியா ஆகியவை குறித்து முஸ்லிம் இளைஞர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நாம் எடுத்துரைக்க வேண்டும்.
ஒவ்வொரு நகரத்திலும் முஸ்லிம் மஹல்லாக்களில் ஒற்றுமையின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையை முஸ்லிம் குடும்பங்களில் உறுதியுடன் கடைப்பிடிக்க வழிகளை உருவாக்க வேண்டும். அதற்காக மதரஸாக்களை நிறுவி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒற்றுமை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு:
நாட்டில் முஸ்லிம் சமுதாயம் தற்போது சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நம்மிடையே மிகமிக அவசியமானது ஒற்றுமை ஒன்றே ஆகும். பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். இதற்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டு நிலைகளை எடுக்காமல், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகமும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதன்மூலம் முஸ்லிம்களின் ஒற்றுமையின் பலத்தை நாம் எடுத்துக்காட்ட வேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த நடக்கும் சூழ்நிலைகளை நாம் முறியடிக்க வேண்டும். ஒற்றுமை மிகப்பெரிய ஆயுதம் என்பதையும் அதன்மூலம், தீராத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. உலகில் நடந்த விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் ஒற்றுமையின் மூலம் வெற்றி பெற்று இருக்கின்றன. இதனை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, எத்தகைய சூழ்நிலையிலும் பிரிந்துவிடாமல், ஒற்றுமை ஒன்ற கயிற்றை உறுதியாக பிடித்துக் கொண்டு, வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment