குழந்தைகளின் மூளை வளர்ச்சி.....!
இனி பெற்றோர்களின் கையில்....!!
மாறிவரும் நவீன கால சூழ்நிலைகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. குழந்தைகளும் சமூகத்தில் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் கலந்துரையாடுவது கிடையாது. அல்லது உரிய ஆலோசனைகளை பெறுவதில்லை. இதன் காரணமாக பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையேயான அன்பு இடைவெளி அதிகமாகி கொண்டே செல்கிறது. அத்துடன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசாத காரணங்களால், அந்த குழந்தைகள் மன, உடல் ரீதியாக பாதிப்புகளை சந்திக்கிறார்கள்.
டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வு:
அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் வளர்ச்சி ஆய்வாளர் தலைமையிலான குழு, அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதாவது, பிறந்த குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்கள் மனம் விட்டு பேசுவதால், எத்தகைய பயன்கள் கிடைக்கின்றன. அதன்மூலம் குழந்தைகளின் உடல்நலம் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது, மூளை வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிறந்த குழந்தைகளுடன் பேசும் பெற்றோர்கள் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துவதைக் காட்டும் மிக அழுத்தமான ஆதாரங்கள் சிலவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் டெவலப்மென்ட் காக்னிட்டிவ் நியூரோ சயின்ஸின் அச்சு இதழிலும் ஆன்லைனிலும் வெளியிடப்பட்டது.
ஆய்வில் பரபரப்பு தகவல்கள்:
இந்த ஆய்வில், அதிக வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள் ஏன் சிறந்த மொழித்திறனைப் பெறுகிறார்கள் மற்றும் அந்த பொறிமுறையை எந்த செயல்முறை எளிதாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான வழி கிடைத்து இருப்பதாக ஆய்வாளர் ஸ்வான்சன் கூறியுள்ளார். மூளையில் உள்ள வெள்ளைப் பொருள் பல்வேறு சாம்பல் நிறப் பகுதிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது என்றும் அங்கு மூளையில் தகவல் செயலாக்கம் நடைபெறுகிறது என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள எட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் சியாட்டில், பிலடெல்பியா, செயின்ட் லூயிஸ், மினியாபோலிஸ் மற்றும் மினியாபோலிஸ் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவத் தளங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து 52 குழந்தைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். குழந்தைகள் 9 மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டு மொழி பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் மற்றும் 1 மற்றும் 2 வயதில் எம்.ஆர்.ஐ. பதிவுகள் செய்யப்பட்டன.
ஒரு குழந்தையின் வீட்டுச் சூழல், குறிப்பாக பராமரிப்பாளரின் பேச்சின் தரம், மொழி கையகப்படுத்துதலை நேரடியாக பாதிக்கிறது என்பது நீண்ட காலமாக அறியப்படுகிறது, ஆனால் இதன் பின்னணியில் உள்ள வழிமுறைகள் தெளிவாக இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு மூளை முதிர்ச்சியடையும் போது, அது குறைவான பிளாஸ்டிக் ஆகிறது. நெட்வொர்க்குகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு நரம்பியல் நிலைப்பாட்டில் இருந்து, குழந்தைப் பருவம் வேறு எந்த நேரத்தையும் போல அல்ல. ஒரு குழந்தை மூளை சில திறன்களைக் கற்றுக்கொள்வதற்கு நீண்ட கால பிளாஸ்டிசிட்டியை நம்பியிருப்பதாகத் தெரிகிறது என்று ஆய்வாளர் ஸ்வான்சன் கூறியுள்ளார்.
பெற்றோர்களின் பங்களிப்பு:
குழந்தைகளின் மூளை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைய வேண்டுமானால், அது அவர்களின் பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது. குழந்தை பேசுகிறதோ இல்லையோ, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சிரித்துக் கொண்டு மனம் விட்டு பேச வேண்டும். பெற்றோரின் அன்பு மொழிகளில் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்யும். இதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறப்பதுடன், குழந்தைகளும் ஆரோக்கியமாக வளருவார்கள்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
என்ற திருக்குறளை நாம் கவனத்தில் வைத்துக் கொண்டு, நம்முடைய குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்டு ரசிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடம் நாமும் மழலை மொழியில் பேச வேண்டும். இப்படி நாள்தோறும் குழந்தைகளிடம் பேசினால், அதன் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.
குழந்தைகளுடன் பேசும் பெற்றோர் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறார்கள் என்ற ஆராய்ச்சியின் முடிவுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளிடம் பேச நேரத்தை ஒதுக்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான குழந்தைகளின் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment