திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை மையம் தேவையா....!
உலகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களிடையே, குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருப்பது வழக்கமாக உள்ளது. அதுவும் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே நாள்தோறும் புதுபுதுப் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன. இதனால், வாழ்க்கை கசந்துவிடுகிறது. சில நேரங்களில் விவகாரத்து வரை பிரச்சினையை இழுத்துக் கொண்டு செல்கிறது. இதற்கு தீர்வு கிடைக்காமல் பல குடும்பங்களில் அமைதி சீர்குலைந்து போய் விடுகிறது. இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மக்கள் பாதிப்பு அடைக்கிறார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து:
இந்தியாவில் பிற மத சமுதாய மக்கள் மத்தியில் இருப்பது போன்று முஸ்லிம்கள் மத்தியிலும் விவகாரத்து தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திருமணம் ஆன குறைந்த காலத்திலேயே, முஸ்லிம் இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் வரதட்சணை முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மேலும், மாமனார், மாமியார் மற்றும் கணவனின் தொல்லை ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் குலா கேட்க முஸ்லிம் பெண்கள் முடிவு எடுத்து விடுகிறார்கள். இதேபோன்று, சரியான புரிதல் இல்லாத காரணத்தால் தலாக் சொல்ல கணவன்மார்கள் முன்வந்து விடுகிறார்கள்.
இப்படி, முஸ்லிம் சமுதாயத்தில் நாளுக்கு நாள் விவாகரத்து பிரச்சினை மிகப்பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில், அதிகளவு இந்த பிரச்சினை இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமணமான இளம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாகி விடுகிறது. அத்துடன், குடும்பத்தில் அமைதி சீர்குலைந்து விடுகிறது. பெண்ணின் பெற்றோர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்கள்.
ஆலோசனை மையம்:
குடும்பத்தில் ஒரு பெண் திருமண வயதை எட்டிவிட்டால், உடனடியாக அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதேபோன்று, ஆண்களுக்கும் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், திருமணத்திற்குப் பின்பு எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும், எத்தகைய வகையில், குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும், இஸ்லாமிய குடும்ப வாழ்வியல் எப்படி அமைய வேண்டும் என்பன போன்ற நல்ல ஆலோசனைகளை திருமணம் செய்து வைக்கப்படும் மணமக்களுக்கு யாரும் சொல்வதில்லை. நல்ல ஆலிம்கள் அல்லது மனத்தத்துவ வல்லுநர்கள் ஆகியோரின் உதவிக் கொண்டு இத்தகைய ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை.
எனவே, திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புது தம்பதிகள், குறிப்பிட்ட சில நாட்கள், மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பின்னர், பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதும் கிடையாது. இதனால், தலாக், குலா வரை பிரச்சினைகள் இழுத்துக் கொண்டு வந்து விடுகின்றன.
ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
நாடு முழுவதும் இளம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், முக்கியமாக விவாகரத்து குறித்தும் அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், முஸ்லிம்கள் மத்தியில் அண்மைக் காலமாக விவாகரத்து அதிகரித்து வருவது தெரியவந்தது.
சரி, இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, திருமணமான இளம் தம்பதி இடையே சரியான புரிந்து இன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை உள்ளிட்ட காரணங்கள் முக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு ஆலோசனை:
திருமணம் செய்து வைக்கப்படும் முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு சரியான ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. முன்னேர்களின் ஒழுக்கப் பண்புகள், திருமண வாழ்க்கையில் அவர்கள் மேற்கொண்ட இஸ்லாமிய நெறிமுறைகள், கூட்டு குடும்ப வாழ்வியல், அதனால் கிடைக்கும் பலன்கள், புகுந்த வீட்டில் எப்படி பொறுமையுடனும் நல்ல பண்புடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள், ஆலோசனைகளை பெண்களுக்கு யாரும் தற்போது சொல்வதில்லை.
இதேபோன்று, வரதட்சணை என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என முஸ்லிம் ஆண்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் சரியான புரிதல் இல்லாமல் உள்ளது. இதனால், பிற சமுதாய மக்கள் கடைப்பிடிக்கும் இந்த வழிமுறையை முஸ்லிம்களும் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக, திருமணத்திற்குப் பிறகு, பல பெண்களின் வாழ்க்கையில் சுனாமி வீசி, வாழ்க்கையே முடிந்து விடுகிறது.
மஹல்லா சென்டர்கள் அவசியம்:
முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வரும் விவாகரத்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண ஒரு சிறப்பான வழி மஹல்லா ஆலோசனை சென்டர்கள் அமைப்பதுதான். ஒவ்வொரு மஹல்லாவிலும் இத்தகைய மையங்களை அமைத்து, திருமணத்திற்கு முன்பு, மணமகன் மற்றும் மணமகளுக்கு இஸ்லாமிய குடும்பவியல் குறித்து நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். புகுந்த வீட்டில் பெண்ணுக்கு உள்ள உரிமைகள், கடமைகள், கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கப் பண்புகள், புகுந்த வீட்டில் உள்ள உறுப்பினர்களிடம் பண்புடன் நடந்துக் கொள்ளும் முறை ஆகியவற்றை குறித்து திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினால், அந்த பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் இருக்கும்,
எத்தகைய சூழ்நிலையிலும், விவாகரத்து வரை பிரச்சினை செல்லாது. இதேபோன்று, மணமகனுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கினால், முஸ்லிம்கள் குடும்பதில் புயல் வீசாது.
முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முஸ்லிம் ஜாமத்தார்கள், தங்களது மஹல்லாக்களில், ஆலோசனை மையங்களை அமைத்து தீவிரமாக செயல்பட வேண்டும்.
திருமணம் செய்துவைக்க வரும் கோரிக்கை மனுக்களை முதலில் நல்ல ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த மணமக்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் சிறப்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடித்தால், முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வரும் விவாகரத்தை படிப்படியாக குறைக்கலாம். இதன்மூலம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும். மஹல்லா ஆலோசனை மையங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை முஸ்லிம் சமுதாயம் மறந்துவிடக் கூடாது.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment