Friday, December 1, 2023

அதிகரித்து வரும் மாசு.....!

அதிகரித்து வரும் மாசு.....! பிரச்சினைக்கு தீர்வு என்ன?


உலகம் முழுவதும் மனிதர்களின் தவறான வாழ்க்கை முறை காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இயற்கைக்கு மாறாக வாழ மனிதன் ஆசைப்பட்டு, அதன்படி, தன்னுடைய வாழ்க்கையின் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டதே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசு போன்ற வார்த்தைகள் அவ்வளவாக நாம் கேள்விப்படவில்லை. ஆனால் தற்போது காற்று மாசு, ஒலி மாசு என ஏகப்பட்ட மாசுக்கள் குறித்த தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். சுற்றுச்சூழலில் அபாயகரமான மாசுக்களை வெளியிடுவதே மாசுபாடு ஆகும். இந்த ஆபத்தான கூறுகள் அசுத்தங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

தலைநகர் டெல்லியில் அண்மைக் காலமாக காற்றின் தரம் மிகவும் குறைந்து, அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள் என்ற செய்திகளை நாம் தினமும் கேள்விப்படுகிறோம். இதனால், டெல்லியில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேபோன்று, மும்பை, சென்னை, கொல்கத்தா, போன்ற பெருநகரங்களில் கூட காற்று மாசு பிரச்சினை இருந்து வருகிறது. 

தலைவர்கள் ஆலோசனை:

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் மாசுக்களை கட்டுப்படுத்த அனைத்து அரசுகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அதற்கு இன்னும் நல்ல தீர்வு கிடைக்கவில்லை. துபாயில் தற்போது கூடியுள்ள உலகத் தலைவர்கள், அங்கு நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில் பங்கேற்று மாசு குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை சார்ந்த இலக்குகளை அடைவதில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக கூறியுள்ளார். அத்துடன், உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இப்படி பருவநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து உலக தலைவர்கள் அவ்வப்போது கூடி விவாதித்து, முடிவுகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நல்ல தீர்வு மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம்: 


இத்தகைய சூழ்நிலையில் தான்,  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ஆம் தேதி தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் விஷவாயு துயரத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழில்துறை மாசு பேரழிவுகளின் அடிப்படையில், போபால் வாயு சோகம் மிக மோசமான இடத்தில் உள்ளதை யாரும் மறந்துவிட முடியாது.  தொழில்துறை பேரழிவுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.. சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களையும் தொழிற்சாலைகளையும் ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்: 


இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 40 லட்சம் பேர் உட்புற காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றன.  உலகில் பத்து பேரில் ஒன்பது பேருக்கு சுவாசிக்க பாதுகாப்பான காற்று இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நுரையீரல், இதயம் மற்றும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் சளி சவ்வுகள் மற்றும் பிற பாதுகாப்பு தடைகள் வழியாக காற்று மாசுபடுத்திகள் மிகவும் சிறியவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை தடுத்து மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 

"சுற்றுச்சூழல் மாசுபாடு குணப்படுத்த முடியாத நோய் என்றும், அதைத் தடுக்க மட்டுமே முடியும் என்றும் " பாரி காமன்னர் என்ற அறிஞர் எச்சரித்துள்ளார்.  இதேபோன்று, "நாம் துஷ்பிரயோகம் செய்யும் பூமியும், நாம் கொல்லும் உயிரினங்களும், இறுதியில், அவற்றின் பழிவாங்கலைச் செய்யும்; ஏனெனில் அவற்றின் இருப்பை சுரண்டுவதன் மூலம் நாம் நமது எதிர்காலத்தை குறைக்கிறோம்."  என்று மற்றொரு அறிஞர் மரியா மன்னெஸ் குறிப்பிட்டுள்ளார். "ஆற்றை அசுத்தம் என்று சொல்பவன் செயல்வீரன் அல்ல. ஆற்றை சுத்தப்படுத்துபவனே ஆர்வலர்."  என்பது ரோஸ் பெரோட் என்ற சமூக ஆர்வலரின் அமுத மொழியாக உள்ளது. 

மனிதனே காரணம்:


நீர் மற்றும் காற்று, அனைத்து உயிர்களும் சார்ந்திருக்கும் இரண்டு அத்தியாவசிய திரவங்கள், இன்று உலகளாவிய குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன என்றும், மாசுபடுத்தும் நடைமுறைகள் கைவிடப்படும் வரை சுற்றுச்சூழல் தொடர்ந்து மோசமடையும் என்றும் அறிஞர்கள் எச்சரிக்கை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். அழகான அற்புதமான உலகில், மாசு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க முக்கிய காரணம் மனிதனே என்பது அனைத்து சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. 

இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை ஏனே மனிதன் மறந்துவிட்டான். அதில் இருந்து விலகி, தனது சுயநல வாழ்க்கைக்காக, உலகில் அனைத்து வகையான மாசுக்களையும் ஏற்படுத்தி, அதன்மூலம் தானும் பாதிப்பு அடைந்து, உலக மக்களையும் மனிதன் பாதிப்புக்கு ஆளாக்கி வருகின்றான். ஆக அனைத்து வகையான மாசுக்கள் தொடர்ந்து அதிகரிக்க மனிதனே முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம்.

தீர்வு என்ன?:

உலகம் முழுவதும் மாசு நீக்கப்பட வேண்டும்.  இல்லையெனில் மக்கள் அழிந்துவிடுவார்கள் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மாசு உங்களைச் சுத்தப்படுத்தும் முன் அதை நீங்கள் சுத்தம் செய்யுங்கள். கடல்களின் நீலம், கிரகத்தின் பச்சை மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும். நமக்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது. எனவே அதனை சேமித்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். சிறந்த, மாசு இல்லாத காற்றின் ரகசியம் உங்களிடம் உள்ளது. எனவே பச்சை நிறத்தில் சென்று சுத்தமான காற்றை சுவாசித்து, தீர்வின் ஒரு பகுதியாக இருங்கள்.  பிரச்சனையாக ஒருபோதும் இருக்காதீர்கள் என்பது பருநிலையில் மிகவும் அக்கறை கொண்ட அனைத்து ஆர்வலர்களின் அறிவுரையாக  இருந்து வருகிறது. 

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது, காடுகளை பராமரிப்பது, இயற்கையை நேசிப்பது, புகை மாசுக்களை வெளியேற்றுவதை கட்டுக்குள் கொண்டு வருவது, மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்படுவது என நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், அனைத்து வகையான மாசுக்களில் இருந்தும், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்தும், மனிதன் ஓரளவுக்கு பாதுகாப்புடன் இருக்க முடியும் என்பது உறுதி.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: