Saturday, December 9, 2023

அரபி மொழி புலமையால் மேன்மை....!

 

அரபி மொழி புலமையால், உலக அளவில் மேன்மை அடைந்த

திருச்சி அறிஞர் முனவ்வர் நைனார்…..!


ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், மொழி அறிவு, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். தாய்மொழியோடு, பிற மொழிகளையும் கற்று அவற்றில் நன்கு புலமை பெற்றால், நமது சிந்தனைகளை சிறப்பாக அமைவதுடன், மனித உணர்வுகளின் தன்மைகளையும் அறிந்துகொள்ள முடியும். அத்துடன், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையவும் மொழி அறிவு முக்கிய காரணமாக அமைந்துவிடும். இப்படி, தனது அரபி மொழி அறிவால் உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்த திருச்சி அறிஞர் முனவ்வர் நைனார் குறித்த அரிய தகவல்களை தான் நாம் இந்த கட்டுரையில் காணப் போகிறோம்.

அறிஞர் முனவ்வர் நைனார்:

திருச்சியைச் சேர்ந்த சையத் முகமது ஹுசைன் நைனார், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 1927ஆம் ஆண்டு முதல் 1954ஆம் ஆண்டு வரை அரபி, உர்தூ மற்றும் பராசீகத்துறையின் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். அரபி, உர்தூ, பார்சி ஆகிய மொழிகளில் நல்ல அறிவு கொண்ட சையத் முகமது ஹுசைன் நைனாருக்கு ஒரு ஆசை, விருப்பம் எப்போதும் இருந்து வந்தது. தனது மகன்களில் ஒருவராவது அரபி மொழி படித்து, அதில் நன்கு புலமை பெற வேண்டும் என்பது தான் அந்த ஆசையும் விருப்பமும் ஆகும்.

தந்தையின் இந்த ஆசை, விருப்பம் ஆகியவற்றை அறிந்துகொண்ட அவரது மகன்களில் ஒருவரான எஸ்.எம்.முனவ்வர் நைனார், கடந்த 1950ஆம் ஆண்டுகளில் இருந்து அரபி மொழிவுடனான தனது பயணத்தை தொடங்கினார்.

இதுகுறித்து முனவ்வர் நைனார் இப்படி கூறியுள்ளார்: ஆழத்தில். எனது பொதுவான கல்வி செயல்திறன் நடுநிலையாக இருந்தாலும், நான் அரபி மொழி கற்கும் காரணத்திற்காக வரைவு செய்யப்பட்டேன் என்பதை உணர்ந்தேன். அதை நோக்கியே எனது பயணம் தொடங்கி பின்னர் தொடர்ந்தது. இறுதியில், நான் எகிப்து கெய்ரோ பல்கலைக்கழகத்தில் 1955-59ஆம் ஆண்டு வாக்கில், அரபி மொழியில் நான்கு ஆண்டுகள் ஆழ்ந்த மொழிப் பயிற்சி செய்தேன், அங்கு நான் எனது பி.ஏ. 'ஜெய்யித்' (நல்ல) தரத்துடன் பட்டம் பெற்றேன். பின்னர்,  நான், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரபி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றேன். அத்துடன், இந்தி, உர்தூ, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள அரபி வார்த்தைகள் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் படித்து, அதில் பட்டம் பெற்றேன். இப்படி அரபி மொழியுடன் தொடங்கிய எனது பயணம், பின்னர் உலக அளவில் நான் மேன்மை அடையும் வகையில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்தது.

மொழி பெயர்ப்பு கலையில் வித்தகர்:

சிறப்பான கல்வி மூலம் நல்ல மொழி அறிஞராக மாறிய முனவ்வர் நைனாருக்கு 1970ஆம் ஆண்டுகளில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரபி மொழி துறையில் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்றே கூறலாம். ஆம், அரபி மொழியை ஆங்கிலம், உர்தூ, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பாக மொழி பெயர்த்து கூறும், மொழிபெயர்ப்பாளர் என்ற அந்தஸ்துக்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜி.பார்த்தசாரதி, முனவ்வர் நைனாரின் மொழி அறிவைக் கண்டு, வியப்பு அடைந்து, அந்த வாய்ப்புக்காக அவரை பரிந்துரை செய்தார். கடந்த 1969-72ஆம் ஆண்டுகளில் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஊடகத்துறை செயலாளராக நைனார் பணிபுரிந்ததின் அடிப்படையில், இந்த வாய்ப்புக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார். இப்படி, தொடங்கிய அரபி மொழிபெயர்ப்பாளர் பணி, முனவ்வர் நைனாரின் வாழ்க்கையில், அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களிடம் புகழ்பெறும் வகையில் மாற்றி அமைத்தது.

இந்திரா காந்தி பாராட்டு:

மறைந்த இந்திரா காந்தி இந்திய பிரதமராக இருந்தபோது, கடந்த 1975ஆம் ஆண்டு, ஜனவரி 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஈராக் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற தலைவர்களாக இந்திரா காந்தி, மற்றும் ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆகியோர் இருந்து வந்தனர். இதனால், இந்திரா காந்தியின் ஈராக் பயணம் உலக அளவில் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், உலக செய்தி நிறுவனங்கள் பாக்தாத்தில் குவிந்தனர். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பாக்தாத் சென்ற இந்திரா காந்தியை, , ஈராக் அதிபர் சதாம் உசேன், விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களின் மத்தியிலான பேச்சுவார்த்தை அடுத்த நாள் நடைபெற்றது. அப்போது மொழிபெயர்ப்பாளர் தொடர்பாக, சதாம் உசேனிடம் அவரது விருப்பத்தை கேட்ட இந்திரா காந்தி, நீங்கள் உங்கள் சார்பில் மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்கிறீர்களா என வீனா எழுப்பினார். அதற்கு வேண்டாம் என்ற மறுப்பு தெரிவித்த சதாம் உசேன், முனவ்வர் நைனாரை பார்த்து புன்முறுவல் செய்த வண்ணம், உங்கள் நாட்டு மொழிபெயர்ப்பாளரே போதும் என மகிழ்ச்சியுடன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பல்வேறு பிரச்சினைகள், உலக விவகாரங்கள், இருநாட்டு உறவுகள் ஆகியவை குறித்து பேசினார்கள். இந்த பேச்சுகளை அழகிய முறையில் மொழிபெயர்ப்பு செய்து தனது தனித்துவமான மொழிபெயர்ப்பு கலையை வெளிப்படுத்தி அந்த தலைவர்களின் பாராட்டுகளை முனவ்வர் நைனார் பெற்றார். இதேபோன்று,1974ஆம் ஆண்டு, சதாம் உசேன் இந்தியா வந்தபோது, இந்திரா காந்தி அவரை வரவேற்று, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அந்த சமயத்திலும் மொழிபெயர்ப்பாளராக முனவ்வர் நைனார் பணியாற்றி, பாராட்டுகளை பெற்றார்.

பாக்தாத் பல்கலைக்கழகத்தில் வரவேற்பு:

தனது ஈராக் பயணத்தின்போது, இந்திரா காந்தி, பாக்தாத் பல்கலைக்கழகத்திற்கு சென்று, அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் இந்திரா காந்தியுன் உரையை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர். இந்த உரையை முனவ்வர் நைனார் அற்புதமாக அரபியில் மொழிபெயர்த்தது, இந்திரா காந்தியை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த அனைவரையும் கவர்ந்தது.

விழா முடிந்தபிறகு, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், தாம் சிறிது நேரம் இந்திரா காந்தியை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறிய நைனார், தனது பக்கத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திரா காந்தி, உடனே அதிகாரிகளை அறிவுறுத்தி தன்னை தேடிக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது,  இவ்வளவு நேரம் எங்கே போய் விட்டீர்கள்” என இந்திரா காந்தி தம்மை பார்த்து கேட்க சம்பவம் இன்னும் தனது நினைவுகளில் அசை போடுவதாக நைனார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தன்னுடன் வரும் குழுவினர் மீது மிகுந்த அக்கறை கொள்ளும் இந்திரா காந்தி, அவர்களின் நலனில் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பதை தாம் நேரில் கண்டு வியப்பு அடைந்ததாக நைனார் குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத தலைவர்கள்:

தனது மொழிபெயர்ப்பாளர் பணியில் சிறந்த புலமையை வெளிப்படுத்தியதால், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஓமன், மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்த தலைவர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிட்டியதுடன், அந்த நாட்டு தலைவர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பு செய்யும் பணி கிடைத்ததையும் நைனார் இன்னும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். கடந்த 1975ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பக்ருத்தீன் அலி அகமத், எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டபோது, அப்போதும், முன்னவார் நைனார், மொழிபெயர்ப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். அப்போதைய எகிப்து அதிபர் அன்வர்-இல்-சதாத்திடம், தாம் , கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பாடத்தில் பட்டம் பெற்றதை குறிப்பிட்டதாகவும், அதனை கேட்டு அவர் வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்ததாக முன்னவர் நைனார் தெரிவித்துள்ளார்.

அரபி மொழியால் மேன்மை:

தமிழகத்தின் பழனியை சேர்ந்த ஒரு சாதாரண இளைஞராக இருந்த தன்னை அரபி மொழி, இராஜதந்திர சேவை மற்றும் கற்பித்தல் முதல் வானொலி ஒலிபரப்பு மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பு வரை பல சுவாரஸ்யமான இடங்களுக்கு அழைத்துச் சென்றது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முன்னவர் நைனார். இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராக தான் பணியாற்றிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில்  மறக்க முடியாதவை என்று முன்னவர் நைனார் கூறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தவொரு மொழியையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு அதில் தனித்துவமான புலமையுடன் இருந்தால், நிச்சயம் வாய்ப்புகள் நம்மை தேடி வரும். அதன்மூலம் நாமும் புகழ் அடையலாம் என்பதற்கு தற்போதைய இளைஞர்களுக்கு திருச்சி முன்னவர் நைனார் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

(குறிப்பு: தி இந்து ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து அழகிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை இது)

-             எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: