நூல் மதிப்புரை
நூல் : பெட்டிக்கடை பொன்மொழிகள்
ஆசிரியர் : சையத் முபாரக்
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்,
4/7, ராஜா அனுமந்தா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-2
விலை : ரூ.20/-
பெட்டிக்கடை பொன்மொழிகள் என்ற இந்த அருமையான நூலில் 58 பக்கங்களில் 400 பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன. தனது பெட்டிக்கடைக்கு வரும் அறிஞர்கள் சொல்லும் அழகிய பொன்மொழிகளை தொகுத்து வைத்த ஜனாப் சையத் முபாரக், அதை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு நாளும் சிலேட்டில் எழுதி கடையின் முகப்பில் தொங்கவிட்டு, வாடிக்கையாளர்களின் கண்ணில்படும்படி செய்து மிக நல்ல பணியை செய்து இருப்பதை நூலில் அறியும்போது உண்மையிலேயே மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இந்த பொன்மொழிகள் எல்லாம் நல்ல முறையில் தொகுக்கப்பட்டு, தற்போது பெட்டிக்கடை பொன்மொழிகள் என்ற பெயரில் நூலாக கொண்டு வந்து இருப்பது அருமையிலும் அருமை. சிரித்த முகம் சிறப்பையும் செல்வத்தையும் தரும். சீறிய முகம் செல்வ இழப்பையும் துன்பத்தையும் தரும் என தொடங்கி, ஒருவருக்கு நேரம் சரியில்லாவிட்டால் அவர் வாங்கிய புடலங்காய்கூடப் பாம்பாக மாறிவிடும் என மொத்தம் 400 பொன்மொழிகள் இந்த நூலில் படிக்கும்போது உண்மையிலேயே நமது சிந்தனைகளை அழகிய முறையில் பறக்கின்றன. அறிவுப்பசி தீர்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நூலகங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து நூலகங்களிலும் இந்த நூல் கட்டாயம் இடம் பெற வேண்டும். அதன்மூலம் தமிழக மக்கள் சிந்தனைக்கு விருந்து அளிக்கும் அழகிய நூலை வாசித்து அதன் சுவையை ரசிக்க முடியும் என உறுதியாக கூறலாம்.
- ஜாவீத்
No comments:
Post a Comment