Sunday, December 10, 2023

ஒற்றுமை தேவையா....!

ஒற்றுமை எனும் குடைக்குள்....!


மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. சென்னை நகரில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கியதால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் இந்த நான்கு மாவட்ட மக்கள் அடைந்த பாதிப்புகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என கூறலாம். 

குறிப்பாக, சென்னையில் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டல்கள் அதிகளவு திறக்கப்படவில்லை. ஒருசில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனால், சென்னையில் தங்கியுள்ள வெளியூர்வாசிகள், உணவுக்காக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பலர் உணவு கிடைக்காமல் பட்னியாக இருந்து விட்டு அன்றைய நாளை கழித்தனர். 

வேளச்சேரி, பள்ளிக்கரனை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, வீடுகளை விட்டு வெளியே வர முடியாத கட்டாய சூழ்நிலை அந்த பகுதி மக்களுக்கு எற்பட்டது. தமிழக அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். இன்னும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

இத்தகைய கடினமான சூழ்நிலையில் கனமழை வெள்ளத்தில் சின்னாபின்னமான சென்னையில் இஸ்லாமிய அமைப்புகள், முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் இளைஞர்கள் செய்த, தொடர்ந்து செய்துகொண்டு இருக்கும் மனித நேய நிவாரணப் பணிகளை, தொண்டுகளை பாராட்டாதே மக்களே இல்லை.

முஸ்லிம்களின் மனித நேயப் பணிகள்:

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கொட்டிய கனமழையின்போது, இஸ்லாமிய அமைப்புகள் செய்த மனித நேயப் பணிகள் சென்னைவாசிகளை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து  ஆச்சரியப்படுத்தியது. மிகவும் இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு முஸ்லிம் அமைப்புகளும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி ஆற்றிய தன்னலமற்ற சேவையைக் கண்டு பலர் மூக்கின் மீது விரல் வைத்து வியப்பு அடைந்தனர். 

உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் கிடைக்க ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்புகள் சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பைகளயும் அகற்றி நகரை தங்களால் முடிந்த அளவிற்கு தூய்மை செய்தனர். தூய்மை இந்தியா திட்டத்திற்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்ட பல பிரபலங்கள், தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்க, இஸ்லாமிய அமைப்புகளின் இளைஞர்கள் கவுரவம் எதையும் பார்க்காமல் களத்தில் இறங்கி மாநகரை தூய்மை செய்தது உண்மையிலேயே பலரது புருவங்களை மேலே தூக்கி வைத்தது. 

கடந்த 2015ஆம் ஆண்டை போல இந்த முறையும் அதாவது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கிய கனமழை, அடுத்த நாள் இரவு 9 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. மிக்ஜாம் புயல் எதிரொலியால், இந்த கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. 

இத்தகையை நெருக்கடியான சூழ்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு செய்த மனிதநேய சேவையை போன்றே, இந்த முறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் களத்தில் இறங்கி, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை நேரில் சென்று வழங்கி தங்களது மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். இஸ்லாம் காட்டும் மனிதநேய வாழ்க்கை நெறியை மக்களுக்கு மிக அழகாக தங்களது சேவைகள் மூலம் எடுத்து வைத்தனர். 

முரட்டு பிடிவாதம்: 

கனமழை, வெள்ளம், கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மகத்தான மக்கள் நலப்பணிகளை செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் ஓர் விஷயத்தில் மட்டும் இன்னும் முரட்டு பிடிவாதம் பிடித்து வருகின்றன.  அது.... ஒற்றுமை என்ற கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்து ஓர் அணியில் வர இஸ்லாமிய அமைப்புகள் மறுத்து வருவதுதான். ஓர் குடைக்குள் வர இஸ்லாமிய அமைப்புகள் இன்னும் ஏன் தயக்கம் காட்டி வருகின்றன என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.  அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் பணிகளை உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில் அனைவரும் ஓர் அணியில் திரண்டு வந்து நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் எவ்வளவு பெரிய அரசியல், சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும். 

சிந்திக்க வேண்டிய தருணம்:


ஒன்றியத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டன. ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைத்து இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்றே பதில் வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல சலுகைகள் ஒன்றிய பாஜக அரசு நிறுத்திவிட்டது. இதனால், முஸ்லிம்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதும் தற்போது நிறுத்தப்பட்டதால், அவர்கள் உயர்கல்வி பெறுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான நிலையிலேயே பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

இத்தகைய கடுமையான நெருக்கடி காலத்தில், இஸ்லாமிய அமைப்புகள் இன்னும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நின்றுக் கொண்டு அரசியல் களத்தை சந்தித்து வருகிறார்கள். மிகவும் நெருக்கடியான காலத்தில் முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். தனித்தனியாக நின்று தேர்தல் களத்தை சந்திப்பதால், பாஜக மிக எளிதாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விடுகிறது என்பதை பல தேர்தல் முடிவுகள் மூலம் நன்கு அறிய முடிகிறது.  இதனால், இஸ்லாமியர்கள் குறித்து பிற மத சகோதரர்களிடம் தவறான கருத்துகள் இருந்து வருகின்றன. முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையே இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

என்ன செய்ய வேண்டும்?

அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும், ஒற்றுமையாக ஓர் அணியில் வந்து பணியாற்றினால், இஸ்லாமியர்கள் குறித்து பிற மத சகோதரர்களிடம் இருக்கும் தவறான எண்ணங்களை, கருத்துக்களை இன்னும் உடைத்து எறியலாம் அல்லவா. அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லவா. அதன்மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தயக்கம் இல்லாமல்  பெறலாம் அல்லவா.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓர் அணியின் கீழ் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை, ஈகோ பிரச்சினைகளை சிறிது ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு ஒற்றுமை என்ற குடைக்குள் வர கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் சமுதாயத்திற்கு நலம் பயக்கும். எனவே, ஓர் அணியில் திரள இஸ்லாமிய தலைவர்கள் முன் வருவார்களா.? இதுதான் இஸ்லாமிய சமுதாயத்தின் தற்போதைய மிக முக்கிய  வினா. இந்த வினாவிற்கு எதிர்காலம் நல்ல பதிலை தரும் என உறுதியாக நம்பலாம். 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 

No comments: