ஊடகத்துறையில் மணிச்சுடர் ஒரு மணிமகுடம்...!
நாற்பது ஆண்டுகளில் திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கி சாதனை...!
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
தமிழ் நாளிதழ்களில், தனக்கு என தனி பாணி அமைத்துக் கொண்டு, அதில் உறுதியாக இருந்து, கடந்த 39 ஆண்டுகள் தொடர்ந்து பயணம் செய்த 'மணிச்சுடர் நாளிதழ்' இன்று நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தியாவிலேயே இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஒரே தமிழ் நாளிதழ் 'மணிச்சுடா' என்றால் அது மிகையாகாது. உர்தூ, ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழ் தினசரி என வந்தால், அது 'மணிச்சுடர்' மட்டுமே என உறுதியாக கூறலாம்.
மணிச்சுடரின் எழுத்து நடை, பாணி அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பரபரப்பு செய்திகள், சினிமா செய்திகள், கொலை, கொள்ளை செய்திகள், வெறுப்பு செய்திகள் போன்ற செய்திகளுக்கு மணிச்சுடரில் சிறிதும் இடமில்லை.
இஸ்லாமியர்களை மட்டுமல்ல, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்களையும் அரவணைத்துக் கொண்டு பயணம் செய்யும் பாணியை மணிச்சுடர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எனவே, சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள், இளைஞர்கள் சாதனை செய்யும்போது, அதுகுறித்த விரிவான செய்திகள், கட்டுரைகள், பாராட்டு தகவல்கள் மணிச்சுடரில் கட்டாயம் இடம்பெறுகின்றன.
மணிச்சுடர் வாசிக்கும்போது, மனம் அமைதியாக இருக்கும். நல்ல நாளிதழ் படித்த திருப்தி வாசர்களுக்கு கிடைக்கும். எனவே. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் மணிச்சுடர் வாசிப்பதை தங்களது பழக்கமாகவும், வழக்கமாகவும் கொண்டு இருக்கிறார்கள்.
நானும் மணிச்சுடரும்:
மணிச்சுடர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, எனக்கும் மணிச்சுடருக்கும் இடையே ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. அதனுடனான பாசம் இன்றும் தொடர்கிறது. சென்னை பீட்டர்ஸ் சாலையில் இருந்த மணிச்சுடர் நாளிதழ் அலுவலத்தில், முதல் முறையாக மணிச்சுடர் நாளிதழ் ஆசிரியரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்த, மறைந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்களை நான் சந்தித்போது, வேலூர் மாவட்ட முகவராகவும் நிருபராகவும் என்னை நியமித்து, சிறப்பாக செய்யுங்கள் என அவர் வாழ்த்தியது இன்னும் என் மனக் கண் முன் வந்து செல்கிறது.
பின்னர், டெல்லியில் சந்திப்பு, மீண்டும், வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலத்தில் உதவி ஆசிரியராக பணி என மணிச்சுடர் என்னை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருந்தது. வாலஸ் கார்டன் மணிச்சுடர் அலுவலகத்தில்தான், தற்போதைய மணிச்சுடர் ஆசிரியரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை நான் முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
பேராசிரியர் அவர்கள், எந்தவித பந்தாவும் இல்லாமல், மணிச்சுடர் அலுவலத்தில் இருந்த அனைத்து உதவி ஆசிரியர்களிடமும் பழகிய விதம், அவர் காட்டிய அன்பு, அனைவரின் நலனில் அவர் கொண்ட அக்கறை, உற்சாகப்படுத்தி, வேலை வாங்கிய பாணி மறக்க முடியாது. தற்போதும் அதேபோன்று, பேராசிரியர் அவர்கள், மணிச்சுடர் அலுவலக ஊழியர்களின் நலனில் அக்கறையுடன் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
பல்வேறு காரணங்கள், மற்றும் நெருக்கடிகளால் மணிச்சுடரில் இருந்து விலகி, சன் தொலைக்காட்சியில் சேர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டபோது, பேராசிரியர் அவர்கள் என்னை வாழ்த்தி, அழகிய எழுதுகோல் (பேனா) ஒன்றை வழங்கி, சிறப்பாக முன்னேறுங்கள் என கூறியது இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
இப்படி, பல்வேறு தொலைக்காட்சிகளின் ஊடகத்துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, தற்போது மீண்டும் மணிச்சுடரில் சிறப்புச் செய்தியாளராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஒரு உண்மை மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. மணிச்சுடருக்கும் எனக்கும் உள்ள அழகிய தொடர்பு, எப்போதும் நீடிக்கும் என்பதுதான் அதுவாகும்.
திறமையான ஊடகவியலாளர்கள்:
நாற்பதாவது ஆண்டில் பயணிக்கும் மணிச்சுடர், கடந்த 39 ஆண்டுகளில் மிகவும் திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கும் சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, டி.டி.தமிழ் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டபோது, அதன் செய்திப்பிரிவில் சேர்ந்து மிகவும் சிறப்பாக பணிபுரிந்து, மணிச்சுடரின் பெருமையை நிலைநாட்டினர்.
குறிப்பாக, வில்லியம்ஸ், டாயல், ராமதாஸ், பெரியசாமி, மேலைப்பாளையம் ரசூல் கான், ஜலால், மீரா மொகிதீன், கண்ணன், காயல் மகபூப் போன்றவர்களை ஊடகத்துறையில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை செய்ய அடித்தளம் அமைத்து தந்தது மணிச்சுடர் என்றே கூறலாம்.
எனவேதான், ஊடகத்துறை குறித்த பேச்சு வரும்போது, "மணிச்சுடரில் இருந்து பயிற்சி பெற்று சென்ற அனைவரும், தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் நன்கு கோலோச்சி சாதனை புரிந்து வருகிறார்கள்" என பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் அடிக்கடி மிகவும் பெருமையுடன் கூறி மகிழ்ச்சி அடைவார்கள்.
என்னை பொறுத்தவரை பேராசிரியர் அவர்களின் வார்த்தைகள் உண்மை என்றே கூற வேண்டும். மணிச்சுடரில் நான் சேர்ந்தபோது, சிராஜுல் மில்லத் மட்டுமல்ல, பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் கூட, நல்ல ஆலோசனைக் கூறி, என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதன் காரணமாக, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் என்னால் மிகவும் சிறப்பாக பணியாற்றி, ஓரளவுக்கு நல்ல பெயர் எடுக்க முடிந்தது. எனவே, தமிழகத்தில் நல்ல திறமையான, மிகவும் அற்புதமான ஊடகவியலாளர்களை உருவாக்கி, மணிச்சுடர் மிகப்பெரிய அளவுக்கு சாதனை புரிந்தது என மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறேன்.
மணிச்சுடர் ஒரு மணிமகுடம்...!
ஊடகத்துறையில் ஒரு மணிமகுடமாக திகழும் மணிச்சுடர் நாளிதழ், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இன்றும் சாதனை புரிந்துக் கொண்டே, தனது சமுதாயப் பணியை தொடர்கிறது. இஸ்லாமிய சிந்தனைகள், சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் அழகிய சமூக கட்டுரைகள், செய்திகள், அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்கள், உலக செய்திகள், குறிப்பாக பாலஸ்தீன் மக்களின் துயரங்கள், அவர்களுக்கு விடியல் கிடைக்க மக்கள் மத்தியில் பரப்புரை என பல அற்புதமான செய்திகள் மற்றும் தகவல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷமாக மணிச்சுடர் இருந்து வருகிறது.
சமுதாயத்திற்கு சேவை செய்த பெரியவர்கள், நல்லவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் குறித்து அடிக்கடி கட்டுரைகள், செய்திகளை மணிச்சுடர் பிரசுரம் செய்து வருகிறது இதேபோன்று, கல்வியில் சாதனை புரியும் முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாமிய பெண்களை செய்யும் அழகிய சாதனைகள், அவர்களின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு, மற்ற முஸ்லிம் பெண்களும் ஆர்வம் கொள்ளும் வகையில் உற்சாகவும், ஊக்கமும் ஊட்டும் பணியை மணிச்சுடர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறது.
நூல் மதிப்புரை, அழகிய கவிதைகள், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள், வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும் தகவல்கள், இப்படி தொடர்ந்து வெளியிட்டு வரும் மணிச்சுடர், இனியும் தனது பணியை மிகவும் சிறப்பாக செய்யும் என ஏக இறைவன் மீது உறுதியாக நம்பிக்கை வைத்து, நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மணிச்சுடர் நாளிதழின் வளர்ச்சிக்கும், அந்த நாளிதழ் எந்தவித தடங்கலும் இல்லாமல், தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்க வேண்டும் என உறுதியான எண்ணத்துடன் பணிபுரிந்துவரும் நாளிதழின் வெளியிட்டாளர் மற்றும் இயக்குநர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கருக்கு, எமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இதேபோன்று, செய்தி ஆசிரியர் ஏ.கே.முஹம்மது காசீம், விளம்பர நிர்வாகி மற்றும் சமுதாயச் செய்திகளை ஒருங்கிணைத்து தரும் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கி, தலைமை நிருபர் ஆர்.ஏ.ஆர்.கண்ணன், செய்தி வடிப்பாளர்கள் ஆர்.பால் சார்லஸ், ரமேஷ், பிரமிளா, அலுவலக மேலாளர் எஸ்.முஹம்மது மொய்தீன், எஸ்.எச்.முஹம்மது அர்ஷத், ஏ.பி.முஹம்மது ஜலால், ஏ.கே.முஹம்மது ரபீ, புகைப்பட கலைஞர் மகபூர் ஷரீப், அச்சகப் பணி ஊழியர்கள் சி.சிவராஜ், ஜெ.நெல்சன், பீரிஸ், எஸ்.ஷரீப், மாணிக்கம், ராஜேஷ், சாந்தி உள்ளிட்ட அனைவரின் பணியையும் எப்போதும் மறக்க முடியாது. மணிச்சுடர் நாளிதழின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் பலரின் பெயர்கள் இந்த கட்டுரையில் இடம்பெறவில்லை. அதற்காக, அவர்கள், மணிச்சுடர் நாளிதழின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றவில்லை என அர்த்தம் இல்லை.
மணிச்சுடர் நாற்பதாவது ஆண்டில் தனது பயணத்தை தொடர்கிறது என்றால், அனைத்து தரப்பு மக்களின் அன்பும் ஒத்துழைப்பும், அவர்கள் வழங்கிய ஆதரவும்தான் முக்கிய காரணம் என உறுதியாக கூறலாம். மணிச்சுடர் நாளிதழ் இனியும் சிறப்பாக பயணிக்கும். தனது பணியின் மூலம் அனைத்துச் சமுதாய மக்களுக்கும், பயன் உள்ள நாளிதழாக இருக்கும். மணிச்சுடர் எப்போது ஒரு மணிமகுடம்தான்.
=========================
No comments:
Post a Comment