"இந்தியா வெல்லும்"
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -
18வது மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் நடந்த இந்த தேர்தலில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26ஆம் தேதி 14 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே, 7ஆம் தேதி 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் மூன்றாவது கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இப்படி ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள் என்பதாகும்.
முஸ்லிம் வாக்காளர்கள் ஆர்வம்:
தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்த முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், முஸ்லிம் வாக்காளர்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள், தங்களுக்குள்ள வாக்குரிமையை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தி, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
கேரளாவில் 20 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இங்கும், முஸ்லிம் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்கள். தேர்தலில் வாக்களிப்பது ஒரு முக்கிய கடமையாக கருத வேண்டும் என முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என கூறலாம்.
வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு வைத்தால், சிறுபான்மையின மக்கள் வாக்குப்திவு மைய்யங்களுக்கு வர மாட்டார்கள். இதனால், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படாது என, சிலர் போட்ட திட்டங்கள் அனைத்தும், தோல்வியில் முடிந்தன. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சிறுபான்மையின மக்களும், இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என உறுதியாக நம்பி, தங்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்து, அதை ஒரு அழகான செயல்மூலம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
சிறப்பு விமானங்களில் வந்த வாக்காளர்கள்:
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சிறுபான்மையின மக்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இதேபோன்று, பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும், வெளிநாடுகளில் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை இந்தியாவில் உள்ளதால், அவர்கள், இந்த முறை கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்து, தாயகம் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் வந்து, கடந்த 26ஆம் தேதி தங்கள் தொகுதிகளில் வாக்களித்து, மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதேபோன்று, தமிழகம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிலரும் வெளிநாடுகளில் இருந்து வாக்களிப்பதற்காக மட்டுமே, இந்தியா வந்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் இப்படி நடப்பது இல்லை. ஆனால், இந்த முறை, 18வது மக்களவைத் தேர்தலில் இந்த அதிசயம் நடைபெற்றுள்ளது. நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக ஒற்றுமையாக வாழ வேண்டும். நாடு உண்மையான, வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான், அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையின மக்களும் துன்பங்களையும் துயரங்களை சந்தித்து மிகுந்த வேதனையில் இருந்து வந்தார்கள். வாழ்க்கையே நடத்த முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காண, ஒரே தீர்வு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நல்ல விடிவு கிடைக்கும் என உறுதியாக நம்பிய மக்கள், தங்களது ஆசையை, விருப்பதை, ஜனநாயகக் கடமை செலுத்தி நிறைவேற்றி இருக்கிறார்கள்.
தரவுகள் தரும் நம்பிக்கை:
முதல் கட்டமாக 102 தொகுதிகளில் நடந்த தேர்தலில் கிடைத்த தரவுகள் மூலம், இந்தியா கூட்டணிக்கே அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதேபோன்று, இரண்டாவது கட்டமாக நடைபெற்ற 88 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி, நல்ல தொகுதிகளை அள்ளும் என தகவல்கள் வந்துள்ளன.
நாட்டில் தற்போது பா.ஜ.க.விற்கு எதிராக மக்களின் எழுச்சி அலை ஏற்பட்டுள்ளதால், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் முடிந்தபிறகு, கிடைத்த தரவுகளின்படி, இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜ.க.வை வீழ்த்தும் என்பதால், அதிர்ச்சி அடைந்த பாசிச அமைப்புகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளன.
அதன் காரணமாகதான், பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் தமது அரசு செய்த சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குகளை கேட்க வழியில்லாமல், இதுபோன்ற வெறுப்பு பேச்சை அவர் கக்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவுக்கு எந்தவித சாதனைகளையும் நிகழ்த்தவில்லை. எனவே, அதை எடுத்துக்கூறி வாக்குகளை கேட்க முடியாத நிலையில் அக்கட்சி உள்ளது. இதன் காரணமாக, தற்போது வெறுப்பு அலையை ஏற்படுத்தி, அதன்மூலம், அரசியல் லாபம் பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மக்களின் நம்பிக்கை:
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்று முழக்கங்களை காது கொடுத்துக் கேட்க தற்போது நாட்டு மக்கள் தயாராக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக இதுபோன்ற வெற்று முழக்கங்களை கேட்டுகேட்டு நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் சலிப்பு அடைந்துவிட்டார்கள். அதனால், அவர்கள் பொறுமை இழந்து நிற்கிறார்கள். நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் மிகவும் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
இந்த மாற்றத்தை இந்தியா கூட்டணி மட்டுமே தர முடியும் என்பதை, நாட்டு மக்கள் தற்போது நன்கு உணரத் தொடங்கியுள்ளார்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சிகளாக காங்கிரஸ், தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே இருந்து வருகின்றன. எனவே, சிறுபான்மையின மக்கள் இந்த தேர்தலில், தங்களது வாக்குகள் சிதறி போய்விடாமல் இருக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே, வாக்களித்து வருகிறார்கள்.
இந்தியா வெல்லும்:
18வது மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவு பெற்றபிறகு, ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாட்டில் தற்போது கோடைக்காலம் நீடிக்கும் நிலையில், அரசியல் களமும், கோடை வெப்பத்தை விட மிகவும் சூடாக இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் செயல்பாடுகளால், கோடை வெயிலைப் போன்று, மிகவும் சூடாகி மாறியுள்ள மக்கள், மிகுந்த கோபத்துடன் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்குகளை அளித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் கணித்தது போன்று, இந்த முறை பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்ற நிலை, தற்போது உருவாகியுள்ளது. அடுத்தடுத்தக் கட்டத் தேர்தல்கள் நடைபெற்று முடியும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கணித்து இருக்கிறார்கள்.
எனவே, 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள், நாட்டில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் இந்தியா வெல்லும் என உறுதியாக கூறலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால், அந்த நம்பிக்கையில் நாம் உறுதியாக இருந்தால், இந்தியா வென்று, நாட்டில், புதிய விடியலை ஏற்படுத்தும். அதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களும், சகோதரத்துடன் அமைதியாக வாழ வழி பிறக்கும். இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டி, உலக அளவில் தனது பெருமையை மீண்டும் நிலைநிறுத்தும்.
=================================
No comments:
Post a Comment