முதல்முறை வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்....!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், வரும் 19ஆம் தேதி முதல் தேர்தல் திருவிழா தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் திருவிழா, வரும் ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் நிறைவுப் பெறுகிறது.
இந்த தேர்தல் திருவிழாவில், சுமார் 97 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள். இந்த முறை 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இந்திய தேர்தல் ஆணையம், மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த முயற்சிகள் நல்ல பலனை அளித்து இருக்கிறது என்றே கூறலாம்.
வாக்கு அளிப்பதன் முக்கியத்தும் குறித்து, மக்கள் தற்போது நன்கு அறிந்து வருகிறார்கள். அது தங்களது ஜனநாயகக் கடமை என்றும் அவர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக தேர்தல் ஆணையத்தின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தேர்தல் திருவிழாவில் 100 சதவீத வாக்குகள் பதிவானால், அது மிகப்பெரிய சாதனை என்ற கூறலாம்.
எனவே, 18வது மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 97 கோடி வாக்காளர்களும் தங்களது வாக்குகளை கண்டிப்பாக செலுத்த வேண்டும். அதன்மூலம் நல்ல ஜனநாயகத்திற்கு அவர்கள் தங்களது பணியை நிறைவேற்றி, திருப்தி அடைய வேண்டும்.
முதல்முறை வாக்காளர்கள்:
ஒவ்வொரு தேர்தலிலும் முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சுமார் 5 கோடி பேர் முதல்முறையாக இந்த தேர்தலில் வாக்கு அளிக்க இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட சுமார் 11 லட்சம் இளைஞர்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்று, தங்களது ஜனநயாகக் கடமையை நிறைவேற்ற இருக்கிறார்கள்.
இதையடுத்து முதல்முறை வாக்கார்கள் மத்தியில் வாக்கு அளிப்பது எப்படி? வாக்கு ஏன் அளிக்க வேண்டும்? வாக்கு அளித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதால், நாட்டிற்கும், வீட்டிற்கும் கிடைக்கும் பலன் என்ன? என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்லூரிகளில் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, தேர்தலில் பங்கேற்பது குறித்து விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நல்ல விளக்கங்களை அளித்து, வாக்கு என்பது ஒவ்வொருவரின் உரிமை என்றும் அதை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதன்மூலம், 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் திருவிழாவில் முதல்முறை வாக்காளர்கள் நிச்சயம் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை அனைத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
நாட்டில் உண்மையான வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால், முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, முதல்முறை வாக்காளர்கள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலையில், இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.
மேலும், ஒன்றிய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்படும் என்றும் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. அக்னிபாத் திட்டம் ஒழிக்கப்படும். மாணவர்களுக்காக கல்விக் கடன் ரத்து, விளையாட்டு உதவித் தொகை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை காங்கிரஸ் கட்சி இளைஞர்களுக்காக உருவாக்கி அறிவித்துள்ளது.
எனவே, மக்களவைத் தேர்தலில் வாக்கு அளிக்கச் செல்லும் முன்பு, இந்த 10 அம்சங்களையும் இளைஞர்கள், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏன் வாக்களிக்க வேண்டும்:
இளைஞர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர்கள் நிச்சயம் இந்தியா கூட்டணிக்கு தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் நீட் தேர்வு விவகாரத்தில் மிகத் தெளிவாக இருந்து வருகின்றன. ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்பது திமுகவின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சியும் எடுத்துள்ளது.
எனவே, முதல்முறை வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள், மேற்கண்ட அம்சங்களை தங்கள் மனக் கண் முன் நிறுத்தி, நன்கு சிந்தித்து, தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். குறிப்பாக, நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டுமானால், அமைதியாக வாழ வேண்டுமானால், நாட்டின் வளர்ச்சி மிக வேகமாக அடைய வேண்டுமானால், தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும். அந்த நல்லாட்சியை இந்தியா கூட்டணியால் மட்டுமே தர முடியும்.
இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, தமிழகம் உட்பட நாடு முழுவதும் முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். தேர்தலில் அலட்சியமாக செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால், மிகப்பெரிய துன்பங்களையும், துயரங்களையும் மீண்டும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. முதல்முறை வாக்காளர்கள் மட்டுமல்ல, தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்ற 97 கோடி வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி, நாட்டில் ஜனநாயக நெறிமுறை பாதுகாக்க முன்வர வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment