Saturday, April 20, 2024

ஷெய்கு அப்துல் காதிர்....!

 "இலக்கிய சீதக்காதி நூன் எனும் ஷெய்கு அப்துல் காதிர்"

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

தமிழ் இலக்கியத்திற்கு தங்களது அற்புதமான எழுத்துகள் மூலம், மிகப்பெரிய சேவை ஆற்றிய முஸ்லிம் எழுத்தாளர்களின் எண்ணிக்கை நிறைய உண்டு. எந்தவித பந்தாவும் இல்லாமல், அமைதியாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு, மறைந்த எழுத்து வள்ளல்களின் எழுத்துக்கள், இலக்கியப் படைப்புகள் மனித சமுதாயத்தை இன்றும் நெறிப்படுத்தும் வகையில் இருந்து வருகின்றன. 

தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் தங்களது ஆற்றல் மிகு எழுத்தாற்றல் மூலம், மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர்கள், அவர்கள் மறைந்த பிறகும், இன்னும்  வாழ்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். 

அற்புதமான  இலக்கியப் புதுமையை செய்த இத்தகைய எழுத்து வள்ளல்கள் குறித்து தமிழ்ச் சமுதாயம் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, இஸ்லாமியச் சமுதாயம், தமிழகம் தங்களுக்கு தந்த முஸ்லிம் எழுத்து வள்ளல்கள் குறித்து அறிந்துகொண்டு, அவர்களின் எழுத்துப் படைப்புகளை தாங்களும் படித்து மற்றவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இதன்மூலம், தமிழ் இலக்கியத்திற்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும், இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஆற்றியப் பணிகளை இளைஞர் சமுதாயம் அறிந்துகொள்ள முடியும். நல்ல இலக்கியச் சுவையை அறிந்துகொண்டு, ரசிக்க முடியும். 

தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாமல், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் தனது எழுத்தாற்றல் மூலம் மிகப்பெரிய சேவை ஆற்றிய, ஒரு அற்புதமான மனிதர் குறித்து இந்த கட்டுரையில் நாம் சில முக்கிய தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறோம். அதை நீங்கள் படிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களிடமும் கொண்டுச் சேர்க்க வேண்டும். அதன்மூலம் அந்த எழுத்து மனிதரின் வரலாறு எப்போதும் நிலைத்து நிற்கும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தும். குறிப்பாக, இளம் எழுத்தாளர்களை சிறப்பாக செயல்பட்டு எழுத ஊக்குவிக்கும். வாருங்கள், இலக்கிய சீதக்காதி நூன் எனும் நூ.பீ.ஷெய்கு அப்துல் காதிர் அவர்களைக் குறித்து பல சுவையான தகவல்களை அறிந்துகொள்வோம்.

இலக்கிய சீதக்காதி நூன் எனும் ஷெய்கு அப்துல் காதிர்:

இஸ்லாமிய உலகம் தந்த மிகச் சிறந்த பத்திரிகையாளரான ஷெய்கு அப்துல் காதிர், இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் நத்தம் கிராமத்தில், 1920ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே எழுத்துத்துறையில் ஆர்வத்துடன் இருந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படிப்பை நன்கு படித்து தேர்ச்சி அடைந்தார். இந்த தேர்ச்சியின் மூலம் அபிராமம் நத்தத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமை அப்துல் காதிருக்கு கிடைத்தது. 

தென்னகத்திலேயே குறிப்பிடத்தக்க பெருந்தனக்காரராக விளங்கிய துபாஷ் காதிர் அவர்களின் தலைமகள் வயிற்றுப் பேரர் அப்துல் காதிர், பட்டப்படிப்புக்குப் பிறகு, பத்திரிக்கைத் துறையில் தமக்கு இருந்து ஆர்வம் காரணமாக, எழுத்தாளராக மாறி, "டெக்கான் டைம்ஸ்" பத்திரிகையின் துணையாசிரியராக தம் எழுத்துச் சேவையை தொடங்கினார். 

நம் சமுதாயம் கண்ட மிகச் சிறந்த எழுத்தாளர் ஏ.ஏ.ரவூஃப் அவர்களால் எழுத்துப் பணி குறித்து பாடம் கற்றுக் கொண்ட அப்துல் காதிர், ஜலால் ஜக்கரியா அவர்களின் வழி காட்டுதலின்படி, தம் திறமையை வளர்த்துக் கொண்டு, பிரபல ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்திலும் கதை, கட்டுரைகள், அரசியல் ஆக்கங்கள் என அனைத்தையும் எழுதி, வாசகர்களின் பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். 

எழுத்துப் பணியில் தனி முத்திரை: 

"டெக்கான் டைம்ஸ் பத்திரிக்கைப் பணிக்குப் பிறகு, "கிரஸண்ட்" வார இதழில் சேர்ந்த அப்துல் காதிர், பின்னர் அஹமதாபாத்தில் தொடங்கப்பட்ட "இந்தியன் எக்ஸ்பிரஸ்" பதிப்பின் ஆரம்ப துணை ஆசிரியராக சேர்ந்து தனது எழுத்தாற்றல் மூலம் அற்புதமான சேவையாற்றினார். 

ஆங்கிலத்தில் எழுதி வந்த அப்துல் காதிருக்கு அழகிய தமிழிலும் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இருந்து வந்தது. இதற்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர், மணிச்சுடர் நாளிதழ் நிறுவனருனம் அப்போதைய மணிவிளக்கு இதழின் ஆசிரியருமான மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்கள் ஆவார்கள். 

அப்துல் காதிரின் இலக்கிய நயத்தைக் கண்டு வியப்பு அடைந்த அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள், அதைக் கொண்டாடியவர்களின் தன்னைப் போன்று யாரும் இருக்க முடியாது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார். 

"சீதக்காதி" என்ற புனைப் பெயரில் கதைகளை எழுதிய அப்துல் காதிர், அதில் தனி முத்திரைப் பதித்துக் கொண்டார். சிங்கப்பூர் "மலாயா நண்பன்" தினசரியில் ஆசிரியராகவும், அவர் பணியாற்றினார். அந்த பத்திரிக்கையில் அப்துல் காதிர் எழுதிய தலையங்கம் புதிய முறையில் அமைந்து இருந்தது. இதனால் வாசர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

'இரத்தமணல்' என்ற தலைப்பில் அவர் எழுதிய சரித்திரக் சிறுகதையைப் படித்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அதை மறக்கவே மாட்டார்கள். இமாம் ஹுஸைனாரின் தியாக மரணத்தை, கர்பலா களத்தின் கண்ணீர்க் கதையாக இரத்த மணலாக எழுத்தில் வடித்தவர் நூன் எனும் அப்துல் காதிர். பக்கம் பக்கமாக அந்தச் சோக, தியாக, தீர வரலாற்றைக் கட்டுரையாகவும், நூலாகவும் எழுத முடியும். ஆனால், கட்டுக்கோப்பான சிறுகதையாக அதனை எழுதிய சிறப்பு அப்துல் காதிருக்கு மட்டுமே உண்டு. அற்புதமான உணர்ச்சியமான சிறுகதை அது. 

சரித்திரக் கதைகளை மட்டுமல்லாமல், சமூகச் சிறுதைகளையும் அப்துல் காதிர் எழுதப் பின்வாங்கவில்லை. தமிழ்நாட்டிற்கும், பர்மாவுக்கும் இலக்கிய, கலாச்சார பாலம் அமைப்பதுபோல், நல்ல, நறுக்கான சிறுகதைகளையும் அவர் படைத்திருக்கிறார்.  

மணிவிளக்கின் ஆஸ்தான எழுத்தாளர்:

மர்ஹும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது அவர்கள் நடத்திவந்த மணிவிளக்கு இதழில், அற்புதமான படைப்புகளை எழுதி, ஆஸ்தான எழுத்தாளர் இடத்தைப் பிடித்த அப்துல் காதிர், பிறை, முஸ்லிம் முரசு உள்ளிட்ட இஸ்லாமிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி, வாசர்களின் அன்பைப் பெற்றார்.  மணிவிளக்கு இதழில், 1971ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் அப்துல் காதிர் பணிபுரிந்து அற்புதமான படைப்புகளை எழுதி குவித்தார். 

தமக்கு இருந்த இலக்கிய ஆர்வம் காரணமாக, தமிழ் இலக்கிய உலகத்திற்கும் இஸ்லாமிய இலக்கிய உலகத்திற்கும், இலக்கியப் படைப்புகளை வாரி வழங்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக "சீதக்காதி" என்ற புனைப் பெயரைச் தமக்கு சூட்டிக் கொண்டு, அற்புதமான இலக்கியப் படைப்புகளை வாரிய வழங்கிய வள்ளல்தான் அப்துல் காதிர் அவர்கள் ஆவார்கள். 

தமிழகத்தின் பிரபல வார இதழான ஆனந்த விகடன், கடந்த 1975ஆம் ஆண்டு, ஹஜ் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. இந்த சிறப்பிதழில், அப்துல் காதிர் எழுதிய "நிறைவு" என்ற சிறுகதை இடம்பிடித்து இருந்தது. தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் தத்துவங்களை மிகச் சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்ட அந்தச் சிறுகதை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. 

இலக்கிய சீதக்காதி நூன் எழுதிய சமூகச் சிறுகதைகளில் ஒருசிலவற்றை இங்கு குறிப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். பவுன் ஹாஜியார், கிடைக்காத செல்வம், நினைவுப் பரிசு, மலராத மொட்டு, கடமை, பிரிவும் பரிவும் போன்ற சிறுகதைகள் என்றும் மறக்க முடியாத சிறுகதைகளாகும். 

இதேபோன்று, வெற்றிக்கு மேல் வெற்றி, வெற்றிப் பரிசு, வெற்றிப் பிறை, அந்தி வானம், ரஜியா சுல்தானா போன்ற பல அற்புதமான வரலாற்று புதினங்களையும் அப்துல் காதிர் படைத்தார். முஸ்லிம் முரசு இதழில், அவர் எழுதிய “ரஜியா சுல்தானா" மறக்க முடியாத சரித்திரத் தொடர்கதை. முஸ்லிம் வாசகர்களை மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் இந்த தொடர் மிகவும் கவர்ந்தது. 

நபிகள் நாயகம் (ஸல்) தொடர்கள்:

அருமை நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய அப்துல் காதிர் எழுதிய ஒவ்வொரு தொடர்களும் அரிய மற்றும் இனிய வரலாற்றுப்பு பதிவுகள் என்றே கூறலாம். அற்புதமான எழுத்த நடை, பாணி, தனித்தன்மை ஆகியவற்றின் மூலம், நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அவர் எழுதிய படைப்புகள் வாசர்களை பெரிதும் கவர்ந்தன. "அண்ணல் முஹம்மது எனும் அழகிய முன்மாதிரி" ஷெய்க் அப்துல் காதிரின் முத்திரைத் தொடராகும்.  மணிவிளக்கு இதழில், 63 அத்தியாயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், மணிவிளக்கு, அறமுரசு இதழ்களில் பணியாற்றியபோது, கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்தார். 

திருக்குர்ஆன் வசனங்களின் பின்னணியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நபிமார்களின் வரலாற்று தொகுத்து வழங்கிய சிறப்பு அப்துல் காதிருக்கு உண்டு. பன்மொழி எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி என பன்முகத்தன்மைக் கொண்ட சீதக்காதி நூன், அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான், நடத்தி வந்த நேஷ்னல் எகேனாமிக் ஃபோரம் என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி, அற்புதமான சேவையை ஆற்றியுள்ளார். 

ஓய்வில்லாத எழுத்துப் பணி:

பர்மாவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தல் 14 ஆண்டுகள் பணியாற்றி அவர், ரங்கூன் சோலியா முஸ்லிம் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து பல்வேறு சேவையை ஆற்றி இருக்கிறார். எங்கு பணிபுரிந்தாலும், தமக்கு இருந்து இலக்கிய ஆர்வம் மற்றும் எழுத்தாற்றாலை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருக்க அப்துல் காதிர் தயக்கம் காட்டியதே இல்லை. 

அபிராமம் நத்தம் கிராமத்தில் பிறந்த ஷெய்க் அப்துல் காதிர், கடந்த 1986ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி இறைவனின் அழைப்பு ஏற்றுக் கொண்டார். அண்ணலார் முஹம்மது எனும் அழகிய முன்மாதிரி என்னும் தொடரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் எழுதிக் கொண்டிருந்தபோது, அப்துல் காதிர் காலமானபோது, "நூன் பேனா ஓய்ந்தது" மணிவிளக்கு ஆசிரியர் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது இரங்கல் தெரிவித்து இருந்தார். 

சீதக்காதி மற்றும் நூன் ஆகியப் புனைப் பெயர்களின் சுமார் 50 ஆண்டுகள் இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதிய அப்துல் காதிர், தமிழ் இலக்கியத்திற்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாது.  

எழுத்து மற்றும் இலக்கியப் பணிகளில் மிகவும் ஆர்வத்துடன் இருந்த அப்துல் காதிர், இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்கும் தனி அக்கறையுடன் இருந்து வந்தார். குறிப்பாக, இஸ்லாமியர்கள் நல்ல கல்வி கற்க வேண்டும் என ஆர்வ துடிப்பு அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அதன் காரணமாக தன்னுடைய மகன் நூ.ஷே.முஹம்மது அஸ்லம், நன்கு கல்விப் பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என எண்ணம் கொண்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மகனை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். 

தந்தை அப்துல் காதிரின் இந்த அற்புதமான செயல் காரணமாக, அவரது மகன் முஹம்மது அஸ்லம் நன்கு கல்விப் பயின்று, தமிழக அரசுப் பணியில் சேர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் வரை உயர்வுப் பெற்று ஓய்வுபெற்றுள்ளார். 

ஒரு மனிதர் தனக்கு ஏக இறைவன் வழங்கியுள்ள ஆற்றலை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பதற்கு நூ.பீ.ஷெய்கு அப்துல் காதிர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம். ஏக இறைவன் வழங்கிய எழுத்தாற்றல் எனும் அருட்கொடையை மிகவும் சிறப்புடன் பயன்படுத்திக் கொண்டு, நல்ல படைப்புகளை எழுதி, அதன்மூலம் தமிழ் இலக்கியத்திற்கும், இஸ்லாமிய இலக்கியத்திற்கும், அப்துல் காதிர் ஆற்றிய பணிகள் எப்போதும் நிலைத்திற்கு நிற்கும். சீதக்காதி மற்றும் நூன் எனும் அப்துல் காதிர் ஒரு இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், நல்ல மனிதராகவும் வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையை மற்றவர்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்களுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக முன்வைத்து மறைந்துள்ளார். வாழ்க்கையை முழுமையாக நல்ல முறையில் பயன்டுத்தக் கொள்ளுங்கள் என்னும் அற்புதமான கருத்தை நம்மிடம்  அப்துல் காதிர் விட்டுச் சென்று இருக்கிறார் என்றே கூறலாம். 

========================


No comments: