மதசார்பற்றக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்திய மக்கள்....!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஒரு மதசார்பற்ற நாடாக இருந்து வருகிறது. நாட்டில் வாழும் 140 கோடி மக்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகங்கள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு சமூக மக்களும், தங்களது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருந்து வருகிறார்கள். நிலைத்து நிற்கிறார்கள்.
மற்றவர்களின் கலாச்சாரங்களில், பண்பாடுகளில், யாரும் மூக்கை நுழைக்காமல், அமைதியாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பண்டிகை மற்றும் திருவிழாக்காலங்களில், ஒவ்வொரு சமூக மக்களும், மற்றவர்களுடன் கூடி, தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி, மதசார்பின்மையை உறுதியாக கடைப்பிடித்து வருகிறார்கள்.
நாடு விடுதலை அடைந்தபிறகு, மதசார்பற்றக் கொள்கை உறுதியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒருசில பகுதிகளில் மதசார்பின்மையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. மக்கள் ஒற்றுமையுடன் வாழ விரும்புவதால், இத்தகைய முயற்சிகள் தோல்வியே அடைந்தன.
பா.ஜ.க. ஆட்சியில் வெறுப்பு முழக்கங்கள்:
உலகின் மிகவும் அற்புதமான மதசார்பற்ற நாடாக இருந்து வரும் இந்தியாவில், ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. மதசார்பின்மையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூகங்கள் இடையே வெறுப்பு ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பிரச்சினையை உருவாக்கி, அமைதியை சீர்குலைக்க திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இதன் காரணமாக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு போன்ற முழக்கங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக, சிறுபான்மையின மக்களை குறிவைத்து, அவர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இயங்கி வருகின்றன.
தற்போது நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், மீண்டும், வெறுப்பு பேச்சுகள், வெறுப்பு முழக்கங்கள் மிகவும் வேகமாக தலை தூக்கியுள்ளன. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சை குறிப்பிடலாம்.
"நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக பொய் தகவலைக் கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் சொத்துக்கள், இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும்" என மோடி பேசி, அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கே களங்கம் ஏற்படுத்தி இருக்கிறார்.
தனது பத்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து, மக்களிடம் எடுத்துக்கூறி, வாக்குகளை கேட்க தைரியம் இல்லாத மோடி, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, அதன்மூலம், மக்களவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கோபம் அடைந்த மக்கள்:
இந்திய முஸ்லிம்கள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், மோடிக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுஒருபுறம் இருக்க, இந்திய முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய வெறுப்பு பேச்சுக்கு, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்திய தலைவர்களிலேயே மிகவும் மோசமான தலைவர், மோசமான பிரதமர் மோடியே தான் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்திய நாட்டில் வாழ்ந்து, நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிர், உடமைகளை இழந்த முஸ்லிம்கள், இன்னும் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையாமல், வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிரதமருக்கு முஸ்லிம் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் எப்படி பேச முடிந்தது என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
பட்டியல் இன மக்களை விட சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் தளங்களில் மிகவும் மோசமான நிலையில் இந்திய முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகையை சூழ்நிலையில் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி ஏன் இவ்வளவு துவேஷமாக பேசுகின்றீர் என பிரதமர் மோடிக்கு மக்கள் வினா எழுப்பி இருக்கிறார்கள்.
இந்தியாவில் வாழும் 87 கோடி இந்துக்களின் சொத்துக்களை, 27 கோடி முஸ்லிம்கள் எப்படி அபகரிக்க முடியும் என்றும், ஒரு தாய் மக்களாக வாழும் மக்களை பிளவுபடுத்தும் முயற்சி எதற்காக செய்கிறீர்கள் என்றும், வரலாறு உங்களை மன்னிக்காது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளிலும் மக்கள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள் என்ற தரவுகள் கிடைத்தால், இதுபோன்ற, வெறுப்பை பேச்சு மோடி கையில் எடுத்து இருப்பதாக சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் சாடியுள்ளார்.
நாட்டில் வாழும் இந்திய முஸ்லிம்கள் அனைவரும், மதசார்பற்ற நாட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பாதுகாப்பின்மையை உணர தொடங்கி இருக்கிறார்கள். சகோதரத்துவத்தை பா.ஜ.க. தலைவர்கள் தங்களுடைய வெறுப்பு பேச்சின் மூலம் சீர்குலைத்து வருகிறார்கள் என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் சலீம் ஷெர்வானி வேதனை தெரிவித்துள்ளார்.
மதசார்பற்றக் கொள்கையில் உறுதி:
ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி வெறுப்பை கக்கிய நிலையில், அதற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் தொடர்ந்து கிளம்பியுள்ளதால், தற்போது தங்களது சுருதியை பா.ஜ.க.வினர் சற்று குறைத்துள்ளனர். எனினும், மீதமுள்ள 6 கட்டத் தேர்தல்களில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மறுக்க முடியாது. இதைத்தான், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கும் முன்பே எச்சரித்து இருந்தார். அது தற்போது நிகழ்ந்து வருகிறது.
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்க முயற்சி செய்தாலும், தற்போது நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களது மதசார்பற்றக் கொள்கையில், நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் நிலைத்து நிற்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் மோடிக்கு எதிராகவும், பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகவும் வரும் பதிவுகள், கருத்துகளை, கண்டனங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், மக்கள் எப்படி மதசார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்து வருகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
பல்வேறு இனங்கள், பல்வேறு சமூகங்கள் கொண்ட 140 கோடி மக்கள் வாழும் இந்திய நாடு, முன்பும் மதசார்பற்ற நாடாக இருந்தது. இனி எப்போதும் மதசார்பற்ற நாடாக இருக்கும். நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க செய்யப்படும் முயற்சிகள் இனி ஒருபோதும் பலன் அளிக்காது. அதை, 18வது மக்களவைத் தேர்தல் மூலம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 97 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையயை பயன்படுத்தி, பா.ஜ.க.விற்கு படுதோல்வியை தருவார்கள். இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்து, மதசார்பற்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ தனது பணிகளையும், கடமைகளையும் சிறப்பான முறையில் செய்யும் என உறுதியாக நம்பலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment