உணவின்
முக்கியத்துவமும், பட்டினியால் வாடும் மக்களும்....!
பெரும்பாலான திருமண விழாக்களில் மட்டுமல்ல,
பொதுவாக நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விதவிதமான சுவையான உணவு வகைகள் விருந்தாளிகளுக்கு பரிமாறப்படுகின்றன. இந்த விழாக்களில்,
முக்கிய உணவுக்கு முன்பு, விருந்தினர்களுக்கு முதலில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள்,
அதாவது சுவையான தேநீர், சுவையான இனிப்பு, சுவையான குளிர்ந்த பானம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இத்தகைய உணவு வகைகளை விருந்தாளிகளில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் வாங்கி உண்ணுகின்றனர்.
இதைத் தொடர்ந்து மதிய உணவு அல்லது இரவு உணவு.என விருந்தாளிகளுக்கு
வழங்கப்படுகிறது. விழாவிற்கு வரும் அனைவருக்கும், குளிர்ந்த பானம், தேநீர், இனிப்பு
வகைகள் என முதலில் அளிக்கப்படுவதால், அதை உண்ணும், அவர்கள் வயிறு நிரம்பியவர்களாகவே
மாறிவிடுகின்றனர். பின்னர், மதிய உணவு, அல்லது இரவு உணவு என்ற முக்கியமான விருந்துக்குச்
செல்லும்போது, அவர்களில்
பலர் உணவை அதிகமாகவும் மிருகத்தனமாகவும் சாப்பிடுவதை நாம் அடிக்கடி கவனிக்கலாம்.
இப்படி, சாப்பிடும் அவர்கள், அந்த உணவை முழுமையாக சாப்பிட்டு
முடிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தால், நிச்சயமாக இல்லை என்ற
பதில் தான் வருகிறது. பெரும்பாலான விருந்தாளிகள், தங்களுக்கு வைக்கப்படும் உணவு வகைகளை,
சிறிது சிறிது மட்டுமே சுவைத்துவிட்டு, அதை அப்படியே சாப்பிடாமல் மீதம் வைத்து விடுகிறார்கள்.
இதனால் முக்கிய விழாக்களில், உணவுகள் வீணடிக்கப்பட்டு, குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது.
மாறாத மக்களின் மனநிலை:
திருமண விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களில், இந்த செயல் தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உணவின் முக்கியத்துவம் குறித்து இஸ்லாமிய மார்க்கம்
சிறப்பான முறையில் எடுத்துக் கூறிய நிலையிலும், முஸ்லிம்கள் மத்தியிலும், உணவை வீணடிக்கப்படும்
பழக்கம் இருந்து வருவது வேதனை அளிக்கிறது.
இதேபோன்று, உணவு விடுதிகளுக்குச் செல்லும் மக்களில் பெரும்பாலோர்,
அதிகப்படியான உணவுகளுக்கு ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் அதை சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு
வருகின்றனர். இது, பின்னர், குப்பைத் தொட்டியில் வீசப்படுகிறது என்பதை அவர்கள் நன்கு
அறிந்தும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஒருசில உணவு விடுதிகளில், வாடிக்கையாளர்கள்,
தாங்கள் ஆர்டம் செய்யும் அனைத்து உணவு வகைகளையும் ரூசித்து சாப்பிட்டு, சென்றால் நாங்கள்
மகிழ்ச்சி அடைவோம் என விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைக்கிறார்கள்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உணவு சாப்பிடும்போது,
அதை முழுமையாக சாப்பிட்டு முடித்து விடுவார்கள். அவர் சாப்பிட்டு முடிக்கும்போது, அவரது
தட்டு அல்லது கிண்ணத்தை கவனித்தால் அது மிகவும் தூய்மையாக இருக்கும் என்றும் அதில்,
உணவு மீதமாக இருக்காது என்றும், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு ஹதீஸ் உள்ளது, இதன்மூலம்,
இஸ்லாம் உணவின் முக்கியத்துவம் குறித்தும், அதை வீணாக்கக் கூடாது என்பது குறித்தும்,
மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் கூறி இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
உணவின்
முக்கியத்துவம்:
உணவின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள உங்களுக்கு ஆசையா? அப்படியெனில்,
பல நாட்கள் கடந்தும் உணவு கிடைக்காமல், பட்டினி கிடக்கும் மக்களிடம்
உணவின் முக்கியத்துவம் பற்றி கேளுங்கள். உணவை மதிக்க வேண்டும் என்ற போதனை கிட்டத்தட்ட
எல்லா மதங்களிலும் உள்ளது, இஸ்லாமிய மார்க்கத்தில்,உணவின் முக்கியத்துவம் பற்றிய ஏராளமான
குறிப்புகள், திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ளன.
ஏக இறைவன், தன் அடியார்கள் உண்பதற்காக ஏராளமான உணவுப் பொருட்களை
படைத்துள்ளான். அவற்றை உண்ணும் போதும், தனது பசியைத் தணிக்கும்போதும் ஒரு நபர்,, வெவ்வேறு விஷயங்களின் வெவ்வேறு இன்பங்களை
உணர்கிறார். அவற்றிலிருந்து தன் உடலுக்குத் தேவையான பலத்தையும் சக்தியையும் பெற்று
தன் வாழ்வை வாழ்கிறான்.
இத்தகைய சூழ்நிலையில், ஏக இறைவன் தனது திருமறையில் உணவு குறித்து
குறிப்பிடும்போது, “மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும்,
பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான
பகைவனாளவான்” (அத்தியாயம் 2:168)
ஏக இறைவனின்
இந்த அறிவுரை மூலம், தூய்மையானப் பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை
பின்பற்றி அதனை வீணடிக்கக் கூடாது என நமக்கு நன்கு தெரிய வருகிறது. இதேபோன்று, உணவு மற்றும் பானம் தொடர்பாக நபிகள் நாயயம் (ஸல்) அவர்களின்
பல்வேறு ஹதீஸ்களில் காணப்படும் வழிகாட்டுதல்கள், மக்களுக்கு நல்ல வெளிச்சத்திற்கு அழைத்துச்
செல்கிறது.
“நிச்சயமாக, உணவின் கடைசி பகுதி ஆசீர்வதிக்கப்படுகிறது. மேசையில்
கிடந்த சிறுசிறு உணவுத் துண்டுகளைக் கூட வீணாக்கக் கூடாது” என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். இறுதிவரை ஒரே இடத்தில் உணவை முடிப்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின
பழக்கமாக இருந்தது என நாம் அறிய முடிகிறது.
உணவை வீணடிக்கக்
கூடாது:
ஏக இறைவன் வழங்கிய உணவை வீணாக்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மற்றும் அவரது வாழ்க்கை நமக்கு எடுத்துக் கூறுகிறது. உணவு
என்பது ஒரு வரம். அதை வீணாக்காமல் கவனமாகக் காப்பாற்றுபவர், தனது இந்த செயல் மூலம்,
நல்ல செழிப்பை பெற முடியும். உணவை வீணாக்காமல் இருந்தால், உலகில் எங்கும் உணவுப் பற்றாக்குறை
இருக்காது, யாரும் பசியுடன் தூங்க வேண்டியதில்லை.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் திட்டத்தின் சமீபத்திய
அறிக்கையின்படி, 2022இல் உலகில் 1.05 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளது. . அதாவது,
உலகில் உள்ள உணவில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வயிற்றிற்குச் செல்வதற்குப் பதிலாக
வீணாகிறது. 2022 ஆம் ஆண்டில், கெட்டுப்போன அல்லது வீணாக்கப்படும் உணவின் மதிப்பு ஒரு
டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகில் 783 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையால்
பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த நிலை. வீணாகும் உணவு, சேமித்து வைத்திருந்தால், கோடிக்கணக்கான
மக்களுக்கு உணவை வழங்கியிருக்கலாம்.
உண்மையில், உலகம் சமநிலையற்றது. ஒரு பிரிவினர் உணவை வீணாக்குகிறார்கள்,
மற்றொரு பிரிவினர் குறைந்தபட்ச தேவையான உணவைப் பெறாமல் உள்ளனர், 2018ஆம் ஆண்டில் உலகில்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 21.9% பேர் உணவுப் பற்றாக்குறையால் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள்,
அதாவது சுமார் ஒன்றரை மில்லியன் குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்றவாறு வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள்
என்பதிலிருந்தே இதன் தீவிரம் தெரிகிறது. உலகில் 3 பிராந்தியங்களில் உணவுப் பற்றாக்குறையால்
குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய பிரச்னை அதிகமாக உள்ளது. இந்த பிராந்தியங்கள் தெற்காசியா,
கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆப்பிரிக்கா ஆகும்.
மிகப்பெரிய
சோகம்:
ஒரு அறிக்கையின்படி, வயல்களில் அறுவடை செய்யும் போது அல்லது
உணவு பேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் போது உணவு உற்பத்தியின் பெரும்பகுதி
இழக்கப்படுகிறது. உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு கொண்டு செல்பவர்களும் அதாவது நுகர்வோரும்
இந்த விரயத்திற்கு பெரும் பொறுப்பு. ஒரு ஆய்வின்படி, ஸ்வீடனில் உணவு சேவைத் துறையால்
வாங்கப்படும் உணவில் 20 சதவீதம் வீணடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் ஸ்டேட்
யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், .49% மாணவர்கள் காலை உணவையும், 55% மதிய உணவையும்,
35% இரவு உணவையும் தவிர்ப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி, உலகில் பல்வேறு நிலைகளில்
உணவு வீணடிக்கப்படுகிறது, உணவுத் தட்டுகளில் மட்டும் 6% உணவு வீணடிக்கப்படுகிறது.
குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகள் உணவுப் பொருட்களை வீணடிப்பதில்
பணக்கார நாடுகளுக்குப் பின்தங்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்
கூட உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகப்படியான
உணவு தயாரித்தல், நுகர்வோர் உணவை வீணாக்குதல் மற்றும் உணவு கெட்டுப் போவது போன்ற காரணங்கள்,
உணவு வீணடிக்கப்படும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
ஒருபுறம், உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பசியுடன் வாடும்
நிலையில், மறுபுறம், பெரும்பாலான மக்களின் இதயமின்மையால், உணவு வீணடிக்கப்படுகிறது,
இது மிகப்பெரிய சோகம் மட்டுமல்ல, மனித சமுதாயத்திற்கு செய்யும் அநீதி என உறுதியாக கூறலாம்.
-
எஸ்.ஏ.அப்துல்
அஜீஸ்
No comments:
Post a Comment