Saturday, April 27, 2024

வறுமை ஒரு தடையே இல்லை....!

" வாழ்க்கையில் சாதிக்க வறுமை ஒரு தடையே இல்லை....!"

-  ஜாவீத்  -

வாழ்க்கை ஒரு அற்புதமான அருட்கொடை. ஏக இறைவனால் வழங்கப்பட்ட இந்த அருட்கொடையில் ஏற்ற, இறக்கங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள், இன்பங்கள், துன்பங்கள் இருந்தால்தான், அது சுவையான வாழ்க்கையாக அமையும். அதன்மூலம் நமக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். 

நாள்தோறும் நாளிதழ்களைப் படிக்கும்போது, அதில் பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துகொண்டே, வாழ்க்கையில் சாதித்த இளைஞர்கள் குறித்தும், இளம் பெண்கள் குறித்தும், செய்திகளைப் படிக்கும்போது, வாழ்க்கையை வெறுத்து, ஒதுங்கும் இளைஞர்கள் வெட்கப்பட வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது. 

கல்வியில் ஆர்வம்:

கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் மத்தியில், தற்போது கல்விக் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, பல்வேறு இன்னல்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர்கள், கல்வியில் ஆர்வம் செலுத்த தொடங்கி, அதில் முழு கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். 

குறிப்பாக, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்கள், கல்வி மீது அதிக ஆர்வத்துடன் இருப்பதைக் கண்டு, சமுதாயம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இப்படி ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர் சமுதாயத்தை, ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதை முக்கிய கடமையாக நமது சமுதாயம் கருத வேண்டும். 

உயர்கல்வியில் மட்டுமல்லாமல், உயர் பதவிகள் மீதும் தற்போது முஸ்லிம் சமுதாய இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது. அவர்கள் மத்தியில் ஒருவித ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் சாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. 

இதில் நாடு முழுவதும் ஆயிரத்து 16 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் 50 பேர் முஸ்லிம் இளைஞர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் கடினமாக கருதப்படும் இந்த சிவில் சர்வீஸ் தேர்வை, பல தடைகளையும் தாண்டி, நமது இளைஞர்கள் சாதித்து இருக்கிறார்கள். தரவரிசையில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியலில் நௌஷீன், வர்தா கான், சுபைஷன் ஹக், ஃபபி ரஷீத் ஆகிய நான்கு  முஸ்லிம்கள் இடம்பிடித்து இருப்பது உண்மையிலே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஷாயிதா பேகமும், தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். 

வறுமையில் சாதனை:

இப்படி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம், 50 முஸ்லிம் இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில், சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த  இன்பா என்ற இளம் பெண்ணும் இந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர், வறுமையில் கூட, தாம் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என்ற கனவை கைவிடவில்லை. இவரது தாய் பீடி சுற்றும் தொழிலாளி இருந்து வருகிறார். அத்துடன், கடை வீதிகளில் பூ விற்கும் வியாபாரியாகவும் செயல்பட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார். 

இத்தகைய வறுமையான சூழ்நிலையிலும் வருவாய் குறைந்த நிலையிலும் தனது மகள் இன்பா, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கண்ட கனவை நிறைவேற்ற, தாய் ஸ்டெல்லா முழு ஒத்துழைப்பை அளித்துள்ளார். நாள்தோறும் ஊக்கப்படுத்தியுள்ளார். 

தமிழகத்தின் தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த இன்பா, தனது இலட்சியத்தை அடைய கடந்த இரண்டு ஆண்டுகளாக, செங்கோட்டை பொது நூலகத்திலேயே முழு நேரத்தையும் செலவழித்து, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தியுள்ளார். 

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் இரண்டு முறை தோல்வி அடைந்தபிறகும், இன்பா, தனது இலட்சியைத்தை கைவிடவில்லை. தனது கனவு எப்படியும் நிறைவேற வேண்டும் என்ற ஒரே இலக்குடன், கடின உழைப்பை செலுத்தி, இந்த முறை, தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய தரவரிசைப்பட்டியலில், 851வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார். 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்ற இன்பா, அந்த பணம், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நூல்களை வாங்க மிகவும் பயன் உள்ளதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். 

வறுமை தடையில்லை:

வாழ்க்கையில் சாதிக்க வறுமை ஒரு தடையே இல்லை என்பதற்கு இன்பா போன்றவர்கள்  ஒரு நல்ல எடுத்துக்காட்டு என கூறலாம். அத்துடன், வாழ்க்கையில் சாதித்தவர்கள் எல்லோரும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை புள்ளிவிவரங்கள் நமக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சாதாரண பீடி சுற்றும் தொழிலாளியின் மகளான இன்பா, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் வாழ்க்கையில் சாதித்து, தனது இலட்சியத்தை அடைந்து இருக்கிறார் எனில், ஓரளவுக்கு வசதிக் கொண்டவர்கள் ஏன் சாதிக்க முடியாது என்ற வினா எழுகிறது. 

எந்தவொரு துறையிலும் சாதிக்க வேண்டுமானால், நம்முடைய இளைஞர்களின் இலட்சியம் மிகவும் உயர்வான இலட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி நமது இளைஞர்கள் பயணிக்க வேண்டும். பாதை மிகவும் கரடுமுரடானது தான். அதற்காக தயங்கி நின்றுவிடக் கூடாது. இலட்சியத்தைப் பாதியிலேயே கைவிட்டு விட்டு ஓடக்கூடாது. கடின உழைப்பைச் செலுத்தி, தொடர்ந்து முயற்சிச் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதனை நமது இளைஞர் சமுதாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

========================


No comments: