இன்ஷா அல்லாஹ்.....! ஏக இறைவன் விரும்பினால்....!!
மாற்று மத தோழர் ஒருவர் என்னிடம் எப்போதும் அன்புடன் பழகும் குணம் கொண்டவர். ஒருமுறை அவர் என்னிடம் இந்த கேள்வியை எழுப்பினார். அதாவது, முஸ்லிம்களாகிய நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஏன் இன்ஷா அல்லாஹ் என்று கூறுகிறீர்கள். இன்ஷா அல்லாஹ் என்றால் என்ன? அப்படி கூறக் காரணம் என்ன? இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள அவர் விருப்பம் தெரிவித்தார்.
நண்பரின் சந்தேகத்தில் நிச்சயம் நியாயம் உள்ளது. முஸ்லிம்களாகி நாம் அனைவரும் 'இன்ஷா அல்லாஹ்' என்ற வார்த்தையை இயல்பாக பயன்படுத்தி வருவதை கேட்டும் அறிந்தும் இருக்கிறோம். முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதை மாற்று மத தோழர்கள், தோழிகள் கண்டும், கேட்டும் இருப்பார்கள். குறிப்பாக முஸ்லிம் ஒருவர், எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது செய்ய நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். 'இன்ஷா அல்லாஹ்' அடுத்த மாதம் என்னுடைய மகனின் திருமணம் வைத்து இருக்கிறேன். நீங்கள் அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டும். இப்படி, முஸ்லிம்கள் சொல்வதை வழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படி சொல்லக் காரணம் என்ன என்பது தான் மாற்று மத தோழரின் வினாவாக இருந்தது.
இன்ஷா அல்லாஹ் ஒரு அற்புதமான சொல்:
‘இன்ஷா அல்லாஹ்' என்ற இந்த அரபு வார்த்தையின் பொருள் 'இறைவன் நாடினால்' என்பதாகும். ஏக இறைவனின் மீது மட்டுமே முழு நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமியர்கள், அவனது கட்டளைக்கு இணங்கி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அனைத்துக் காரியங்களும் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்ய வேண்டும் என்பது முஸ்லிம்கள் இடையே பழக்கமாக இருந்து வருகிறது. இறைவன் நாடினால் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவர்களின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை தருகிறது என்பது மறக்க முடியாத நிதர்சன உண்மையாகும். 'இன்ஷா அல்லாஹ்' என்ற வார்த்தைக அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்ததா? என்றால், நிச்சயம் என்றே உறுதியாக கூறலாம்.
ஏக இறைவன் தனது திருமறை திருக்குர்ஆனில் கூறுகிறான்: “அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ் ) என்ற வார்த்தையை சேர்த்தே தவிர நாளை இதைச் செய்வேன் என்று எதைப் பற்றியும் நீர் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது இறைவனை நினைப்பீராக!” (திருக்குர்ஆன 18: 23-24)
மேலும், "நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்’’ (திருக்குர்ஆன்-9:123) என்றும், ‘‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி மகத்தான (நற்)கூலியுண்டு’’. (திருக்குர்ஆன்-3:179) என்றும், இப்படி எண்ணற்ற வசனங்கள் திருக்குர்ஆனில் கூறி, இறையச்சம் கொண்ட மக்களுடன் தான் இருப்பதாக மனிதர்களுக்கு இறைவன் நம்பிக்கை அளிக்கின்றான்.
நம்பிக்கையை தரும் சொல்:
எந்தவொரு செயல் செய்யும் போதும், 'இன்ஷா அல்லாஹ்’ அதாவது இறைவன் நாடினால் என்ற வார்த்தை நாம் பயன்படுத்தி விட்டால், நம்மிடையே நிச்சயம் ஒரு இனம் புரியாத புதிய நம்பிக்கை ஏற்பட்டு விடும். அதன்மூலம் எந்த தடங்கல்களையும் உடைத்துவிட்டு, பணிகளில் வெற்றிகளை குவித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். அதற்கு முக்கிய காரணம், இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவனே, நமக்கு துணையாக இருக்கும்போது, மற்றவர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான் ஆகும். இந்த நம்பிக்கை மனிதனை, சரியான திசையில் கொண்டு சென்று, அவனது பணிகளை எளிதாக, சிறப்பாக செய்து முடிக்க வழிவகை செய்யும்.
ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து சொல்லப்படும் 'இன்ஷா அல்லாஹ்' என்ற வார்த்தை, மனிதனை ஒழுக்க நெறிகளுடன் சரியான பாதையில் பயணிக்க தூண்டுகிறது. எதை செய்தாலும், அதில் ஒரு நேர்மை, நியாயம், ஒழுக்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படுகிறது. அதனால், பிறருக்கு எந்தவித நெருக்கடிகளையும் தராமல், சரியான திசையில், தன்னுடைய பணிகளை நிறைவேற்ற முயற்சி செய்யும் மனநிலை மனிதனிடம் உருவாகிறது. அத்துடன், ஏக இறைவனே நமக்கு பக்கபலமாக இருக்கும்போது, நாம் எடுக்கும் நல்ல முடிவுகள், சரியான வகையில் நிறைவேறும் என்ற தன்னம்பிக்கையும் மனிதனுக்கு ஏற்படுகிறது.
தவறான பாதையை தடுக்கும்:
ஒரு முஸ்லிம் 'இன்ஷா அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, தனது பணிகளில் ஈடுபடும்போது, அவனுக்கு ஏக இறைவன் மீது உண்மையான அச்சம் ஏற்படுகிறது. நாம் தவறு செய்துவிடக் கூடாது. மற்றவர்களை அழித்துவிட்டு, நாம் வாழ்க்கையில் முன்னேறக் கூடாது. தவறான வழிகளில் செல்வத்தை ஈட்டக் கூடாது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைத்து தரப்பு மக்களையும் நேசித்து வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும். அப்போதுதான் ஏக இறைவன் நமக்கு துணையாக இருந்து நமது காரியங்களை இலசாக்கி வைப்பான் என்ற எண்ணங்கள் மனிதனுக்கு ஏற்படும். இதன்மூலம், மனிதன் பிறருக்கு கெடுதல் செய்வதை விரும்ப மாட்டான். துரோக்கம் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஒருபோதும் ஏற்படாது. தன்னுடையே வாழ்க்கையை அவன் நாள்தோறும், நினைத்துப் பார்த்து, தன்னிடம் உள்ள தவறுகள் என்ன? அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என தனக்கு தானே கேள்விகளை எழுப்பி அதன்மூலம், தன்னுடையே வாழ்க்கையை நல்ல ஒழுக்க மாண்புகளுடன் கூடிய சிறந்த வாழ்க்கையாக மாற்றிக் கொள்வான். அத்தகைய வலிமையை மனிதனுக்கு இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தை நிச்சயம் ஏற்படுத்திவிடும் என உறுதியாக கூறலாம்.
தற்போது 'இன்ஷா அல்லாஹ்' என்ற சொல்லை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், மாற்று மத தோழர்களும் பயன்படுத்துவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஊடகப் பணியில் இருக்கும் என்னுடையே சக தோழர்கள், என்னிடம் பேசும்போது, 'இன்ஷா அல்லாஹ், நாளை சந்திப்போம் சார்' என்றும், 'இன்ஷா அல்லாஹ் நாளை அந்த கட்டுரையை எழுதி முடித்துக் கொண்டு வந்து தந்துவிடுகிறேன்' என்றும் சொல்வதை கேட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். ஏக இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த 'இன்ஷா அல்லாஹ்' என்ற வார்த்தை நமக்கு சாதாரண வார்த்தையாக தெரிந்தாலும், அதன் தாக்கம் மிகப்பெரிய அளவுக்கு இருக்கும் என்பதை, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கேட்டால், நிச்சயம் என்றே கூறுவார்கள். 'இன்ஷா அல்லாஹ்' மீண்டும் ஒரு கட்டுரையில் நாளை சந்திக்கலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment