பேரழிவுக்கு காரணம் மனிதனே...!
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டிய, இன்னும் கொட்டி வரும் பேய் மழைக்கு யார் காரணம் ?
இயற்கையின் இந்த கோர தாண்டவத்திற்கு யார் பொறுப்பு?
வழக்கத்திற்கு மாறாக மிக மிக கூடுதலாக கனமழை பெய்ய முக்கிய காரணம் என்ன ?
இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மனிதனே காரணம் என்றும் பொறுப்பு என்றும் பதில் வந்து விழுகிறது.
மனிதனின் சுயநலமே இயற்கை பொங்கி எழ காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை குறைவாகவும் வடமேற்கு பருவ மழை இம்முறை அதிகமாக கொட்டியதற்கும் பூமி வெப்பம் அடைந்ததே முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் பூமியில் அதிகமாக வெப்பம் நிலவியதாகவும் இதனால் பருவநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அண்மையில் நடந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் இதைத் தான் கோடிட்டு காட்டினார்கள்.
பூமி அதிக வெப்பம் அடைந்ததால், இந்திய பெருங்கடலும் கூடுதலாக வெப்பம் அடைந்தது.
இதனால் தெற்கு வங்க கடல் வெப்பம் அடைந்தது.
பொங்கியது.
இதனால், அதிலிருந்து ஆவியாக வெளியேறிய வெப்பமே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கொட்டிய பேய் மழைக்கு முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
இயற்கை வளங்களை எல்லாம் தனது சுயநலத்திற்காக மனிதன் அழித்து வருகின்றான்.
பல நூறு ஆண்டுகளாக மனிதனுக்கு நன்மையை வழங்கி பலன் அளித்த மரங்களை மனிதன் வெட்டி சாய்த்து விட்டான்.
நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட மரங்களைப் பார்ப்பது தற்போது அரிதாகி விட்டது.
புதிதாக மரங்களை வளர்க்க மனிதன் ஆர்வம் செலுத்தவில்லை.
அக்கறை காட்டவில்லை.
இதனால் பூமி நாளுக்கு நாள் வெப்பம் அடைந்து வருகிறது.
இப்படி வெப்பம் அடையும் பூமி பின்னர் மனிதனுக்கு பல்வேறு இன்னல்களை, பேரழிவுகளை பரிசாக கொண்டு வந்து தருகிறது.
இனி, மனிதன் இயற்கை விதிகளுக்கு மாறாக நடப்பதை கைவிட்டு விட வேண்டும்.
இதுதான் தற்போதைய பேரழிவு சொல்லியுள்ள எச்சரிக்கை.
இந்த எச்சரிக்கை மணிக்கு பிறகும் மனிதன் தனது சுயநலத்தை தொடர்ந்தால்.....!
வேறு என்ன சொல்ல முடியும் ?
எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment