Thursday, December 7, 2023

காரணம் என்ன....?

பேரழிவுக்கு காரணம் மனிதனே...!

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2015-ஆம் ஆண்டை போல இந்த முறையும்  கொட்டிய பேய் மழைக்கு யார் காரணம் ?

இயற்கையின் இந்த கோர தாண்டவத்திற்கு யார் பொறுப்பு? 

வழக்கத்திற்கு மாறாக மிக மிக கூடுதலாக கனமழை பெய்ய முக்கிய காரணம் என்ன ?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மனிதனே காரணம் என்றும் மனிதனே பொறுப்பு என்றும் பதில் வந்து விழுகிறது.

மனிதனின் சுயநலமே இயற்கை பொங்கி எழ காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை குறைவாகவும் வடமேற்கு பருவ மழை இம்முறை அதிகமாக கொட்டியதற்கும் பூமி வெப்பம் அடைந்ததே முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2015ஆம் ஆண்டில் பூமியில் அதிகமாக வெப்பம் நிலவியதாகவும் இதனால் பருவநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  அதே நிலைமை தற்போதும் தொடர்கிறது.

சுவிஸர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் இதைத் தான் கோடிட்டு காட்டினார்கள்.

பூமி அதிக வெப்பம் அடைந்ததால், இந்திய பெருங்கடலும் கூடுதலாக வெப்பம் அடைந்தது.

இதனால் தெற்கு வங்க கடல் வெப்பம் அடைந்தது.

மனிதனுக்கு எதிராக பொங்கியது:

இதனால், அதிலிருந்து ஆவியாக வெளியேறிய வெப்பமே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கொட்டிய பேய் மழைக்கு முக்கிய காரணம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.

இயற்கை வளங்களை எல்லாம் தனது சுயநலத்திற்காக மனிதன் அழித்து வருகின்றான். பல நூறு ஆண்டுகளாக மனிதனுக்கு நன்மையை வழங்கி பலன் அளித்த மரங்களை மனிதன் வெட்டி சாய்த்து விட்டான். நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட மரங்களைப் பார்ப்பது தற்போது அரிதாகி விட்டது.

புதிதாக மரங்களை வளர்க்க மனிதன்  ஆர்வம் செலுத்தவில்லை. அக்கறை காட்டவில்லை.

இதனால் பூமி நாளுக்கு நாள் வெப்பம் அடைந்து வருகிறது. இப்படி வெப்பம் அடையும் பூமி பின்னர் மனிதனுக்கு பல்வேறு இன்னல்களை, பேரழிவுகளை பரிசாக கொண்டு வந்து தருகிறது.

மனிதன் மாற வேண்டும்:

இனி, மனிதன் இயற்கை விதிகளுக்கு மாறாக நடப்பதை கைவிட்டு விட வேண்டும்.இதுதான் தற்போதைய பேரழிவு சொல்லியுள்ள எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை மணிக்கு பிறகும் மனிதன் தனது சுயநலத்தை தொடர்ந்தால்.....! இயற்கை தனது பணியை மீண்டும் தொடரும்.வேறு என்ன சொல்ல முடியும் ? 

இஸ்லாமிய அமைப்புகளின் சேவை:

கடந்த 2015-ஆம் ஆண்டு கனமழையின் போது அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் உடனடியாக மனிதநேய எண்ணத்துடன் வெள்ளப் பகுதிகளில் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகளை வழங்கினர்.

தற்போது 2023-ஆம் ஆண்டில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் தங்க இடம் இல்லாமலும், சாப்பிட உணவு இல்லாமலும் தவித்தனர்.

இஸ்லாமிய நெறிமுறைப்படி வாழும் முஸ்லிம்கள் இத்தகைய சூழலில், வேடிக்கை பார்க்காமல், உடனடியாக தங்களது வழக்கமான மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.

சென்னை பூவிருந்தவல்லி சுன்னத் ஜமாத் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், தங்கள் பள்ளிவாசலை திறந்து சாதி, மதம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் தங்க இடம் அளித்து இலவசமாக உணவு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்களின் இந்த மகத்தான பணி அனைத்து தரப்பு மக்களால் பாராட்டை பெற்றது.

இ.யூ.முஸ்லிம் லீக் உதவி:

இதேபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்கு நேரில் சென்று, உணவு, உடை, தண்ணீர், மருந்து ஆகியவற்றை இலவசமாக தந்து தங்களது அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.

இனியும் வேண்டாம் வெறுப்பு:

இந்தியாவில் குறிப்பிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்கள் மீது வேண்டும் என்றே வெறுப்பை காட்டி வருகின்றனர். அதை மற்றவர்கள் மீதும் வெறுப்பை விதைத்து வருகிறார்கள்.

முஸ்லிம்கள் இந்த நாட்டின் உண்மையான மைந்தர்கள் என்பதை மறந்துவிட்டு, அல்லது மறைத்து இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

இந்திய முஸ்லிம்கள் தங்களது தாய் நாட்டை நேசிப்பவர்கள். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அனைத்து துறைகளிலும் தங்களது உண்மையான பங்களிப்பு அளித்து வருபவர்கள் தான் முஸ்லிம்கள்.

இத்தகைய முஸ்லிம்கள் மீது இனியும் வெறுப்பு செலுத்தும் போக்கை இந்துத்துவ அமைப்புகள் நிறுத்திக் கொண்டு முஸ்லிம்களை தங்களது சகோதரர்களாக நினைத்து அரவணைத்து  கொண்டு நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். இனி வேண்டாம் வெறுப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: