Tuesday, April 2, 2024

நாடாளுமன்றத் தேர்தலும் முஸ்லிம்களும்...!

 நாடாளுமன்றத் தேர்தலும், தென்னிந்திய முஸ்லிம்களும்...!

நாடாளுமன்றத் தேர்தல் களம் கோடை வெயிலை விட, மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி, மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், முதல்கட்டத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் கொடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். 

இதேபோன்று, அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆதரவு திரட்டி வருகிறார். தனது தேர்தல் பிரச்சாதத்தின்போது, முதலமைச்சர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு கருத்தும், வாதங்களும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் இருந்து வருகிறது. மிகச் சிறப்பான பிரச்சாரம் மூலம் தமிழக மக்களின் மனதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்து வருகிறார். இதன்மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அமோக வாக்குககள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம்களின் நிலைப்பாடு:

18வது மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருந்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் முஸ்லிம்கள் மத்தியில் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் ஏராளம் என்பதை முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையின மக்களும் தற்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். 

எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை விட, யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாகவும், தெளிவாகவும் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிம் தங்களது வாக்குகள் பிரிந்து, சிதறி போவதால், அதன் பலன் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குச் சென்று சேர்க்கிறது என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிந்து இருக்கிறார்கள். 

தற்போது, நாடு எத்தகையை திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது? என்பதை படித்த சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, படிக்காத அப்பாவி மக்களும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை மிகவும் சிறப்பான முறையில் அவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

தென்னிந்திய முஸ்லிம்கள்:

கடந்த தேர்தலில், தென்னிந்திய மாநிலங்கள் மீது மிகப்பெரிய அளவுக்கு கவனம் செலுத்தாத பா.ஜ.க. தற்போது, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தென் மாநிலங்களில் இருந்து அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க. விரும்பி, அதற்கான செயல் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது. இத்தகையை சூழ்நிலையில், தென்னிந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உட்பட மற்ற சிறுபான்மையின மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க செய்வார்களா? என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டு இருக்கின்றன. 

ஐந்து தென்னிந்திய மாநிலங்களில், முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் வியப்பு அளிக்கும் வகையில் நன்கு இருந்து வருகிறது. கேரளாவில் 27 சதவீதமும், கர்நாடகாவில் 12.5 சதவீதமும், தெலுங்கானாவில் 12.7 சதவீதமும், ஆந்திராவில் 9.56 சதவீதமும், தமிழ்நாட்டில் 6 சதவீதமும் அளவுக்கு முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். 

தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களும், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயல்பட்டால், ஒன்றியத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதன்மூலம் ஆட்சி மாற்றத்தில் தென்னிந்திய முஸ்லிம்கள் முக்கிய பெரும் பங்கு வகிக்க முடியும்.

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு:

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தென்னிந்திய முஸ்லிம்களின் தேர்வு இந்தியா கூட்டணியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமல்ல, தங்களது வாக்குகள் சிதறிப் போகாமல் இருக்கும் வகையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்கும் மாநில கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இருக்க வேண்டும். அப்படி ஆதரவு அளித்தால், தங்களது வாக்குகள் வீணாகிவிடும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

தமிழகத்தில் உள்ள 6 சதவீத முஸ்லிம்களும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே தங்களது  வாக்குகளை ஒருங்கிணைந்து அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். இது தேசிய அளவில் அரசியல் படத்தை மாற்றும்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில், இங்குள்ள முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். கேரளாவில் உள்ள 27 சதவீத முஸ்லிம் மக்கள் அனைரும் 20 இடங்களும் ஒரே வழியில் சென்றால், தேசிய அளவில் அரசியல் படத்தை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.

தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ்,ஆகிய கட்சிகள்தான் முக்கிய அரசியல் கட்சிகளாக உள்ளன. பா.ஜ.க. மூன்றாவது இடத்திலும், ஏஐஎம்ஐஎம் நான்காவது இடத்திலும் உள்ளன. மாநில அரசியலில், தேசிய அளவில், முஸ்லிம்கள் பிராந்தியக் கட்சி விருப்பத்தைத் தவிர்த்துவிட்டு, தேசிய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவர காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும். தெலங்கானாவில் உள்ள 12.7 சதவீத முஸ்லிம்கள், ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும். சமீபத்தில் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, அக்கட்சியின் மறுமலர்ச்சியைக் காட்டுகிறது. 

வழிக்காட்டும் கர்நாடகா முஸ்லிம்கள்:

கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பா.ஜ.க.வை வீழ்த்தினர். சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது ஒரு வாக்கு கூட சிதறி போய்விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 

கர்நாடகாவில், 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12.91 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் பா.ஜ.க. ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. மாறாக, காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இருப்பினும், ஒற்றுமையுடன் வாக்களிப்பதன் மூலம், 28 மக்களவைத் தொகுதிகளில், 20 தொகுதிகளைப் பெற முடியும். இதன்மூலம் கர்நாடக மாநில முஸ்லிம் வாக்குகள், தேசிய மட்டத்தில் அரசியல் படத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

ஆந்திரப் பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு  மும்முனைப் போட்டி இருந்து வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் தேர்வு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசலா அல்லது இந்திய தேசிய காங்கிரசா என்ற கேள்வியாக இருந்து வருகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பா.ஜ.க.விற்கு ஆதரவான நிலைப்பாட்டில், இருந்தாலும், தனியே போட்டியிட்டு வருகிறார். எனவே, ஆந்திர மாநில முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த செயல் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

மறந்துவிடக் கூடாது:

18வது மக்களவைத் தேர்தல் என்பது, இந்தியாவில் வாழும் அனைத்து சமுதாயங்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களைப் பொறுத்தும், மிகவும் முக்கியமான தேர்தலாகும். தங்களது ஜனநாயக பலத்தை நிலைநாட்ட முஸ்லிம்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது. எனவே வாக்களிப்பதற்கு முன்பு கடந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்,செயல்பாடுகள், பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள் ஆகியவற்றை தங்கள் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, விழித்தெழுந்து, தங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியா கூட்டணிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும். தென்னிந்திய முஸ்லிம்கள் மட்டுமல்ல, வட மாநில முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் விழித்தெழுந்து செயல்பட வேண்டிய தேர்தல், இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. எனவே, வாக்கு நாளில் முதல் ஆளாக வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமும் கடமை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


No comments: