மத நல்லிணக்கம் - முஸ்லிம்களும் முத்துவலூர் துர்கா பகவதி கோவிலும்...!
* கோவிலின் திருப்பணிக்கு முஸ்லிம்கள் 38 லட்சம் நிதியுதவி
*இ.யூ.முஸ்லிம் லீக் மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறது
*கொண்டோட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்த தாழையூர் இந்துக்கள் இடம் அளித்து உதவி
* முத்துவலூரில் வெறுப்பு பேச்சுக்கு கொஞ்சமும் இடமில்லை
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மதத்தை அடிப்படையாக வைத்து, அரசியல் இலாபம் பெற முயற்சி செய்து வருகின்றன.
400 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவோம் என ஒருசில பா.ஜ.க. தலைவர்கள் கொக்கரித்து வருகிறார்கள். எனினும், தற்போதைய சூழ்நிலையில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200 இடங்களைப் கைப்பற்றுவதே கேள்விக்குறியாகி இருக்கிறது. இருந்தும் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை, தன்மையை, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளில் பா.ஜ.க. அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
பா.ஜ.க.வின் இந்த முயற்சிகளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு சிறிதும் இல்லை என்பதற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் மத நல்லிணக்கம் நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல எடுத்துக்காட்டை தான், நாம் இந்த கட்டுரையில் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறோம்.
முத்துவலூர் பகவதி கோவில்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி அருகேயுள்ள 430 ஆண்டுகள் பழமையான முத்துவலூர் துர்கா பகவதி கோயில், கேரள மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் மிகவும் பிரபலமாக பேசப்படும் புகழ்பெற்ற பழமையாக கோவிலாகும். இத்தகைய பழமையான கோவில் இந்து, முஸ்லிம் மக்கள் மத்தியில், மத நல்லிணக்கத்தை மேலும் மிளிரச் செய்து வருகிறது.
கோவிலின் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்கள், வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்கள், சவுதி அரேபியாவில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சுலைமான் ஹாஜி ஆகியோர் கோவிலின் திருப்பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்ற தாரளமாக நிதியுதவியை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து பெருமையுடன் கூறியுள்ள கோவில் நிர்வாகத்தினர், "அரை நூற்றாண்டு கால இடைவெளிக்கு பிறகு தற்போது கோவிலின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு முஸ்லிம்கள் நிதியுதவி அளித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் ஒத்துழைப்பு:
கோவிலின் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் மே மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை கோவிலில் சாமி சிலை நிறுவும் விழா நடைபெறுகிறது. இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற வேண்டும் என விரும்பிய முத்துவலூர் துர்கா பகவதி கோயில் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பாணக்காடு செய்யத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙளை சந்தித்து, முஸ்லிம் சமுதாயத்தின் ஆதரவு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், கோவிலின் தந்திரி பத்மநாபன் உன்னி, பாணக்காடு செய்யத் சாதி அலி ஷியாங் தங்ஙளை நேரில் சந்தித்து, தனது அன்பை வெளிப்படுத்தியதுடன், முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கோவிலுக்கு இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள தந்திரி பத்மநாபன் உன்னி, இ.யூ.முஸ்லிம் லீக் மிகச் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும், கோவிலிலின் சீரமைப்பு பணிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரர்கள் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
தந்திரி பத்மநாபன் உன்னி, முத்துவலூர் துர்கா பகவதி கோயிலுக்கு மட்டுமல்லாமல், மலப்பார் பகுதியில் உள்ள பல கோவில்களின் தந்தரியாகவும் இருந்து வருகிறார். இத்தகையை சூழ்நிலையில் அண்மையில் சினேகா சங்கமன் சார்பில், கோவில் வளாகத்தில் வரவேற்பு குழு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது பேசிய தந்திரி பத்மநாபன் உன்னி, கோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, அளித்த ஒத்துழைப்புகளை எடுத்துக் கூறி, மத நல்லிணக்கத்திற்கும், அன்பிற்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என பெருமிதம் தெரிவித்தார். "அன்பின் செய்தி" என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட தந்திரியின் இந்த உரை பின்னர், பி.கே.குஞ்ஞாலிக்குட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முஸ்லிம்களின் பங்களிப்பு:
முத்துவலூர் துர்கா பகவதி கோயிலுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் தொடர்ந்து அளித்துவரும் ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்களை, வரலாற்று ரீதியாக சுட்டிக் காட்டியுள்ள தந்திரி பத்மநாபன் உன்னி, இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்து வருவதையும் குறிப்பிட்டார்.
கொண்டோட்டியைச் சேர்ந்த முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக திருரங்கடி வரை நடந்து சென்று தங்களை வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்ததது. இதனால் பலர் தொழுகையை தவறிவிட வேண்டிய நிலை இருந்து வந்ததால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டோட்டி அருகே பள்ளிவாசல் அமைக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் விரும்பினர். எனவே, கோவிலின் உரிமையாளராக இருந்த தாழையூர் மூசாத்தை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர், உடனடியாக பள்ளிவாசல் உருவாக்க இடம் அளித்து தனது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக தற்போது பழையங்கடி பள்ளிவாசல் மிக கம்பீரமாக இருந்து வருகிறது என்ற தந்தரி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இதேபோன்று, பேசிய கோவில் குழுத் தலைவர் பி.சந்திரன், இந்த பகுதியில் வாழும் முஸ்லிம் சமுதாய மக்கள், கோவில் புரனமைப்புப் பணிக்கு 38 லட்சம் ரூபாய் வசூல் செய்து அளித்தாக கூறினார்.
வெறுப்புக்கு இடமில்லை:
நாட்டின் சில பகுதிகளில் வெறுப்பு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும், முத்துவலூரில் அதற்கு கொஞ்சமும் இடமில்லை என தாழையூர் குடும்பத்தைச் சேர்ந்த வினய ராஜ் அடித்துக் கூறுகிறார். முத்துவலூர் ஒரு மத நல்லிண்க்க பூமி என்பதை, அங்குள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அன்பும் சகோதரத்துவமும் எடுத்துக் காட்டுகிறது. அன்பு என்ற மொழியுடன் மனங்கள் இணைந்தால், வெறுப்புக்கும், வன்மத்துக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் இடமில்லை. முத்துவலூர் போன்ற மத நல்லிணக்கம் நாடு முழுவதும் மலர வேண்டும். அதுதான் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பலன் அளிக்கும்.
- சிறப்பு செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment