Saturday, April 6, 2024

கே.எம்.கே. உரை...!

நாட்டில் நல்லாட்சி அமைய புனித ரமலானில் துஆ கேட்போம்.....!

இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணி இஃப்தார் நிகழ்ச்சியில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு...!

சென்னை, ஏப்.06- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விழா சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் 05.04.24 அன்று நடைபெற்றது. இதில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேக்கர்பாபு, சிறுபான்மை நல வாரிய துணை தலைவர் இறையன்பன் குத்தூஸ்  சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

பாத்திமா வரவேற்பு:

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்ற மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் கட்டாயம் தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த தேர்தலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அவர், தேர்தல் வெள்ளிக்கிழமை வருவதால், பெண்கள் யாரும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும், அன்றைய தினம் தங்களது முதல் வேலையாக, வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

தலைவர் உரை:

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தல், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளை காக்கும் முக்கிய தேர்தல் என கூறினார். ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கேட்கும் துஆ நிச்சயம் நிறைவேறும் என தெரிவித்த பேராசிரியர், நாட்டில் நல்லாட்சி அமைய அனைவரும் ஏக இறைவனிடம் துஆ கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

இஸ்லாத்தில் நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத்,. ஹஜ் ஆகிய ஐந்து கடமைகள் இருப்பதை நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். இதேபோன்று, ஆறாவது கடமையாக கருதி, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்த ஆறாவது கடமையை முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

நாட்டில் முஸ்லிம்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் நல்லாட்சி அமைய வேண்டுமானால், ஒவ்வொருவரின் வாக்கும் மிகவும் முக்கியமானது. எனவே, முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையின மக்களும் தங்களது ஜனநாயகக் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் நாளில், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்த வேண்டும். இதன்மூலம், அவர்கள் தங்களது ஆறாவது கடமையை நிறைவேற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தங்களுக்கும், நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் அவர்கள் சேவை ஆற்ற முடியும். எனவே, தாங்கள் வாக்கு அளிப்பதுடன் மற்ற சகோதரிகளையும் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, எல்லோரையும் வாக்குச்சாவடிக்குச் செல்லும்படி செய்ய வேண்டும். 

மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால், யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. தங்களது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தை மாற்ற தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும். 

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். 

நிகழ்ச்சியில் இ.யூ.முஸ்லிம் லீக் மகளிர் அணியைச் சேர்ந்த ஏ.எம்.ஜெய்தூன், வழக்கறிஞர் ஆயிஷா, திமுக எழும்பூர் தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம்,  திமுகவின் தமிழன் பிரசன்னா , இளம்சூருதி, பெரியமேட் சுதாகர்,‌மொய்தீன்,‌ ரசூல் பாய், வக்ஃபு வாரிய உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக  மாவட்ட வட்ட பகுதி பொறுப்பாளர்கள், கூட்டணி இயக்க பொறுப்பாளர்கள்,இ.யூ.முஸ்லிம் லீக் மாநில மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள், மகளிர் அணி தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் மகளிர் அணி நிர்வாகிகள் அன்புடன் வரவேற்பு உபசரித்தனர். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: