Wednesday, December 11, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (12)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 12



திரைப்படங்களில், மது அருந்துகிற காட்சிகளை வைக்காதீர்கள் !

இயக்குநர்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் !!

திரைப்படங்களில் மது அருந்துகிற காட்சிகளை வைக்காதீர்கள் என திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மது இருந்தும் காட்சிகளை வைத்தால் வரிவிலக்கு கிடைப்பதில்லை என்றும்  தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றும்  கே.ராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி–அமலாபால் ஜோடியாக நடித்து, சமுத்திரக்கனி டைரக்டு செய்துள்ள  ‘நிமிர்ந்து நில்.’ . படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில், பட அதிபர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சில பரபரப்பான தகவல்களை அவர் வெளியிட்டார்.

‘கடந்த 10 நாட்களாக தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சில படங்களில் மது அருந்துகிற காட்சிகளும், கவர்ச்சி காட்சிகளும், ஆபாச வசனங்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளதாக கே.ராஜன் கூறினார்.

இதுபோன்ற படங்களுக்கு எல்லோரும் பார்க்க தகுந்த வகையில், ‘யு’ சான்றிதழ் தரப்படவில்லை என்றும்,  ‘யு ஏ’ சான்றிதழ் தரப்பட்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 ‘யு ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது என்றும் ராஜன் கூறினார்.

மது அருந்தும் உள்ளிட்ட காட்சிகளை வைத்து சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை வைத்து விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார் ராஜன்.


தணிக்கையிலும் பிரச்சினையாகி, வரிவிலக்கு கிடைப்பதில்லை என்று கூறிய அவர், அதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள் என்றார்.

டைரக்டர்கள் கதை–வசனம் எழுதி, படத்தை டைரக்டு செய்யும்போது, தணிக்கைக்கு உட்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டும் என்று ராஜன் கேட்டுக் கொண்டார்.

தாய்மார்களும், இளைஞர்களும் மனஅழுத்தத்துக்கு ஆளாகாதபடி தரமான படங்களை எடுத்து தந்தால், தயாரிப்பாளர்கள் லாபம் அடைவார்கள் என்று கூறிய கே.ராஜன்,  டைரக்டர்கள் மனது வைத்தால்தான் இது நடக்கும் என்றும் தெரிவித்தார்.

திரைப்படத்துறையில் இருக்கும் ஒரு தயாரிப்பாளர், மதுவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கிறார்.

ஆனால், நமது தமிழ்பட இயக்குநர்களோ, மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை தங்களது திரைப்படங்களில் வைத்து இளைஞர்களை சீரழித்து கொண்டிருக்கிறார்கள்...

இது நியாயமா என்பதுதான் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களின் கேள்வி....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: