" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 7
மக்களின் உணர்வுகளை மதித்து மதுக்கடைகளை மூட வேண்டும்!
டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்...
தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்திருக்கிறது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் (04.12.2013) வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் இல்லாத ஊர்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவில் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது என புகார் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாலும், உயர்நீதிமன்ற தலையீடுகளாலும் ஏராளமான மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில் தான் இப்படி ஓர் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்றும் அரசின் இந்த உத்தரவு முற்றிலும் தவறானதாகும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அகற்றும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மதுக்கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் இன்றும் செயல்பட்டு வரும் நிலையில் எந்த மதுக்கடையையும், எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத செயலாகும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது? என்பது குறித்து அந்த உத்தரவில் விளக்கமளித்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சவுண்டையா, மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார் என்றும், மதுக் கடைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல்நலக் கேடுகள், சாலை விபத்துக்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். அதிக வருவாய் ஈட்டுவது மட்டும் தான் அரசின் நோக்கம் என்பது இந்த உத்தரவில் இருந்து தெளிவாகிறது என்று தெரிவித்துள்ள ராமதாஸ், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் மதுவணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்களைக் கொடுத்தாலும் அதனால் சமூகத்திற்கு பயன் ஏற்படப் போவதில்லை என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் சில வாக்குகளை வேண்டுமானால் வாங்கலாமே தவிர, மக்களின் வாழ்த்துக்களை ஒரு போதும் வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுவின் தீமைகளால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மது அரக்கன் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மதுக்கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதை விட்டுவிட்டு, மக்களின் உணர்வுகளை மதித்து அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொகுப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
================================
No comments:
Post a Comment