Wednesday, December 25, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! ( 28 )

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"  நாள்: 28 



மது குடித்து வீட்டு ஆட்டோ ஓட்டும் டிரைவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை...!

சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு மூலக்காரணமாக மது இருந்து வருகிறது..

மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களால், பல அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.

மது அருந்தி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் மீது காவல்துறை பல நடவடிக்கைகள் எடுத்தாலும், மது அருந்துவதை ஏனோ, டிரைவர்கள் நிறுத்துவதில்லை.


இதனால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது...

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை மாநகர காவல்துறை ஓர் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, இனி, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த பல மாதங்களாக அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கண்காணிப்பு பணியின்போது, வாகனங்களை மறித்து சோதனை செய்யும் போலீசார், வாகன ஓட்டிகள் மது அருந்தி இருக்கிறார்களா என்றும் சோதனை செய்கின்றனர்.


குறிப்பாக, ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டும் பல ஆட்டோ டிரைவர்களால் அப்பாவி பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தடுக்கும் நோக்கில் தற்போது போலீசார், கடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

முக்கிய இடங்களில் சோதனை நடத்தும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தால், அவர்களுக்கு அபாரதம் விதித்து வருகின்றனர்.

தற்போது இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், மது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



மது அருந்தி ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் குறித்து புகார் அளிக்க பயணிகள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளதாகவும், புகார் அளிக்கும் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என கூறியுள்ள சென்னை மாநகர காவல்துறை, மதுவுக்கு எதிராக புதிய நடவடிக்கை எடுத்து இருப்பது பாராட்டத்தக்கது என்றே கூறலாம்..

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: