Saturday, December 14, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (17)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 17


தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறந்துவிட்டு, மது குடித்தால் தவறு என கூறுவதா?''  !

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி !!

நடிகர், அரசியல் கட்சித் தலைவர், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என பல பொறுப்புகளில் இருப்பவர் விஜயகாந்த்...

மனதில் பட்டதை மட்டுமே பேசக்கூடியவர்.. அப்படிதான் அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மது அருந்துவது குறித்து அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் பேசியதாக தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை முதலில் பார்ப்போம்..

நான், மது குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர். தவறை எல்லாம் இவர்களே செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறந்துவிட்டு, மது குடித்தால் தவறு என கூறுவதா?'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


விஜயகாந்த்தின், இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், கதாநாயகனாக அறிமுகமாகும், "சகாப்தம்' திரைப்பட துவக்க விழா, சென்னை, விருகம்பாக்கத்தில்  நடந்தது. இவ்விழாவில், விஜயகாந்த் பேசியதாவது:

நான் எதற்கும் பயப்படுவது கிடையாது. அதற்காக, கண்மூடித்தனமாக இருக்க மாட்டேன். எதற்கு பயப்பட வேண்டும்; எதற்கு பயப்படக் கூடாது என்பதை பார்த்து, செயல்படுவேன்.

நான் ஏதாவது பேசினால், பக்கத்திலேயே உட்கார்ந்து கேட்டது போல், கண், காது, மூக்கு வைத்து, பத்திரிகைகளில் எழுதி விடுகின்றனர்.

நான் மது குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர். தவறை எல்லாம் இவர்களே செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர்.


குடித்தால் என்ன தவறு? தமிழகம் முழுவதும், மதுக்கடைகளை இவர்கள் தான் திறந்து வைத்துள்ளனர்.

நான் மனதில் பட்டதை மட்டுமே பேசுவேன். கட்சியை வளர்ப்பது மட்டுமே என் பொறுப்பு. கட்சியை வளர்க்க நான் படும்பாடு, எனக்கும், என் தொண்டர்களுக்கும் மட்டுமே தெரியும்.

தொண்டர்களை மட்டுமே, நான் உரிமையோடு திட்டுவேன்; அடிப்பேன். மற்றவர்களை, அடிக்க மாட்டேன். வீட்டில் யாராவது தவறு செய்தால் அவர்களை உரிமையோடு அடிப்பது இல்லையா? அதுபோலத் தான் என் தொண்டர்களை அடிக்கிறேன்.

தவறு செய்தால் தான் கோபம் வரும் என்பது, அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில், கோபப்பட்டால், அதை அரசியல் நாகரிகம் இல்லை என்கின்றனர்.


இப்படி சொல்லி, சொல்லி தான் தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையே பல அரசியல்வாதிகள் ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

கடந்த 13.12.13 தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியைதான் நீங்கள் மேலே படித்தது.

மது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விஜயகாந்த் பேசி இருக்கிறார்.

தான் மது குடிப்பதற்கு அரசுதான் காரணம் என குற்றம் சாட்டுகிறார் விஜயகாந்த்..

அவருடைய குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது..


தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி என அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, மது குடிக்காதே...அது உடலுக்கு கேடு என அறிவுரை கூறினால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா...

மது உடலுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிறது அரசு...

ஆனால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கின்றன...

மது விற்பனையின் இலக்கு அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன...

இந்நிலையில், மதுவை குடிக்காதே என்றால் யார் கேட்பார்கள்...


தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை...

இனி அரசுதான் யோசிக்க வேண்டும். மதுக்கடைகளை மூட முயற்சிக்க வேண்டும்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: