Wednesday, December 18, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்...! (20)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்...! "

நாள்: 20



மதுப்பழகத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து,  இது மேட்டுக் 'குடி' பிரச்சினை அல்ல!  என்ற தலைப்பில் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரையில் பல சுவையான தகவல்கள் உள்ளன.

அதில் இருந்து ஒருசில பகுதிகள் இதோ உங்கள் பார்வைக்கு....

“மீடியாவுக்கு வந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நான் இது வரை ஒரு சொட்டு குடித்ததில்லை!” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவுரை செய்தார் ஒரு நடிகர். குடி உடலையும் மனதையும் பலவீனப்படுத்தி தவறான முடிவுகள் எடுக்க வழி வகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதி காலம் முதல் மனிதன் போதையைத் தேடிப் போயிருக்கிறான். அதன் நுகர்வு, பின் வணிக, அரசியல், கலாசார, பண்பாட்டுத்தளங்களில் மனிதக்கூட்டத்தை பாதித்துக் கொண்டே இருக்கிறது.

மிக இளம் வயதில் படிப்பு காரணமாக குடியினால் ஏற்படக்கூடிய சகல மன/வாழ்வியல் நோய்கள் பற்றி அறியவும் சிகிச்சை அளிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நிம்ஹான்ஸ் காலத்தில் டாக்டர்கள், மற்றும் இதர சிகிச்சையாளர்களும் குடிப்பது முதலில் அதிர்ச்சியாய் பட்டது. Detoxification-ஐ தொழில் முறையாக தினம் செய்யும் டாக்டர்கள் பலர் இரவில் குடிப்பது சகஜம் என அறிந்தேன்.


பிற்பாடு ஹெச்.ஆர் சேர்ந்த காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராமைக்கு குடியும் மிகப்பெரிய காரணம் எனத் தெரிந்தது. சம்பள நாளில் மனைவிகள் வாசலுக்கே வந்து காத்திருப்பதையும், இவர்கள் மாற்று வழியில் தப்பிப் போவதையும் பார்த்திருக்கிறேன். அங்கும் வேலைக்கு வராத நிரந்தர தொழிலாளர்களை அழைத்து கவுன்சலிங் செய்வார்கள். இங்கும் உயர் நிலை மேலாளர்கள் குடிப்பது சகஜம். பல கார்ப்பரேட் விருந்துகளில் மது தவிர்க்க இயலாத அங்கம்.

சினிமாவில் நாயகன் குடித்தால் கீழே பொடி எழுத்துகளில் அறிவுரை செய்கிறார்கள். தவிர இன்று குடிக்காத கதாபாத்திரங்கள் குறைவு. அரசின் “முகேஷ்” விளம்பரம் வந்தவுடன் இளைஞர்கள் கை தட்டி சிரிப்பது கொடூர நகைச்சுவை. ஒரு விளம்பரம் எப்படி எதிர் வினையாக அமையக்கூடாது என்பதற்கு இதை விஷுவல் மீடியாவில் பாடமாகச் சேர்க்கலாம்.


அரசாங்கம் கடை விரித்து வியாபாரம் செய்கிறது. குடிப்பவனை கம்பி ஜன்னலில் வெளியே நிறுத்தி அசிங்கப்படுத்துகிறது. ரோட்டை கடந்தவுடன் போலீஸ் பிடிக்கிறது. என் மாணவன் ஒருவன் கேட்டான், “இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு போலீஸ் ஒவ்வொரு கடையிலும் நின்று வண்டியில் வருபவரை பிடிக்கலாமே?”

இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம் சமூகம் குடிப்பவரை விட அதிகம் குழம்பிப் போயிருக்கிறது என்றே தோன்றுகிறது!


தொழிற்சாலைகள் ஆண் தொழிலாளிகளை விட பெண் தொழிலாளிகளை நியமிக்க பல காரணங்கள உண்டு. உலகம் முழுவதும் பெண்களுக்கு ஆண்களை விட சம்பளம் குறைவு. எல்லா இடங்களிலும் இந்தக் கொடுமை நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்து வருகிறது.

பெண் பொறுமைசாலி. நிதானம் இழக்கமாட்டாள். சிக்கனமானவள். தவறாமல் பணிக்கு வருவாள். வேலையை பாதிக்கும் எந்த பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டாள். இன்று கைத்தறி, ஆடை அணிகலன், மருந்து முதல் ஆட்டோமொபைல் வரை பெண்கள் தான் பெரும்பான்மை.

குடும்பத்திற்கு பெண் மூலம் வருமானம் உறுதியாகிறது. ஒப்பந்தக் கூலியாக அங்கும் இங்கும் அலைந்த ஆண்கள் ஒரு காலத்தில் வீட்டிலேயே முடங்க ஆரம்பிக்கிறார்கள். மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இப்போது நேரம், பணம், சுதந்திரம் அனைத்தும் கிடைக்கிறது.

10 ஆண்டுகளில் பெண்கள் பதவிகளில் முன்னேறி பண வசதியுடன் அந்தஸ்துடன் வளைய வரும் போது இவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் சிறு வேலைகள் (அமைப்பு சாராத் துறைகளில்) செய்து பெரும்பாலும் குடிக்கு அடிமையாகின்றனர். பிறகு மனைவியின் மீது சந்தேகம், தாம்பத்திய உறவில் சிக்கல், குடும்பத்தில் மரியாதைக் குறைவு, தற்கொலை எண்ணங்கள்/ முயற்சிகள் என்று பயணிக்கிறார்கள். தவிர கூடா நட்புகள் குற்றங்களுக்கு இட்டுச் சென்ற கதைகளும் உண்டு.

இந்த விரிசல்களில் அவர்கள் பிள்ளைகளின் மன நலத்திற்கும் பாதிப்புகள் வருகின்றன.


தமிழ் நாட்டில் ஆண் தொழிலாளிகள் இல்லை என்று வட மாநில ஆட்களை அழைத்து வருவது தீர்வு அல்ல. நாம் சரியாக பயன்படுத்தத் தவறிய ஆண்கள் வேலைக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனற்றுப் போவார்கள். பின்னர் இதைச் செய்த சமூகத்திற்கு எதிராக திரும்புவார்கள். மதுவிற்கு அடிமையாவது இந்த எதிர்ப்புக்கு வலு சேர்க்கும்.

“தமிழகத்தில் குடிப்பழக்கம் 15 வயதில் 10ம் வகுப்பு படிக்கையில் துவங்குகிறது” என்கிறார் மது சிகிச்சை நிபுணர்/ சமூக ஆர்வலர் சாந்தி ரங்கனாதன்.

ஆசிரியரும், மருத்துவரும், மேலாளரும், அரசாங்க அதிகாரியும் அளவாய் குடித்து விட்டு அதிக பாதிப்பு வராமல் தப்பிக்கலாம். தொழிலாளர்களும் மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளனர்.

நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ் (19.12.2013)

தொகுப்பு:  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

No comments: