Sunday, December 22, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (25)

மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! " 

நாள் : 25

மதுவால் அதிகரிக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே போகிறது...

தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் பல மாநிலங்களிலும் மது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே அதன் தகவல்கள் உங்கள் பார்வைக்கு.....

மதுவிலக்கு வழக்குகளில் இந்த ஓராண்டில் 3,800 பேர் கைது.....!

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மதுவிலக்கு வழக்குகளில் 600 பெண்கள் உள்பட 3800 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட காவல் ஆணையர் செ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் காஞ்சீபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், வெளி மாநில பிராந்தி பாட்டில்கள் விற்பனை செய்தல், மதுபான கடைகளுக்கு அருகாமையில் உள்ள பார்கள், மற்றும் கிராமங்களில் அல்லது பெட்டி கடைகளில் பிராந்தி பாட்டில்கள், விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் எந்த நேரத்திலும் மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் சூப்பிரண்டு செல்போன் எண் 9445465400 -க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

தகவல் தருபவர்கள் பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்றும் மேலும் தகவல் தருபவர்களுக்கு தக்க வெகுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


இந்த மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் டிசம்பர் வரை ரூ.68 லட்சம் எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை அதிகாரி,  இதையொட்டி 600 பெண்கள் உள்பட 3,800 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் மதுவிலக்குகளில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இதில் மினி லாரி ஒன்று, கார் 10, ஆட்டோ 5, மோட்டார்சைக்கிள்கள் 55 ஆகும். இதில் 43 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ.20 லட்சத்து 32 ஆயிரத்து 41 வருமானம் கிடைத்துள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.


மீதியுள்ள வாகனங்கள் விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மதுவிலக்கு போலீசார் மாவட்டத்தில் 843 கேன்களில் 29 ஆயிரத்து 527 லிட்டர் எரிசாராயமும், 33 ஆயிரத்து 997 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

மொத்தம் ரூ.67 லட்சத்து 47 ஆயிரத்து 470 பெறுமான எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.


கள்ளச்சாராய வழக்கில் திருந்திய 37 பேருக்கு தமிழக அரசு ரூ.10½ லட்சம் நிதியுதவி அளித்துள்ளது என்றார் காவல் ஆணையர்.

மேலும் கள்ளச்சாராய வழக்கில் திருந்திய 22 பேருக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வந்துள்ளதாகவும்,  விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மதுவிலக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் 42 பேரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தலா ஓராண்டு சிறையில் இந்த ஆண்டு இதுவரை அடைத்துள்ளதாகவும்,  இதில் 12 பேர் பெண்கள் என்றும் அவர் தகவல்களை அள்ளி வீசினார்.

தமிழ்நாட்டிலேயே காஞ்சீபுரம் மாவட்டத்தில்தான் கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தின் கீழ் 42 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளதாக  போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் கூறினார்.


ஆக, மதுவால் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது... போலீசாருக்கு மிகப் பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

போலீசாருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கு மதுவால் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம்...அதனால் வரும் வழக்குகளின் எண்ணிக்கை தாராளம் எனலாம்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: