Wednesday, December 11, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (13)

 " மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! "  நாள்: 13


மதுப்பழகத்தால், கொலை, கொள்ளை, விபத்து ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே...


தினசரி நாளிதழ்களில் மது அருந்தி, போதையில் கொலை செய்த சம்பவங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்துக் கொண்டிருக்கின்றன.

மதுப்பழகத்திற்கு ஆளானவர்கள், இதைப்படித்தாவது தங்களை நல்ல பாதையில் திருப்பிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை காரணமாக  அந்த செய்திகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

(1)
சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜெயசீலன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். ஜெயசீலன் . போதையில் வந்து அடிக்கடி சண்டை போடுவார். இதனால் அவரது மனைவி குழந்தையோடு சொந்த ஊருக்கு போய்விட்டார். ஜெயசீலன் போதையில் வந்து தனது அண்ணனிடமும், அண்ணியிடமும் சண்டை போட தொடங்கினார்.


இதனால் அண்ணி வெண்ணிலா ஜெயசீலனுக்கு சாப்பாடு போட மறுத்துவிட்டார். மேலும், வீட்டை விட்டு வெளியேறுமாறும் கூறிவிட்டார். ஜெயசீலன் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். என்னை வீட்டை விட்டு வெளியேற்றிய உன்னை, கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று ஜெயசீலன் கடந்த வாரம் வெண்ணிலாவிடம் சபதம் போட்டுவிட்டு சென்றார்.


6.12.13 பிற்பகல் 3 மணி அளவில் வெண்ணிலா வீட்டில் தனியாக இருந்தார். காய்கறி வாங்கிவிட்டு வந்து சமையல் செய்ய ஆரம்பித்தார். அப்போது கையில் அரிவாளுடன் வந்த ஜெயசீலன் வெண்ணிலாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த வெண்ணிலா சற்று நேரத்தில் பிணமாகிவிட்டார். ஜெயசீலன் தனது சபதத்தை நிறைவேற்றிய வெறியோடு தப்பி ஓடிய ஜெயசீலன் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

=======================

(2)
காரைக்குடி தீர்த்தளைகாடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, புதுவை முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த உறவினர் தினேஷ்குமார் இங்கு தங்கி வேலை செய்தார். இவருக்கு திருமணமாகவில்லை. ஆட்டோக்களுக்கு பர்மிட் வாங்கி கொடுக்கும் புரோக்கர் வேலையும் பெரியசாமி செய்து வந்தார்.

உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலியமூர்த்திக்கு பர்மிட் வாங்கி தந்துள்ளார். இதற்கு அதிக பணம் வாங்கியதாக பெரியசாமியிடம் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த  6.12.13. அன்று குடிபோதையில் பெரியசாமி ஓட்டலுக்கு வந்த கலியமூர்த்தி தகராறில் ஈடுபடவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.


ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி, கத்தியால் பெரியசாமியை வெட்டினார். அவருக்கு கை, காலில் கத்திவெட்டு விழுந்து கூச்சலிடவே, சப்ளையர் தினேஷ்குமார் ஓடி வந்து தடுத்தார். அவரையும் வயிற்றில் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் தினேஷ்குமார் கீழே சரிந்ததும் அங்கிருந்து கலியமூர்த்தி தப்பி ஓடிவிட்டார். போலீசார் வந்து இருவரையும் மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தினேஷ்குமார் இறந்தார். பெரியசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

===========================

(3)
செங்கல்பட்டு தட்டான் மலைத்தெருவை சேர்ந்தவர் அன்வர் பாஷா. இவரது மகன் அப்துல் நவாப்  இவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்து வாடகை கார் ஓட்டி வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு அய்யப்பன் கோவில் அருகேயுள்ள மதுபான பாரில் நவாப் மது அருந்திக்கொண்டிருந்தார். அவரது அருகே செங்கல்பட்டு காத்தான் தெருவை சேர்ந்த சரவணன். ஆத்தூரை சேர்ந்த மகேஷ். ஆகியோரும் மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தண்ணீர் பாக்கெட், டம்ளர் வாங்குவதில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன். மகேஷ் ஆகியோர் சேர்ந்து அப்துல் நவாப்பை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் நிலை குலைந்து போன அப்துல் நவாப் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த அப்துல் நவாப்பை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரவணன், மகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


===========================

(4)

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமனந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விவசாயி செந்தாமரை. இவரது மனைவி காமாட்சி. மகள் பெயர் சங்கீதா.  திருப்பதி . என்ற மகனும் இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்தார்.

விவசாயி செந்தாமரைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார். வழக்கம்போல கடந்த 9.12.13 அன்று இரவும், செந்தாமரை குடிபோதையில் தகராறு செய்தார்.

அப்போது மகள் சங்கீதா தந்தையை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தாமரை வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, அதன் பின் பகுதியால் சங்கீதாவை தாக்கினார். இதில் சங்கீதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மகன் திருப்பதி, தந்தையுடன் தகராறு செய்தார். மேலும் ஆத்திரம் அடைந்த செந்தாமரை துப்பாக்கியால் மகன் திருப்பதியை நோக்கி சுட்டார்.

இதில் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த திருப்பதியின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. சம்பவத்தை தொடர்ந்து செந்தாமரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

===============================

தொகுப்பு: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=================================

No comments: